privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி !

கொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி !

-

“கொடி” திரைப்படத்தில் வட்டம், மாவட்டம், அமைச்சர், அடுக்கு மொழி வருவதால் அது ஒரு அரசியல் படமென்று குறியீடுகளுக்கு நேர்ந்து விடப்பட்ட சில அப்ரண்டிஸ்டுகள் நினைக்கிறார்கள். இல்லை, இது குடும்பத்துடன் களிக்க வேண்டிய “மாஸ்” மசாலா என்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதற்கு ஆதாராமாய் மேலும் சில ‘வரலாற்றுத்’ தகவல்கள்!

லொடுக்கு பாண்டியாக ஆளானவர் கருணாஸ். பிறகு வள்ளியூர் சித்ரா திரையரங்கில் வெளியாகும் தேவர் சாதி நடிகர்களின் படங்களுக்கு சுவரொட்டி ஒட்டி பழக்கப்பட்ட சொந்தங்களுக்கு பசை கிடைக்காத காலம் வந்தது. அதாவது போற்றிப் பாடடி வகையறாக்கள் அனைத்தும் சந்தை இழந்து அதிலும் கார்த்திக் போன்ற ஜீவராசிகளெல்லாம் ஊடகங்களின் காமடி டிராக்கின் ஆஸ்தான ஜீவனான பிறகு ஒட்டுவதற்கு குட்டிச் சுவரொ, வெட்டிச் சுவரொட்டியோ இன்றி சொந்தங்கள் தவித்தன. அம்மாவின் கட்டிங் மட்டும் இருந்தென்ன பயன்?

Karunas
லொடுக்கு பாண்டியாக இருந்து ஆளான கருணாஸ் ‘தேவர்’

இச்சூழலில் இடம் காலி, ஏதும் மடம் கிட்டுமா என்று தேவர் ஸ்டாராக கிளப்பிவிடப்பட்ட கருணாஸ், சில அல்லக்கைகளோடு அம்மாவிடம் விழுந்து எம்.எல்.ஏ-வாக ஆகியும் விட்டார். அதே போல வடிவேலின் நகைச்சுவை பட்டாளத்தில் வாழ்க்கை பெற்ற சிங்கமுத்து ஏதோ சொத்து விவகாரத்தில் கைப்பிள்ளையை துண்டித்து விட்டு சமத்துப் பிள்ளையாக அம்மாவின் உள்வட்டத்தில் பேசி அ.தி.மு.கவின் ஆல்டைம் சிறப்பு ஆபாசப் பேச்சாளராக போனார்.

ஏனிந்த வரலாற்றுக் குறிப்பு? ஐயா, இந்தப் படத்தில் இவர்களெல்லாம் அரசியல்வாதிகளாக வருகிறார்கள்; எனில் இந்தப் படத்தில் அரசியல் எப்படி அக்கப்போராக இருக்கும் என்பதற்கே இவ்விளக்கம். கூடுதலாக சிவப்பு மல்லி காலத்தில் விஜயகாந்தை போராளியாக்கி “சட்டம் ஒரு இருட்டறை” பேசிய இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் (நடிகர் விஜயின் தந்தை) படத்தில் ஜனநாயகக் கழகக் கட்சித் தலைவராக வருகிறார்.

நடிகை சங்கவியின் கவர்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்களை வரவழைத்து கூடவே மகனையும் அறிமுகப்படுத்தி இவர் இயக்கிய படங்களுக்கு காசு கொடுத்த விடலைகள், ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க அணிலும் அனகோன்டாவாக கண்ணுக்குத் விரியும் எனும் விதிமுறைப்படி விஜய்யை ஏற்றுக் கொண்டார்கள். உடனே தனது வெத்துவேட்டு சிவப்பு பட வசனங்கள் கூட தேவையின்றி அடுத்த முதலமைச்சர் நம்ம பையன்தான் என பிறந்தநாள், மூன்று சக்கர வண்டி, ரசிகர் மன்றம், கொடி… இறுதியில் கதையில் குத்து வசனங்கள் என கனாக் கண்டார் எஸ்.ஏ.எஸ். இவரென்று அல்ல, ஆளாளுக்கு  கோட்டை, கோப்பு என கொப்பளிப்பதைக் கண்ட ஜெயா ‘சிறப்பு’ கவனம் எடுத்து வெள்ளித்திரை விட்டேத்திகளை கவனித்தார். ஓடு “தலைவா” ஓடு என கொடநாட்டுக்கு பறந்து சென்று தவம் கிடந்தும், விஜயின் படங்கள் வெளியாவதற்கே ததிங்கிணத்தோம் போட்டன. அதன் பிறகே அனகோன்டாவின் ஆக்ரோச கிராபிக்ஸ் அணிலின் சேட்டையாக வீடு திரும்பியது.

இப்படி அடிமேல் அடிபட்ட எஸ்.ஏ.எஸ்ஸும் இப்படத்தில் ஒரு கட்சித் தலைவராக நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் இது எப்பேற்பட்ட ‘அரசியல்’ படம்?

SA Chandra sekar
அடுத்த முதலமைச்சர் நம்ம பையன்தான் என பிறந்தநாள், மூன்று சக்கர வண்டி, ரசிகர் மன்றம், கொடி… இறுதியில் கதையில் குத்து வசனங்கள் என கனாக் கண்டார் எஸ்.ஏ.எஸ்.

படத்தில் வரும் ஜனநாயகக் கழகத்தின் பச்சைக் காவிக் கொடியில் நெற்கதிர் முத்திரையும், குடியரசுக் கழகத்தின் சிவப்புக் கொடியில் அரிவாளைப் போன்ற ஆங்கிய யூ வடிவோடு ஒரு நட்சத்திரமும் இருக்கின்றன. கட்சிகளின் பெயர்களில் அமெரிக்க வாடையும், கொடிகளின் அசைவில் கம்யூனிஸ்டுகளின் அடையாளமும் தெரிகின்றன. மற்றபடி கட்சிக் கூட்டங்கள், பேச்சுக்கள், சதியாலோசனைகள் அனைத்திலும் திராவிட இயக்கங்களை, குறிப்பாக தி.மு.கவைக் குறிவைத்து அடுக்கு மொழி, ஆபாச பேச்சு, மது மாது விவகாரம் என்று கதை போகிறது.

ஆக இவையெல்லாம் Zoom + (பூதக்கண்ணாடி) இல்லாமலே தெரிகிறது. மேலும் அம்மா தரப்பில் எந்த ஆட்சேபணையும் இருக்க கூடாது என்பது திரைக்கதையில் மட்டுமல்ல, நடிகர்களிடமும் அந்த பயம் வந்துவிடக் கூடாது என கருணாஸும், சிங்கமுத்துவும் இதில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைத்தான் “கொடி”யின் இயக்குநரும், ஒரு காரசாரமான மசாலாவிற்கு தேவைப்படும் பின் களமாகவே அரசியல் இருக்கிறது என்று சத்தியம் செய்கிறார். கூடுதலாக படையப்பாவில் ஆடியதால் புரட்சித் தலைவியால் பட்டிபார்க்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். இத்தகைய நிஜ அரசியலை கனவிலும் பார்க்க விரும்பாத வெற்றிமாறன் போன்ற சினிமா படைப்பாளிகளும் தயாரிக்கிறார்கள் என்றால் இங்கே என்ன அரசியல் இருக்கும்?

அதே நேரம் “கொடி” படத்தில் அரசியல் இல்லாமல் இல்லை. அதாவது ஆபத்தில்லாத அரசியல்! “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” போன்ற காளிமுத்து கப்சாக்கள், அதே கப்சாக்களை பேசும் மழலை மொழிச் சிறுவர்கள், மாற்றுக் கட்சியினரை அலங்காரப் பேச்சில் அதாவது எதுகை மோனையில் எகத்தாளமாக பேசுவது, அதிகாரப் போட்டி, அதற்கான சதித் திட்டங்கள் போன்ற ஊசிப்போன மஸ்கட் அல்வாவை போட்டு இழுக்கிறார்கள்.

மலையாளப் “பிரேமம்” படத்தில் புகழடைந்த அனுபமாவை தெரிவு செய்ததை யுரேகாவாக உருகுகிறார் இயக்குநர். அதே மலையாளப் படங்களில் தமிழர்களை மஞ்சள் பை பாண்டிக்காரனென்றும், வேட்டி, வெள்ளைச் சட்டை, கருப்பு கண்ணாடி சகிதமான அதார் உதார் அரசியல்வாதிகளாக காட்டுவார்களே அதுதான் இயக்குநரின் பார்வையும் கூட.

ஒரு மாவட்டத்தில் கழகங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது யார் என்பனவெல்லாம் இன்று பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல. ஆனந்த விகடன், தி இந்து போன்ற ஊடக குருமார்கள் நடுத்தர வர்க்கத்திடம் உருவாக்கியிருக்கும் “அரசியலே சாக்கடை, லஞ்சமென்றால் கவுன்சிலர், தலைவரென்றால் நடிப்பு, நல்ல எம்.எல்.ஏ வென்றால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் போன்ற நமத்துப் போன படிமங்களைத்தான் இன்றும் அரசியலின் அடிப்படையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினார் சாலை போடுவதோ இல்லை முதலமைச்சர், பிரதமர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளின் காலைப் பிடித்து, கூத்தாடி பிற வசதிகளைக் கொண்டு வருவதுதான் அவரின் நல்ல தன்மைக்கு ஆதாரம் என்று இவ்வூடக கோமாளிகள் படுத்துகிறார்கள். ஆக தனிப்பட்ட முறையில் ஜால்ரா, செல்வாக்கு இருந்தால் அந்த தொகுதியில் தேனாறு ஓடுமாம். இதுதான் ஜனநாயகமென்றால் இங்கே மாமாக்களே கோலேச்ச முடியும்.

படத்தில் படிக்கத் தெரியாதவனெல்லாம் கல்வி அமைச்சர் என்று கிண்டலடிக்கப்பட்டு, பொய்யாக படித்து பட்டம் வாங்கினார் என நீதிமன்றத்தால் பதவி இறக்கப்படுகிறார். நீதிமன்றத்திலேயே அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் தமிழ் கேலி செய்யப்படுகிறது.

படிக்காத கைநாட்டெல்லாம் இங்கே ஆள்கிறது எனும் கூற்று கூட சமஸ் வகையறாக்களின் அரசியல் விமர்சனம்தான். ஒரு பேச்சுக்கு படிக்காத காமராஜரை இவர்கள் கோடிட்டாலும் அவர் நல்லவர், லஞ்சம் வாங்காதவர் என்று புனிதப்படுத்துவார்கள். ஊழல் குற்றச்சாட்டு உண்மையென நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தேர்தல் காலத்தில் கன்டெய்னரின் மூலம் பணம் கடத்தி இன்றுவரை மர்மமாக வைத்திருக்கும் அதிகாரத்தோடு, தற்போது கைநாட்டு மூலம் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் சின்ன ஒதுக்கீட்டை செய்பவரே இங்கே முதலமைச்சர் எனும் போது, “கொடி” படைப்பாளிகள் அரசியல் என்று முன்வைப்பது எதை?

amma health
ஜெயலலிதா எனும் தலைவரின் ஆட்சியை வெறுமனே கவுன்சிலரோ, அலகு குத்தும் மகளிர் அணியோ, பிரியாணிக்கு ஆள் பிடிக்கும் மாவட்டமோ தீர்மானிக்கவில்லை.

ஜெயலலிதா எனும் தலைவரின் ஆட்சியை வெறுமனே கவுன்சிலரோ, அலகு குத்தும் மகளிர் அணியோ, பிரியாணிக்கு ஆள் பிடிக்கும் மாவட்டமோ தீர்மானிக்கவில்லை. அம்மாவின் அயோக்கியத்தனத்தை ஆதரிக்கும் பாண்டே கேள்வி நேரத்தில் முதுகு சொறிகிறார், மல்லையா விமானம் அனுப்புகிறார், அம்பானி தனது சானல் திறப்புக்காக தேதி கேட்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி அம்மாவுக்காக காந்தி கணக்கு போடுகிறார், மத்திய நிதியமைச்சரோ பேரம் பேசுகிறார், மோடி வாழ்த்து தெரிவிக்கிறார்! ஜெயாவின் கால் பணிந்து கோப்புக்களைப் பார்த்த நத்தம் விஸ்வநாதனே இன்று வெளிநாடுகளில் சொத்து, இடைத் தேர்தலில் ஒரு வாக்கிற்கு பத்தாயிரம் பணம் என்று கற்பனைக்கெட்டாத வகையில் துருத்திக் கொண்டு இருக்கும் போது இயக்குநர் குழாயடிச் சண்டையாக அரசியலைக் காட்டுவது எதற்கு?

அரசியல் என்பது அனைவரின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் செயலைப் பற்றியது என்றால் அந்தக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பான பிரிவினரை – முதலாளிகள், அதிகாரிகள், நீதிமன்றங்கள், இராணுவம்-போலீசு துறை – ஊடக முதலாளிகள் – விட்டுவிட்டு கலெக்டர் ஆபீஸ பியூனையும், கட்சி ஆபிசின் குட்டி ரவுடிகளையும் காட்டுவது அயோக்கியத்தனம்.

படத்தில்  ஸ்கார்பியன் பாதரச ஆலையை மூடும் போராட்டத்தில் கருணாஸ் தீக்குளிக்கிறார். அப்போது மூடப்பட்ட ஆலையின் பாதரசக் கழிவுகளை அகற்றச் சொல்லிப் போராடும் என்.ஜி.வோவாக முட்டை மாலதி (அனுபமா) வருகிறார். தம்பி தனுஷான அப்பாவி அன்புவை காதலிக்கும் இவர் வெள்ளை லெக்கான் கோழி முட்டைகளுக்கு வண்ணமடித்து நாட்டுக் கோழி முட்டையாக விற்கிறாராம். எதற்கு? பாதரசக் கழிவால் ஐ.சி.யுவில் மூச்சை நிறுத்த இருக்கும் சிறுமிக்காக பணம் சேர்க்கவாம். இந்தக் கருமத்தைப் பார்த்து இந்தப்படத்தில் வரும் பாதரசக் கழிவு பிரச்சினை என்பது கொடைக்கானலில் யூனிலிவர் மூடிய தெர்மோமீட்டர் பாதரச ஆலையின் பிரச்சினை என்று எந்த ஊடகங்களுமே திரை விமர்சனத்தில் சொல்லவில்லை என்று வருத்தப்படுகிறார், சூழலியளார் நித்தியானந்த் ஜெயராமன். ரொம்பக் முக்கியம்!

பாதரசக் கழிவுக்காக திருட்டு முட்டை விற்கலாம் என்றால் அதை ஏன் இப்படி சில்லறையாக கஷ்டப்பட வேண்டும்? அப்பளக் கம்பெனி அர்ஜூன் போல ஹைடெக்காக திருடி தானம் பண்ணலாமே? போபாலில் யூனியன் கார்பைடு கொலையால் இன்றளவும் வாழ்விழந்து போராடும் மக்களெல்லாம் இப்படித்தான் திருட்டுத்தனம் செய்து வாழ்கிறார்களா? பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையால் குதறப்படும் மக்களை இதை விட இழிவு செய்ய முடியுமா? இதற்காகவே இயக்குநரை கொடைக்கானல் மக்கள் முச்சந்தியில் வைத்து விளக்குமாற்றால் விசாரிக்க வேண்டும்.

மேலும் கொடைக்கானலில் யூனிலீவர் கம்பெனிதான் பாதரசக் கழிவின் சூத்திரதாரி எனும் போது அதை ஏதோ அமைச்சர், மாவட்டம், கட்சி ஊழல் என்று மடை மாற்றுவதை என்னவென்பது? ஹிந்துஸ்தான் லீவரை பினாமி பெயரால் கூட வில்லன் என்று சொன்னால் என்ன நடக்கும்? வெற்றிமாறனோ, தனுஷோ கல்லா கட்ட முடியாது, இயக்குநர் துரை செந்தில் குமாரோ கதை சொல்ல முடியாது! பிறகு இவர்களுக்கு கதையில் எதற்கு இந்த அரசியல் பின்னணி?

அரசியல் என்ற பெயரில் இத்தகைய லோக்கல் ரவுடிகளை வில்லனாக்கிவிட்டு இந்த அமைப்பு முறையில் சட்டப் பூர்வமாகவே மாஃபியாக்களாக செயல்படும் பெரு ரவுடிகளான முதலாளிகள், நிறுவனங்களை மறைக்கிறார்கள்.

கொடி தனுஷ், ருத்ரா த்ரிஷா இருவரின் பாத்திர வார்ப்பும் லோக்கல் அரசியல்வாதிகளின் அக்கப்போர்களைப் போன்று மலிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. இருவரும் எதிரெதிர் கட்சிகளில் குறிப்பிடத்தக்க உள்ளூர் தலைவர்களாக உருவாகி எம்.எல்.ஏவாக போட்டி போடுகிறார்கள். மடியில் தலை சாய்த்து காதலிக்கவும் செய்கிறார்கள். அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று இயக்குநர் இந்தக் காதலுக்கு நியாய தத்துவம் சொல்கிறார். அந்தப் படிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் தோழரும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஆண் உறுப்பினரும் காதலிக்க முடியுமா? இல்லை வி.சி.கவின் ஆண் பிரமுகரும், பா.ம.கவின் பெண் பிரமுகரும் மணம் செய்ய முடியுமா?

இதெல்லாம் சாத்தியமில்லை என்றால் தனிப்பட்ட வாழ்வில் ஒரு மாதிரியும், பொது வாழ்வில் வேறு மாதிரியும் இருக்க சாத்தியமில்லை. அல்லது இரண்டு கட்சிகளுக்கும் ஒத்த அலைவரிசை வேண்டும். காங்கிரசின் அமைச்சரவையில் அன்புமணி பங்கேற்றதும், காங்கிரஸ் தலைவரின் மகளை அவர் மணம் செய்திருப்பதும் இயல்பான கொள்கைப் பொருத்தப்பாட்டில்தான்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் யார் ஆண்டாலும் ஒருவருக்கொருவர் பிசினசுக்கு இடையூறு இல்லாமல் இருப்பர் என்று இந்தக் காதலை சிலர் நியாயப்படுத்துகிறார்கள். அப்படியெனில் அது திருட்டுத்தனமே அன்றி கொள்கைப்பூர்வமான நல்லறம் சார்ந்தல்ல. கதையிலும் கூட த்ரிஷா, தனுஷின் காதல் கூட ‘கொள்கையினால்’ பிரிந்து கொலை வரைக்கும் போகிறது. அது வேறு பிரச்சினை!

dhanush
“டேய் போடா” என்கிறார் கொடி தனுஷ். “அண்ணே பாத்துப் போண்ணே” என்கிறார் அன்பு தனுஷ். இந்த டபுள் ஆம்லேட் திறனை, கவர் வாங்கும் மற்றும் வாங்காத விமர்சகர்கள் சிலாகிக்கிறார்கள்.

வழக்கமாக புரோட்டாவிற்கு ஒரு முட்டை ஆம்லேட் சாப்பிடுவோம். கொஞ்சம் காசும், வயிறும் இருந்தால் டபுள் ஆம்லேட் சாப்பிடுவோம். “டேய் போடா” என்கிறார் கொடி தனுஷ். “அண்ணே பாத்துப் போண்ணே” என்கிறார் அன்பு தனுஷ். இதுவே மாபெரும் வெரைட்டி நடிப்பு என்று இந்த டபுள் ஆம்லேட் திறனை, கவர் வாங்கும் மற்றும் வாங்காத விமர்சகர்கள் சிலாகிக்கிறார்கள். ஒழியட்டும். சரி இன்னும் தனுஷால் “மன்மதராசா” பாணி வடிவேலுவின் இடுப்பாட்ட நடனத்தை தாண்டி விஜய் போல கொஞ்சமாவது நளினமாகக் கூட ஆட முடியவில்லையே?

த்ரிஷாவின் நடிப்பு தனுஷையே தோற்கடித்துவிட்டதென அண்ணன் உண்மைத்தமிழனே (அண்ணே எப்படி இருக்கீங்க?) நிலை மறந்து பாராட்டுகிறார். சதா காலம் தயிர்சாதம் செய்யும் மாமி திடீரென நாட்டுக்கோழியை அடித்து சமைத்தால் ஏற்படும் அதிர்ச்சியால் உணரச்சிவசப்பட்டு வந்த வார்த்தை இது! த்ரிஷாவைப் பொறுத்தவரை உச்சரிப்பில் 1,2,3 என்று ஐந்திற்குள் வார்த்தைகளை நம்பரால் சொன்னவருக்கு இதில் மேடையில் ஒரு பத்திருபது எண்களை பேச வைக்கிறார்கள். அவ்வளவே! எனினும் த்ரிஷாவின் மொத்த சினிமா வாழ்க்கையை கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் சிரிப்பு எனும் நான்கு காலரைக்கால் கொஞ்சல் உணர்ச்சிகளால் ஒப்பேற்றியவரை மாபெரும் நடிகர் என்று சொன்னால் அல்பசீனோவே தற்கொலை செய்ய மாட்டாரா?

சாவித்ரியும், சரிதாவும் கோலேச்சிய நடிப்பில், ஆனந்த விகடன் அட்டைப் படத்தினால் மிஸ் சென்னையாகி, நடிகையாக போஸ் கொடுத்தவரின் நடிப்பே இப்படி ரசிக்கப்படுகிறது என்றால் அது முன்னர் சொன்ன கவுன்சிலர் அரசியலின் மறுபக்கம் எனலாம். த்ரிஷா போன்ற மேட்டுக்குடிப் பெண் மேடையிறங்கி கட்சி அரசியல் பேசும் போது, என்ன இருந்தாலும் இந்த பெண் “டி.சி.எஸ்”-ல் மேனேஜராக இருக்க வேண்டியது இப்படி கஷ்டப்படுதே என்று சாதாரணப்பட்டவர்களுக்கு  தோன்றுமில்லையா?

இதில் த்ரிஷாவை வில்லியாகவும், கொடியை நல்லவனாகவும் காட்டியிருப்பது குறித்து ஆல் பர்ப்பஸ் அங்கிள்கள் பெண்ணியக் குறியீடு பேசுகிறார்கள். கமான் அங்கிள்ஸ்… கூல் டவுண்!….. பாதரசக் கழிவு குறித்த ஆவணங்களை மறைப்பது, கட்சி செல்வாக்கை காப்பாற்றுவது போன்ற அஜால் குஜால் வேலைகளை செய்யும் கொடி தனுஷ் எப்படி நல்லவர்? எந்த வேலை வெட்டியும் இல்லாதவர் மினிஸ்டர் காட்டனில் ஜீப்போடு வலம் வருகிறார். ஏது காசு? கட்சியில் விசுவாசமாக இருப்பதற்காக மக்களை கைவிடலாம் என்று சாகிறவர் நல்லவர் என்றும், அதே கட்சி ஒன்றில் தலைவராக ஆவதற்கு ‘திட்டம்’ போடுகிறவர் கெட்டவர் என்றால் என்ன எழவிது?

“ஒன்று நாம் தலைவனாக வேண்டும், இல்லையென்றால் நமக்கு ஒரு தலைவன் வேண்டும்” என்பதே தமிழ் மக்களின் அரசியல் அடையாளம் என்று பத்தாயிரத்து பதினொன்னாவது தத்துவம் ஒன்றை நேர்காணலில் துணிந்து வெளியிடுகிறார் “கொடி” படத்தின் இயக்குநர். அவரையொத்த வயதினரான தனுஷையும், தயாரிப்பாளர் வெற்றிமாறனையும் அழைக்கும் போதெல்லாம் மறக்காமல் சார் போட்டு பேசும் இயக்குநரின் அடையாளம் என்ன? ஏன் வெறும் தனுஷ், வெற்றிமாறன் என்று பேசினால் பட வாய்ப்பு கிடைக்காதா?

இப்படி மனதிலும், அறிவிலும் ஆயிரத்தெட்டு அடிமைத்தனத்தையும், முட்டாள்தனத்தையும் கொண்டிருப்பவர்கள் தமிழக அரசியல் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் உபதேசிப்பதற்கு வெட்கப்படுவதில்லை. இத்தகைய அம்மணாண்டிகள் கோவணான்டிகளின் டிரஸ்ஸிங் சென்ஸு பற்றி கவலைப்படுவதாய் கடுப்பேற்றுகிறார்கள் மை லார்ட்!

ஐயா! நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, எண்பது சீன், எண்ணூறு பிரிண்ட் என்று நீங்கள் படம் எடுத்தீர்களென்றால் எங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லை. அதில் அரசியல், தத்துவம், மெசேஜ் என்று மிகவும் மெனக்கெட்டு சித்திரவதை செய்யாதீர்கள் என்பதை மட்டும் மெத்தப் பணிவோடு சொல்லிக் கொள்கிறோம்.

கன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி!