Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைபோலி ஜனநாயகமும் தாலி ஜனநாயகமும் !

போலி ஜனநாயகமும் தாலி ஜனநாயகமும் !

-

தேர்தலுக்கும்
திருமணத்திற்கும்
தெரிவதில்லை வித்தியாசம்
இரண்டுமே
எந்த சாதியில்
என்பதில் தொடங்குகிறது.

என்ன சொத்து இருக்கு?
எவ்வளவு கையில…
எவ்வளவு செலவு செய்வ?
என்று
வர்க்கம் பார்த்துதான்
நிச்சயிக்கப்படுகிறார்கள்
வேட்பாளர்களும்
மணமக்களும்

ஜாதகம், சாதகம்
இரண்டும் பார்த்தாலும்
மூலதனப் பொருத்தமில்லாதவர்க்கு
கட்சியிலும் சீட்டு இல்லை
கல்யாணத்திலும் சீட்டு இல்லை

பந்தக்காலு
வேட்புமனு தாக்கல்
இரண்டுமே நல்லநேரம்
ஏமாந்தவர்களுக்கு கெட்டநேரம்

பொதுக்கூட்ட மேடைக்கு
பூமி பூஜை
பொண்ணு மாப்பிள்ளைக்கு
சாமி பூஜை
கூட்டணிக் கொள்கை
குடும்பக் கொள்ளை!

“கெட்டி மேளம் கெட்டி மேளம்
ஓட்டு… ஓட்டு…”
மாட்டிக் கொண்டவர்களுக்கு
இனி பேச்சுக்கு வழியில்லை
கல் ஆனாலும் கணவன்
சாராயமானாலும் அரசு!
இரண்டுமே வாழும் கலை!

மச்சான் மோதிரத்தை
மாட்டிகிட்டு,
மாமனார் வண்டியை
ஓட்டிகிட்டு,
நகை நட்டோட
பெண்ணைக் கூட்டிகிட்டு
ஓசியில் வாழும் மாப்பிள்ளைக்கு
உறுத்துவதில்லை தகுதி

மக்கள் பணத்தை
தாட்டிக்கிட்டு
மாமூலாக கமிஷனை
வாங்கிக்கிட்டு
லஞ்சப் பணத்தை சேர்த்துக்கிட்டு
ஊழலில் வாழும் வேட்பாளர்க்கு
உறுத்துவதில்லை தொகுதி!

போலி ஜனநாயகத்திற்கு
புனிதம் கூட்ட தேர்தல் ஆணையம்,
தாலி ஜனநாயகத்திற்கு
புனிதம் கூட்ட சடங்கு சாஸ்திரம்
தேர்தலுக்கு முன்புவரை
கறக்கும் படை,
தேர்தல் நேரத்தில்
பறக்கும் படை!
திருமணத்திலும் இதுதான் நிலை!

வாழ்வைப் பறிகொடுத்த பின்புதான்
மணமக்களுக்கும் வாக்காளர்களுக்கும்
வருகிறது ஞானம்;
“தேர்தல் ஒரு அரசியல் ஊழல்,
திருமணம் ஒரு பண்பாட்டு ஊழல்”!

– துரை சண்முகம்