மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டப் பொதுக்குழு கூட்டம் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் தலைமையில் கடந்த 31-07-2016 அன்று மாலை மூட்டா அரங்கில் நடைபெற்றது.பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-.

1) வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகளாக்கும், தமிழ் நாட்டிற்கு மட்டும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
2) விசாரணை, புகார் ஏதுமின்றி எதேச்சதிகாரமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் 172 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும்.
3) வழக்கறிஞர் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்தில் முதல் களப் பலியான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கு உளப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவிப்பதோடு அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
4) திரு.முத்துராமலிங்கம் அவர்கள் இறப்புக்குக் காரணமான தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலின் சர்வாதிகாரம், பார் கவுன்சில் தலைவர்கள் செல்வம்-பிரபாகரன் ஆகியோரின் துரோகம், அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் இந்தித் திமிர் ஆகியவற்றை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
5) மெய்வழி ஆண்டவர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதாகக் கூறும் செல்வம்-பிரபாகரன் சட்டக் கல்விச் சான்றிதழைச் சோதித்துப் பார்க்க நீதித் துறையை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
6) நீதிபதிகள் – வழக்கறிஞர்களிடையே நிலவிய நல்லுறவைச் சிதைத்து நீதிபதிகளின் சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் தலைமை நீதிபதி கவுலை தாமதமின்றி பணியிட மாற்றம் செய்ய இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.
7) வழக்கறிஞர் சட்டத் திருத்தம் சாராம்சத்தில் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக உள்ளதை உணர்ந்து வழக்கறிஞர் போராட்டம் வெற்றி பெற அனைத்து மக்கள் தரப்பினரும் ஆதரவு அளிக்கும்படி இப் பொதுக் குழு அறைகூவி அழைக்கிறது.
8) மதுவின் ஆதிக்கம் பள்ளி மாணவர்கள் வரை பரவி தமிழ் நாட்டின் ஈரலை அரித்து வருவது தெளிவாகத் தெரிந்த போதும், படிப்படியாகக் குறைப்பேன் என்று சொல்லி ஏமாற்றும் ஜெயா அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். முழுமையான மது விலக்கை உடனே அமல்படுத்தக் கோருகிறோம்.
9) தமிழ் நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பெண்கள்-சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள், ஆணவக் கொலைகள், கூலிப்படை ஆதிக்கம், மாணவர்கள் தற்கொலை, காவல் துறையின் அதிகார அத்து மீறல்கள் அன்றாட நிகழ்வாக, தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மேற்கண்ட பேரபாயங்களைக் கட்டுப்படுத்தாமல், காவல் துறையைத் “தாயினும் சாலப் பரிந்து” ஊட்டி வளர்ப்பதோடு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவகத் திகழ்வதாக சட்டசபையில் அறிவிப்பது கண்டனத்துக்குரியது.
10) புதிய கல்விக் கொள்கை என்று டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் மத்திய அரசுக்குச் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை ,பரிந்துரைகள் குருகுலக் கல்வி முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது.ஆர்..எஸ்.எஸ்.கொள்கைப்படி உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை காசு இல்லாதவனுக்குக் கல்வியை மறுக்கிறது.ஏழைகள்,தலித்துகள்,சிறுபான்மையினருக்கான கல்வி உரிமையை மறுத்து இந்து சனாதனத்தைப் புகுத்துவதாக உள்ளது.மத்திய அரசு இக் கல்விக் கொள்கையைக் கைவிட்டு அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி,அறிவியல் அடிப்படையிலான கல்வியை அரசே வழங்க இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.இப் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
9443471003