ஆறு என்பது
பயன்பாடு மட்டுமா?
பண்பாடும் கூட.
ஆறு காய்ந்தால்
ஊர் காயும்
உறவு காயும்,
ஒவ்வொரு செடி, கொடி
பேர் காயும்,
தாவரம் அண்டிய
பல்லுயிர் மாயும்.
மரமென ஒன்றிருந்தால்
வந்து
பறவைகள் கூடும்,
நிழலிடை அறிமுகத்தால்
மனித உறவுகள் நீளும்.
மரங்களின் வேர்வந்து
நதியும் பொசியும்
நதியின் தோள்வந்து
மரம் நிழல் கசியும்
இயற்கையின்
இயங்கியல் உறவில்
பல மனங்கள்
இணையும்!
ஆறு அற்றுப்போனால்
மரங்கள் பட்டுப்போகும்
மரம் பட்டுப்போனால்
மழைஅற்றுப்போகும்
மழைஅற்றுப்போனால்
ஊர் நிலையற்றுப்போகும்
ஊர் நிலையற்றுப்போனால்
உறவுகள் கிளை அற்றுப்போகும்.
மண்ணுள் விரவி
கடல்நீர் உவர்ப்பை
தன்னுள் தகர்த்து
விளைநிலம் பெருக்கி
விழையும் தாய், தந்தை
தமக்கை, மாமன்,
பெயரன், பெயர்த்தி
உறவுகள் செழிக்க
காவிரி வேண்டும்!
ஆடிப்பெருக்கில்
கலந்த மஞ்சளை
தேடித்தழுவி
செவுள்களில்
திருப்பித்தரும்
சிறுமீன்கூட்டம்
ஈரம் தேடித்தேடி
கருமணல் துளைத்து
துடித்துச் சாவது
ஊர்மரணத்தின்
ஆழ் குறியீடு!
காவிரி இழந்தோம்
கலை இழந்தோம்….
தண்ணீரைத் தவிர
மற்ற எல்லாம் வருகிறது
காவிரியில்
தண்ணீர் வரும் போது
வருகிறது கழிவு
தண்ணீர் வராதபோது
சு. சாமி, ஆர்.எஸ்.எஸ்.
சமஸ்…
பழங்குடித்திராவிடர்
பராமரித்த அணைகளை
‘அம்பை விட்டு உடை’ – என்று
இந்திரனிடம் வேண்டிய
ஆரிய ரிக் வேத ஓதல்கள்
மாறிய பொருளில்
ரீ ரிக்கார்டிங் ஆகின்றன
இப்போது –
‘அணையை அடை’!

உரிமையைக் கேட்டால்
போய்
கடல்நீரை குடிநீராக்கு – என்பது
சு. சாமியின் திமிர்வாதம்,
கேட்பதற்கே
தமிழினத்திற்கு தகுதியில்லை – என்பது
சமஸ் திமிரின் பிடிவாதம்.
அனல் வாதம், புனல் வாத்ததால்
அன்று சமணர்கள் கொலை
ஆர். எஸ். எஸ். பரிவாரத்தால்
இன்று காவிரிக்கொலை!
காவிரி மேலாண்மை வாரியத்தை
மட்டுமல்ல
காவிரியையே அழிக்கும்
காவி மேலாண்மை வாரியம்.
நீரிழிவுதுடைக்க
பேரழிவு தடுக்க,
தடம் அழிக்க வரும் பகையை
குறிவைத்து
கரை உடைக்கும் காவிரி
நம்மிடம் பொங்கட்டும்!
– துரை. சண்முகம்