privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசாராயக் கடைக்கு ஆதரவாக இந்து முன்னணி, கிறிஸ்தவ அமைப்புகள்

சாராயக் கடைக்கு ஆதரவாக இந்து முன்னணி, கிறிஸ்தவ அமைப்புகள்

-

1. சாராயக் கடைக்கு ஆதரவாக இந்து முன்னணி, கிறிஸ்தவ அமைப்புகள்

“கன்னியாகுமரி மாவட்டம்  பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே இருக்கும் இரு டாஸ்மாக் கடைகளை உடனே மூட” வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்புகள் சார்பாக 12-04-2016 அன்று மேற்குறிப்பிட்ட கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் சாதி, மதம், ஊர் வேறுபாடு கடந்த உழைக்கும் மக்களாய் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையின் கீழ் நடந்த வீரமிகு போராட்டம்.

kumari-hindu-munnani-tasmac-3போராட்டத்திற்கு முந்தைய நாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பல வழிகளில் தடுக்க முயற்சி செய்தனர். அதையும் கடந்து மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தினரை கைது செய்து போலீஸ் காவலில் வைத்திருந்த போது கைதாகியிருந்த பெண்களையும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக திரண்ட பெண்களையும் எப்படியாவது கலைந்து செல்ல வைக்க வேண்டுமென்று அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக கிறிஸ்தவ பாதிரியார்கள் செயல்பட்டனர். இவர்களையும் மக்கள் அம்பலப்படுத்தி விரட்டியடித்தனர்.

அரசாங்கம், போலீஸ், அரசியல் கட்சிகள், தேர்தல் இவை எதுவும் டாஸ்மாக்கை மூடாது என்று விளக்கி போராட்டத்திற்கு முன்பு ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்ததன் விளைவே பெண்களின் இந்த வீரமிக்க போராட்டம். மக்கள் அதிகாரம் தலைமையிலான இந்தப் போராட்டம் அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும், போலீசையும் மட்டும் கலக்கம் அடையச் செய்யவில்லை. இதுநாள்வரை அரசியல் செய்து வந்த உள்ளூர் பிழைப்புவாத அரசியல்வாதிகளையும் கலக்கமடையச் செய்துள்ளது.

பேயன்குழி இந்து நாடார்கள் வாழும் ஊர் – இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்தும் ஊர். நுள்ளிவிளை கிறிஸ்தவ நாடார்கள் வாழும் ஊர். இரு ஊர்களிலும் ஒரே சாதியினர் வாழ்வதாலும் வாழ்க்கைத் தரத்தில் சமநிலையில் இருப்பதாலும், இரு ஊர்களிலும் பலரும் ஒருவருக்கொருவர் உறவினராக உள்ளனர். இரு ஊர்களிலும் தொழில் செய்பவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்தே உள்ளனர். ஆனால், இரு ஊர்களுக்குமான எல்லையை பிரித்துக் கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகின்றது. இதனால் பல கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

kumari-hindu-munnani-tasmac-2
போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களை அச்சுறுத்தும் விதமாக

பேயன்குழி – நுள்ளிவிளை பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் இந்தக் கடைகளுக்கு அருகில் ஏராளமான பெட்டிக் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. குடிகாரர்களின் வருகையாலேயே இந்தக் கடைகளில் வியாபாரம் நடைபெறுகின்றது.  பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் தலைமையில் நடந்த வீரம் செறிந்த போராட்டம் பேயன்குழு ஊர்மக்கள் உள்ளிட்ட சுற்றுப்புற 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த நம்பிக்கை டாஸ்மாக் கடையை நம்பி பொழைப்பு நடத்தும் வியாபாரிகளுக்கும், பிழைப்புவாத உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசால் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து பேயன்குழி-நுள்ளிவிளையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் மூட அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என்று பத்திரிகையில் செய்திகள் வெளி வந்தன. பின்னர் 500 கடைகளில் இந்தக் கடைகளை மூடாதபோது, டாஸ்மாக் மேலாளர் ஜூன் 20-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்து தருகின்றோம் என்று உத்தரவாதமாக எழுதிக் கொடுத்தும் இந்தக் கடைகள் மூடப்படாதது ஏமாற்றமளிக்கின்றது என்று கூறி மேலாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தையும் இணைத்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. போராட்டத்தின் வலிமையை இந்தப் பத்திரிகை செய்திகளும் உணர்த்தின.

இந்துக்களின் நலன் ஒன்றே எங்கள் கொள்கை என்று இந்துக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை சீர்குலைக்கும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளன. 500 கடைகள் மூடப்பட்ட அன்று பேயன்குழி – நுள்ளிவிளை கடைகள் மூடப்படாததை கடைகள் முன்பு வெடி வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர் சில மக்கள் எதிரிகள். இவர்களின் பின்னணியில் இயக்கியது மேல்குறிப்பிட்ட நபர்களே.

kumari-hindu-munnani-tasmac-1
“டாஸ்மாக் கடை எங்கள் ஊரில்தான் உள்ளது” என்று பெருமையாக அறிவிக்கிறது இந்து முன்னணி

கணவனும், மகனும் குடிக்கு அடிமையாகி அதனால் குடும்பம் சீரழியக் காரணமான இந்தக் கடை எப்படியாவது மூடப்படாதா? என்ற ஏக்கத்தில் வாழும் ஏனைய கிராமப் பெண்களைப் போலவே பேயன்குழி பெண்களும் உள்ளனர். பெண்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஆண்களும் கடை மூடப்படுவதை எதிர்பார்த்தே உள்ளனர்.

மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு என்று, இந்து மற்றும் கிருத்துவ அமைப்புகள் போலீசுடன் இணைந்து பிரச்சாரம் செய்து மக்களிடம் அது எடுபடாமல் போனது. டாஸ்மாக்கை மூடச் சொல்லும் அமைப்பு என்றால் ஏன் தீவிரவாத அமைப்பு என்கிறீர்கள் என்று எதிர்கேள்வியும் மக்கள் கேட்கின்றனர். மேலும் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு முழுவதும் நடத்தும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றியும் இப்பகுதி மக்கள் அறிந்திருக்கின்றனர். இனிமேலும் மக்கள் அதிகாரத்தைப் பற்றி அவதூறு பரப்பி மக்களை போராடாமல் தடுக்க முடியாது என்று புரிந்து கொண்ட இந்து முன்னணியினர் இந்து-கிறிஸ்தவ, பேயன்குழி -நுள்ளிவிளை எல்லை பிரச்சனையை கையிலெடுத்து மக்களை திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் டாஸ்மாக் போராட்டத்தை திசைதிருப்பி அரசாங்கத்தின் பக்கமும் நிற்கலாம் எனவும் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டதிதன் மூலம் லேசாக மங்கத் தொடங்கிய இந்து – கிறிஸ்தவர், நுள்ளிவிளை – பேயன்குழி எல்லைப் பிரச்சனைக்கு உயிர் கொடுத்து தங்கள் அரசியல் பிழைப்பை நடத்தலாம் என்று சதித்திட்டம் தீட்டி வேலையில் இறங்கியுள்ளன இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள்.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களை அச்சுறுத்தும் விதமாக “பேயன்குழி ஊர் பொதுமக்கள்” என்ற பெயரில் தாங்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் ‘இந்தப் போராட்டம் ஊர் பெயரை மாற்றிக் கொடுத்து ஆதாயம் தேடும் செயல்’ என்றும் ‘ஊர் பெயரை மாற்றி பேயன்குழியில் போராட்டம் நடத்தினால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது பேயன் குழி ஊர் மக்களின் கடமை’ என்றும் ‘அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு போராட்டம் நடத்துபவர்களே பொறுப்பு’ என்றும் கூறி துண்டு பிரசுரம் அச்சடித்து பேயன்குழி ஊரில் வீடு வீடாக வினியோகித்துள்ளனர். மேலும், ‘பேயன்குழி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி பேயங்குழி என்ற ஊரின் பெயரை நுள்ளிவிளை என்று மாற்ற நினைக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தைத் தூண்டாதே’ என்று “இந்து முன்னணி, பேயன்குழி” என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இல்லை” என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் “டாஸ்மாக் கடை எங்கள் ஊரில்தான் உள்ளது” என்று பெருமையாக அறிவிக்கிறது இந்து முன்னணி.

இதுவரை இந்து முன்னணி, இந்துக்களின் வாழ்க்கையையும் சேர்த்தே சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை. மாறாக மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விடக் கூடாது, அரசியலை புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். மதத்தின் பேரால் பிரிவினையை ஏற்படுத்தி டாஸ்மாக்கை எதிர்த்து போராடும் மக்கள் மேல் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கிறது இந்து முன்னணி.!

எந்த நிலையிலும், எந்த ஒரு மத நிறுவனமானாலும், மத அமைப்பானாலும் தங்களை நம்பியுள்ள மக்களுக்கு துணையாக நிற்காது, அரசாங்கத்தும், போலீசுக்கும் கைக்கூலியாகவே செயல்படும் என்பதை நடைமுறையில் உணர்த்தியுள்ளது பேயன்குழி-நுள்ளிவிளை டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம். அரசின் அங்கமாகவே உள்ள மத நிறுவனங்கள் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறி சாராயக் கடைகளை பாதுகாக்கும் திருப்பணியை முழுமூச்சாக செய்து வருகின்றன.

இந்துவோ, கிறிஸ்தவரோ தாங்கள் உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து போராடுவதே தங்கள் பிரச்சனைகள் அனைத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஒரே வழி என்பதையும் இப்போராட்டம் உணர்த்தியுள்ளது. இந்து முன்னணியோ, கிறிஸ்தவர மத நிறுவனமோ மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் மக்கள் இணைவதைத் தடுக்க கைகோர்த்து ஓர் அணியில் நிற்கலாம். ஆனால், இந்த சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களாய் ஆண்களும், பெண்களும் அணிதிரண்டு பேயன்குழி-நுள்ளிவிளை டாஸ்மாக் கடைகளை மூட ஆயத்தமாகி வருகின்றனர். பேயன்குழி-நுள்ளிவிளை டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தகவல்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்டக் கிளை

2. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நாளை மாலை குமணன்சாவடியில் ஆர்ப்பாட்டம்- 6.7.2016

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில், 06-07-2016 அன்று மாலை 4.30 மணியளவில், “பார்கவுன்சிலை செல்லாகாசாக்கி விட்டு வழக்கறிஞர்களின் உரிமையைப் பறித்தும், மொத்த அதிகாரத்தையும் நீதிபதிகளின் கையில் குவிக்க வழிவகுக்கும்” சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

தலைமை : தோழர் விகேந்தர், செயலாளர், பு.ஜ.தொ.மு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.
சிறப்புரை : தோழர் அ.முகுந்தன், மாநில தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க