privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஆப்பிள் மரங்கள்

ஆப்பிள் மரங்கள்

-

1989 ல் பெர்லின் சுவர்.
1989 ல் பெர்லின் சுவர்.

1989 நவம்பர் 9-ம் நாளன்று கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரின் வீழ்ச்சியே கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகவும், அந்த இடிந்த சுவரின் செங்கற்கள் முதலாளித்துவ சுதந்திரத்தின் குறியீடுகளாகவும் போற்றப்பட்டன. இடிந்த பாபர் மசூதியின் கற்களை வைத்துக் கொண்டு கரசேவகர்கள் எப்படி வெறியாட்டம் போட்டார் களோ அப்படி பெர்லின் சுவரின் கற்களை வைத்துக் கொண்டு முதலாளித்துவத்தின் சேவகர்கள் களி வெறியாட்டம் நடத்தினார்கள்.

ரசியாவிலும் கிழக்கு ஜெர்மனி போன்ற கிழக்கு ஐரோப்பியநாடுகளிலும் சோசலிச அரசமைப்பு என்ற பெயரில் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று 1960-களின் இறுதிப் பகுதியிலேயே உலகெங்கிலும் உள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் அறிவித்து விட்டார்கள். அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியவாதிகள் இந்த உண்மையை மறைத்துவிட்டு அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையே கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகச் சித்தரிக்கிறார்கள்.

“சோசலிசத்தில் ஏன் இப்படியொரு வீழ்ச்சி? முதலாளித்துவத்தை மக்கள் விரும்பக் காரணம் என்ன? யாருமே இதனை எதிர்த்துப் போராட வில்லையா?” என்ற கேள்விகளுக்குரிய விடையை இந்தப் படத்தின் கதைக்குள்ளே வாசகர்கள் கண்டுபிடிக்க முடியும்.

***

ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் (Helma Sanders Brahms) என்ற மேற்கு ஜெர்மன் பெண் இயக்குநரால் இயக்கப் பட்ட “ஆப்பிள் மரங்கள்” என்ற ஜெர்மானியத் திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப் படத்தின் கதை, பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்குச் சற்று முன்னர் தொடங்கி, அச்சுவர் தகர்க்கப்பட்டு, மேற்கும் கிழக்கும் இணையும் சமயத்தில் முடிவடைகிறது. .

ஹெல்மா
ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ்

கிழக்கு ஜெர்மனியின் ஒருகிராமத்தில் அமைந்திருக்கும் கூட்டுறவு ஆப்பிள் பண்ணை தான் கதையின் களம். அக்கூட்டுறவுப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி ஹீன்ஸ். கம்யூனிஸ்டு கட்சி ஊழியரான அத்தொழிலாளியின் மனைவி லீனா. அந்த ஆப்பிள் பண்ணையின் மேலாளர், சீங்க்.

இந்த மூன்று கதாபாத்திரங்களின் வழியாகத்தான், போலி சோசலிசம் வீழ்ந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கு ஜெர்மன் மக்களின் சமூக – அரசியல் வாழ்க்கையும், மனோநிலையும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரத்தில் ஆப்பிள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கியப் பங்குண்டு. போலி சோசலிச ஆட்சியின் இறுதி நாட்களில், ஆப்பிள் பழங்கள் விற்பனையாகாமல் தேங்கத் தொடங்குகின்றன. பண்ணையெங்கும் ஆப்பிள் பழங்கள் கூடை கூடையாக வீணாகி, நாதியற்றுத் தரையில் கொட்டிக்கிடக்கும் காட்சிகள் வந்து போகின்றன. மேலிடத்தில் ஏதோ கோல்மால் நடப்பதுதான் இந்தத் தேக்கத் திற்குகாரணம் என்று குற்றம் சுமத்துகிறான் தொழிலாளி ஹீன்ஸ்.

பண்ணைத் தொழிலாளிகள், ஆப்பிள் தேங்கிக்கிடப்பது பற்றிக்கவலைப்பட்டுக் கொண்டிருக்க, பண்ணையின் மேலாளர் சிங்க் மேற்கு நாடுகளில் தான் ரகசியமாகப் போட்டு வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றிக் கவலைப்படுகிறான். சககட்சி உறுப்பினரான லீனாவை, அதாவது ஹீன்ஸின் மனைவி லீனாவை எப்படி அடைவது என்று கவலைப்படுகிறான்.

நோயாளியான சீங்க்கின் மனைவியே தனது கணவனின் காம இச்சைக்கு லீனாவை இணங்கச் செய்ய மறைமுகமாக வேலை செய்கிறாள். கட்சியில் சீங்க் பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்துத் தான் தந்தை அவனுக்குத் தன்னைத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறி லீனாவுக்கு ஆசைகாட்டுகிறாள்.

”ஆப்பிள் மரங்கள்” - திரைப்படம்
”ஆப்பிள் மரங்கள்” – திரைப்படம்

மேற்கு ஜெர்மனியின் முதலாளித்துவத்திலும், நுகர்பொருள் கலாச்சாரத்திலும் மயங்கிக் கிடக்கும் லீனா, சீங்க்கின் ஆசைக்கு இணங்குகிறாள். ”உனது கழுத்தில் கண்டிப்பாக நான் தாலி கட்டுவேன்” என சத்தியம் செய்யும் நம்மூர் வில்லன்களைப் போல, லீனாவை மேற்கு ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான், சீங்க்.

சீங்க்கின் உதவியோடு திருட்டுத் தனமாக மேற்கு ஜெர்மனிக்குத் தப்பித்து ஓடி விட லீனா முயலுவது தோல்வியில் முடிகிறது. அவள் மே.ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்படுகிறாள்.

லீனாவின் ஆசைக் கனவுக்குத் தடையாக, குறுக்கே நின்ற பெர்லின் சுவர், அடுத்த சில நாட்களிலேயே நொறுங்கி விழுகிறது. பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்படுவதை, தொலைக்காட்சியில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் லீனா சுதந்திர ஜோதியில் கலந்து விட முடிவெடுத்து, தனது கைக் குழந்தையைத் துக்கிக் கொண்டு, மேற்கு நோக்கி ஓடுகிறாள்.

மேற்கில் உள்ள தனது கள்ளக் காதலனின் முகவரியை அலைந்து, திரிந்து, தேடிக்கண்டுபிடித்து, அழைப்புமணியை அழுத்துகிறாள். சீங்க்கின் உருவம் ஜன்னலோரமாக நிழலாடுகிறது. அழைப்பு மணியை மீண்டும். மீண்டும் அழுத்துகிறாள். ஆனாலும் அவன் வெளியே வரவில்லை.

ஏமாற்றமும், சோர்வும் தாக்க, எங்கே போவது எனத் தெரியாமல், நகரத்துத் தெருக்களில் அலைகிறாள் லீனா, நியான் விளக்குகளின் வெளிச்சம் தார்ச்சாலையை ஜொலிக்கவைக்கிறது. ஷோ-கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட் களை ரசித்துப் பார்க்கக் கூட மனமின்றி நடக்கும் மரியா, ஒரு ரொட்டிக்கடைமுன் நிற்கிறாள்.

உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி; வெளியே, கையில் குழந்தையோடு மரியா. ரொட்டித் துண்டுகளும், மரியாவும் இணைக்காட்சிகளாக அடுத்த டுத்துகாட்டப்படுகின்றன. முதலாளித்துவ சுதந்திரத்தின் கீழ் கையில் காசில்லாமல் ஒரு ரொட்டித் துண்டு கூடக் கிடைக்காது என்பது மரியாவுக்குத் தெரியும். ரொட்டிக் கடையை விட்டு அகன்று நடக்கிறாள். சிறிது தூரம் சென்றவுடன் தெருவின் நடைபாதையில் குழந்தையைக் கிடத்திவிட்டு அதனருகில் சுருண்டு படுக்கிறாள்.

ஆப்பிள் மரங்கள் திரைப்படத்தின் லீனா
முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தனி நபர்வாதத்திலும் மூழ்கிக்கிடந்த லீனா போன்ற நடுத்தர வர்க்கத்தினர்

இப்பொழுது ஜெர்மனி ஒன்றுபட்டு விட்டது. தங்களது கூட்டுறவுப்பண்ணை தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டுகிறான் ஹீன்ஸ். மேற்கு ஜெர்மனியின் மயக்கத்தி லிருந்து விடுபட்ட லீனாவும் அவனது போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறாள். பண்ணையை எவனுக்கோ விற்பதை விடத் தொழிலாளர்களே பணம் போட்டு , அதை வாங்கிவிடலாம் என்கிறான் ஹீன்ஸ்.

ஆனால் தொழிலாளர்களிடம் ஏது அவ்வளவு பணம்? நிர்வாகியாக இருந்து பண்ணையின் சொத்தைத் திருடிச் சேர்த்த சீங்க்கிடம் பணம் கேட்கிறான் ஹீன்ஸ். தன்னிடம் பணமில்லை என அவன் கை விரிக்கிறான்.

சில நாட்களில் கூட்டுறவுப் பண்ணை தனியார் வசமாகிறது. பண்ணையை வாங்கியவன் சீங்க் தான் எனப் பின்னர் தெரியவருகிறது. புல்டோசர் ஒன்று கூட்டுறவுப் பண்ணைக்குள் பெரும் சத்தத்தோடு நுழைகிறது. ஒரு ஆப்பிள் மரம் வேரோடு பிடுங்கப்பட்டு துக்கியெறியப்படுகிறது. அடுத்தடுத்து, ஆப்பிள் மரங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொண்டே, செல்கிறது புல்டோசர்,

***

1989 நவம்பரில் ஜெர்மன் இணைப்பு தொடர்பாக கிழக்கு ஜெர்மனியில் நடந்த கருத்துக் கணிப்பில் 27 சதவீதம் பேர் இணைப்புக்கு ஆதரவாகவும், 71 சதவீதம் பேர் இணைப்புக்கு எதிராகவும் வாக்களித்தனர். இருப்பினும் இணைப்பு நடந்தது.

அந்த 27 சதவீதம் பேர் வேறு யாருமல்ல. கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த நாட்டையே கொள்ளையடித்த சீங்க் போன்ற அதிகார வர்க்கத்தினர்; முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தனி நபர்வாதத்திலும் மூழ்கிக்கிடந்த லீனா போன்ற நடுத்தர வர்க்கத்தினர்.

போலி சோசலிச ஆட்சியாயிருப்பினும் கிழக்கு ஜெர்மனி மக்கள் உணவு, உடை, வீடு போன்றவற்றிற்கு அரசு தந்த மானியம் காரணமாக தமது வருமானத்தில் குறைந்த பங்கையே செலவழித்து வந்தனர். ஆனால், நுகர்பொருட்கள் மீதான மோகம் நடுத்தர வர்க்கத்தைப் பிடித்து ஆட்டியது. ஜெர்மனி இணைந்து விட்டால், மேற்கு ஜெர்மனியின் நாணய விகிதத்தில் வருமானம் பெற்றால், தற்போது மலிவு விலையில் கிடைக்கும் வீடு, உணவு, உடை போக மேற்கண்ட நுகர்வுப் பொருட்களும் ‘போனசாக’ கிடைக்கும் என கி.ஜெர்மனி நடுத்தர வர்க்கம் கனவு கண்டது.

ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள்
ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள்

ஆனால் இணைப்புக்குப் பின் நடந்ததென்ன? ஹீன்ஸ் போன்ற தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இணைப்பு நடந்த சில வாரங்களிலேயே, எட்டு இலட்சம் (கிழக்கு) ஜெர்மனி தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கிழக்கு ஜெர்மனிப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு உரிமை, சம வேலை வாய்ப்பு, சம ஊதிய உரிமை போன்றவை பறிக்கப்படும் அபாயம் எழுந்தது. ஜனநாயகம் என்ற போர்வையில், தொழிலாளர்களின் பொருளாதார அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட அதே சமயம், புதிய நாஜிக்கட்சிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டன. சுருக்கமாகச்சொன்னால், (கிழக்கு) ஜெர்மனி இருந்ததையும் இழந்து, புதிதாக எதையும் பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இணைப்பின் போது மேற்கு ஜெர்மன் அதிபராயிருந்த ஹெல்மெட் கோல், கிழக்கு ஜெர்மன் இணைப்பு; நமக்கு 2000 ஆண்டில் 117,300 கோடி ரூபாய் லாபத்தைத் தரும் என்று அறிவித்தார். லீனாவுக்குத் தரப்பட்ட சுவரைத் தாண்டும் சுதந்திரத்திற்கும் பட்டினி கிடக்கும் சுதந்திரத்திற்கும் வசூலிக்கப்பட்ட கட்டணம் இது.

ஜெர்மன் இணைப்பால் சிங்க் பெற்றது ஆப்பிள் தோட்டம். சீமன்ஸ், பென்ஸ், ஒபல், தாய்ல்மர், வோக்ஸ்வாகன் போன்ற ஜெர்மன் ஏகபோக முதலாளிகள் பெற்றதோ பல லட்சம் கோடி மதிப்புள்ள கிழக்கு ஜெர்மனியின் சொத்துக்கள் மற்றும் மலிவான உழைப்பு; ஆனால் போலி கம்யூனிஸ்டு அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்திய இந்தத் திரைப்படம் ஜெர்மன் ஏகபோக முதலாளிகளைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை.

ரசியாவிலும் சரி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்க முதலாளிகள், மேலை ஏகபோக முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துதான் போலி சோசலிசத்தைக் கவிழ்த்திருக்கிறார்கள் என்பதற்கு இத்திரைப்படம் சான்று பகர்கிறது.

கட்சிக்குள் நிறைந்திருந்த நடுத்தர வர்க்கம் அதனுடைய முதலாளித்துவ மோகம் ஆகியவற்றின் வகை மாதிரி லீனா.

கம்யூனிஸ்டு கட்சியில் சேராமல் தானுண்டு தன்வேலையுண்டு என்றிருந்த தொழிலாளி ஹீன்ஸ், அதிகாரவர்க்கத்தின் ஊழலைத் தட்டிக் கேட்கும் போதும், தாங்கள் உருவாக்கிய பண்ணையை எவனோ ஒரு முதலாளி அபகரிப்பதை எதிர்த்துப் போராடும்போதும் மெல்ல மெல்ல வர்க்க உணர்வு பெறத் தொடங்குகிறான்.

கம்யூனிசத்தின் தோல்வி பெற்றெடுக்கப் போகும் புதிய கம்யூனிஸ்டுகளுக்கு அவன் ஒரு வகை மாதிரி ஆகக்கூடும்.

– புதிய கலாச்சாரம், ஜூன், 2001.