Saturday, May 10, 2025
முகப்புசெய்திதஞ்சை : நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

தஞ்சை : நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

-

தஞ்சைத் தோழர்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

manivannan-ninaiventhal-tnj-01ஞ்சையில் நடைபெற்ற இசைவிழாக்கள், மையப் போராட்டங்கள் என்று தஞ்சைத் தோழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் மணிவண்ணன். வயதால் மூத்த குடிமகனானாலும் பழக்கத்திலும், நடைமுறை செயல்பாட்டிலும் பதின்பருவ இளைஞனாகவே இருந்தார் என்பதை அவரது செயல்பாடுகள் பறைசாற்றுகின்றன.

எளிமையான வாழ்க்கை, அங்கீகாரத்திற்கு ஏங்காத அயராத உழைப்பு, எவ்விதத் தயக்கமும் இல்லாத அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்திலும் வர்க்க அரசியலுக்கான போராட்டம், உழைக்கும் மக்களிடம் ஐக்கியம், அமைப்பின் கட்டுப்பாட்டை மதித்துப் பேணுதல், உளப்பூர்வமான சுயவிமர்சன பண்பாடு, அரசியல் தெளிவு, முன்முயற்சி, தன்னடக்கம், அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், அமைதியான போர்க்குணமிக்க செயல்பாடு என கம்யூனிச பண்புகளால் உயர்ந்து நின்றவர் தோழர்.மணிவண்ணன் என்பதைத் தோழர்களின் நினைவேந்தல் புகழஞ்சலி உரைகள் பறைசாற்றின.

manivannan-ninaiventhal-tnj-02மக்கள் கலை இலக்கியக்கழகம் தஞ்சைக் கிளை சார்பில் தோழர்.மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி 22-09-2016 அன்று தஞ்சை வனதுர்கா நகர் ஆத்மஞானி சமூகக்கூடத்தில் நடைபெற்றது. ம.க.இ.க தஞ்சைக் கிளை செயலர் தோழர் இராவணன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் தஞ்சைத் தோழர் தேவா வரவேற்புரையின் ஊடாகத் தோழரை நினைவு கூர்ந்தார். ம.க.இ.க மைய கலைக்குழு அமைப்பாளர் தோழர் கோவன் தோழர் மணிவண்ணன் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

“92 வயதில் எனது தந்தை இறந்தார். மொட்டையடித்தல் உட்பட சடங்குகள் எதையும் செய்ய மறுத்து வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றார் தோழர் மணிவண்ணன். வாழும் காலம் முழுவதும் அவரோடு தொடர்பின்றிதான் இருந்தேன். இறுதிக்காலத்தில் தான் அவரைச் சந்தித்தேன். இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் இணைந்து மணிவண்ணன் சென்ற பாதையில் செல்வதென முடிவெடுத்து விட்டேன்” என்ற மணிவண்ணன் சகோதரர் ஆறுமுகத்தின் அறிவிப்பைத் தோழர்களின் கரவொலி உற்சாகத்துடன் வரவேற்றது.

ம.க.இ.க கோவை கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் சம்புகன், மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தஞ்சைத் தோழர்கள், பாலாஜி, குணசேகரன், பரமானந்தம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர்.கோவன் நிறைவுரையாற்றினார். தஞ்சை மக்கள் அதிகாரம் தோழர் அருள் நன்றியுரையாற்றினார்.

இறுதியாகத் தோழர் மணிவண்ணனுக்கு அஞ்சலிஉரை வாசிக்கப்பட்டுக் கரம் உயர்த்தி சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கனத்த இதயத்தோடு மலரஞ்சலி செலுத்த நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆத்மஞான சமூகக் கூடம் அருகில் வைக்கப்பட்டடிருந்த தோழர் மணிவண்ணன் நினைவேந்தல் புகைப்படங்களைப் பகுதி மக்கள் நின்று பார்த்து விசாரித்து விபரம் தெரிந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

– வினவு செய்தியாளர்