அமெரிக்கா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும், வாஷிங்கடனில் 30.08.2016 செவ்வாய் அன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது இந்திய அமெரிக்க இராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) என்று அழைக்கப்படுகிறது. இதன்படி இந்தியா சட்டப்படியே அமெரிக்காவின் அடியாளாக பணிபுரியப் போகிறது.

ஒப்பந்தத்தின் படி இரு நாட்டு இராணுவங்களும் மற்றவரின் ராணுவத் தளம் மற்றும் தளவாடங்களை பயன்படுத்த முடியும். மேலும் உணவு, நீர், பெட்ரோலியப் பொருட்கள், உடை, மருத்துவ சேவை, இதர தொழில் நுட்ப சேவைகள், இராணுவப் பயிற்சி உள்ளிட்டவைகளையும் இரு நாட்டு இராணுவங்களும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இரு நாட்டு நலன்கள், விருப்பம், சர்வதேச அமைதி, பாதுகாப்பு போன்ற வழக்கொழிந்த வார்த்தைகளை போட்டு இரு நாடுகளும் கூட்டறிக்கையில் இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவிக்கின்றன. உண்மையில் இதன் பயன்பாடு யாருக்கு என்னவாக பயன்படும்?
90-களில் நடந்த முதல் வளைகுடாப் போரின் போது இந்தியாவில் சந்திரசேகரைப் பிரதமராகக் கொண்ட ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க விமானங்கள் இந்தியாவில் எரிபொருட்களை நிரப்ப அனுமதிக்கப்பட்டன. அப்போது பலரும் இந்த நடவடிக்கைகளை விமரிசித்தனர்.
தற்போதைய ஒப்பந்தப்படி அப்படி ஒரு எரிபொருள் நிரப்பல் நடந்தால் யாரும் விமரிசிக்க முடியாது. ஏனெனில் தற்போது இது சட்டப்படியே சரி. உண்மையில் இவ்வொப்பந்தம் இருநாட்டு இராணுவங்களும் பொருட்களையும், சேவைகளையும் பகிரந்து கொள்ளும் என பேசினாலும் உண்மையில் இது ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அமெரிக்க இராணுவத்திற்குத்தான் நடைமுறையில் பயன்படும். இந்தியா என்ன வளைகுடாவிலோ இல்லை தென் அமெரிக்காவிலோ படையெடுக்கவா போகிறது?
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் அமெரிக்க ராணுவத் தளங்களை உருவாக்குவதற்கு அனுமதிக்கவில்லை என்று தேசபக்த பா.ஜ.க.வினர் ரீல் சுற்றுகின்றனர். உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது. இப்படி முழு அடியாள் வேலைகளுக்கு உதவும் இந்தியாவுக்கு பரிசாக ஆயுத வர்த்தகத்தையும், தொழில்நுட்ப பகிர்வையும் அளிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாம்.
இத்தகைய ஒப்பந்தத்தை 2003-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா வற்புறுத்தி வந்தாலும் தற்போதைய மோடி அரசுதான் இந்த அடிமை ஒப்பந்தத்தை விரும்பி நிறைவேற்றியிருக்கிறது. இந்திய இறையாண்மையை பகிரங்கமாக அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பித்திருப்பதால் இனி மோடியை “அடிமை கொண்டான்” என்று அழைக்கலாம்.
செய்தி ஆதாரம்:
ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம்: இந்தியா – அமெரிக்கா கையெழுத்து
India, US sign key defence pact to use each other’s bases for repair, supplies