Thursday, May 1, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !

ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !

-

செய்தி: புது தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ஏழை குடும்பங்களின் மருத்துவச் செலவுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நீதி: இதனால் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிக மதிப்பில் நோயுற்றிருக்கும் ஏழைகள் சாவக் கடவதாக!

—————————————–

செய்தி: நடுத்தர வர்க்கத்தினரை, போலிசாரை விட வரித்துறை அதிகாரிகளே அதிகம் துன்புறுத்துகின்றனர். இந்த வரி பயங்கரவாத நிலையை மாற்ற வேண்டும். இதற்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – மோடியின் செங்கோட்டை உரை!

நீதி: விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற அப்பாவிகளை துன்புறுத்தி, வெளிநாடுகளுக்கு துரத்தி விட்ட வரி பயங்கரவாத்திற்கு எதிராக மோடி தொடுத்திருக்கும் போர்!

—————————————–

செய்தி: இரு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது இந்திய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கண்ணீர் வடித்தனர். இது மனித நேயத்திற்கு உதாராணம். மாறாக, பாகிஸ்தானில் பயங்கரவாதம் பெருமைப்படுத்தப்படுகிறது. – மோடியின் செங்கோட்டை உரை.

நீதி: பெஷாவர் நகர தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக பாகிஸ்தான் மக்கள் துக்கம் அனுசரிக்காமல் பிரியாணி விருந்துண்டனராம்! இதுதாண்டா உண்மையான மோடி நேயம்!

—————————————–

செய்தி: சமூக நீதி கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும் – மோடியின் செங்கோட்டை உரை.

நீதி: காஷ்மீர் முஸ்லீம்கள், குஜராத் தலித் மக்கள், சட்டீஸ்கர் – ஒடிசா பழங்குடியினர்…… ஆம்… அடித்து நொறுக்குவதில் பாரபட்சம் இல்லாத சமூக நீதி!

—————————————–

செய்தி: உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில்தான் உள்ளது – முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுதந்திர தினப் பேச்சு

நீதி: மிடாஸ், ஜெயா சானல்கள், ஜாஸ் சினிமாஸ், கபாலி வினியோகம்….பொருளாதார சுதந்திரப் போராட்டத்தின் மைல் கற்கள்!

—————————————–

செய்தி: தமிழக காங்கிரசுக்கு தலைவர் இல்லாத நிலையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் சுதந்திர தினவிழா கலகலப்பாக நடந்து முடிந்தது.

நீதி: தலைவர் இல்லை என்றால் கோஷ்டி தலைவர்களுக்கு வேலை இல்லை. கோஷ்டி சண்டை இல்லாத சத்திய மூர்த்தி பவன் சுதந்திர விழாவில் கலகலப்பு எப்படி அய்யா?

—————————————–

செய்தி: சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், கட்சி தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். எனினும் நிர்வாகிகள் வினியோகித்த லட்டுக்களை வாங்க அங்கே 50 பேர் கூட இல்லை என்பதால் விஜயகாந்த் ‘அப்செட்’ ஆனார்.

நீதி: 2016 சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அல்வாவே இன்னும் ஜீரணம் ஆகாத நிலையில் லட்டுக்கள்  எதற்கு என்று நினைத்திருப்பார்களோ?

—————————————–

செய்தி: உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை சந்திக்க, வரும் 25-ம்தேதி பிறந்த நாளன்று விஜயகாந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் ம.ந.கூ., தலைவர்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர்.

நீதி: பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஆள் வேண்டுமென்பது கேப்டனின் தந்திரம். உள்ளாட்சி தேர்தலில் அனாதையாக அழுவதை தவிர்ப்பது ம.ந.கூ தந்திரம்