தஞ்சை நவம்பர் புரட்சி நூற்றாண்டு
தேர்தல் நாடகத்தில் கன்டெய்னர்களின் சர்வதிகாரம் தஞ்சையில் அம்மணமாய் ஆட்டம் போடுகிறது. அரங்கக் கூட்டத்திற்கு கூட தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓவிடம் அனுமதிக்காகத் தவமிருக்க வேண்டும் என்ற சூழலில் தஞ்சையில் நவம்பர் புரட்சிநாள் கொண்டாடப்பட்டது.
மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியின் 100ஆம் ஆண்டு மக்கள் சீன கலாசாரப் புரட்சியின் 50-ஆம் ஆண்டு மாபெரும் நக்சல்பாரி பேரெழுச்சியின் 50-ஆம் ஆண்டு மாமேதை காரல்மார்க்ஸ் பிறப்பின் 200-ஆம் ஆண்டு ஆகிய புரட்சிகர பாரம்பரியத்தின் சங்கமமாக 2016-2017 உள்ளதால் நவம்பர் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என தஞ்சை ம.க.இ.க.-வும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் முடிவெடுத்துள்ளனர்.
அதன் தொடக்கமாகத் தோழர்.அப்துல் காதர் நினைவு அரங்கத்தில் ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் தலைமையில் 06-01-2016 அன்று அரங்கக்கூட்டம் நடைபெற்றது. அரங்கக் கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் தோழர்.தேவன் “எல்லா தீமைகளையும் ஒழித்துக்கட்டிய நவம்பர் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை இந்தியாவிலும் சாதிப்போம். மக்களைக் குறிப்பாக இளைஞர்களை மீட்டெடுக்க சபதம் ஏற்போம்” என்றார்.
அடுத்து உரையாற்றிய தோழர்.பாலாஜி. “ம.க.இ.க வெளியிட்டுள்ள பிரசுரம் நவம்பர் புரட்சியின் சிறப்புகளை சாரமாகக் கூறியிருக்கிறது. நவம்பர் புரட்சி நாள் சாதனையின் சாரமான ‘சோசலிசம் – கம்யூனிசம் என்பது உன்னுடைய அதிகாரம்’ என்பதை உழைக்கும் மக்களுக்குப் புரிய வைப்போம்” என்றார்.
சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச்செயலாளரும் மக்கள் அதிகார தலைமைக்குழு உறுப்பினருமான தோழர்.காளியப்பன் “கம்யூனிசம் தோற்றுவிட்டது என்ற பொய் பிரச்சாரத்திற்கு பலர் ஆட்பட்டு உள்ளனர். புத்தர் தொடங்கி ஞானிகள் என்று சொல்லப்படுகின்ற எல்லோரும் ஏற்றத்தாழ்வற்ற சமூகமே தேவை என்றுதான் கனவு கண்டார்கள், பாடுபட்டார்கள். யதார்தத்தில் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் என்பது இல்லாமல்தான் இருந்தது. மனிதகுல தோற்றம் 2-இலட்சம் ஆண்டுகள் என்றால் அதில் வரக்க சமூகம் என்பது சில ஆயிரம் ஆண்டுகளே. ஒருசிலர் மட்டுமே சுகபோகத்தை அனுபவிப்பதும், பெரும்பான்மை ஏழ்மையிலும் துன்பத்திலும் வாழ்வதும் என்று உள்ள இதே வர்க்க சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எத்தனையோ பேர் கனவு கண்டார்கள்.
மார்க்சிய ஆசான்களில் ஒருவரான தோழர் லெனின் தலைமையில் 1917 நவம்பர் 7-இல் அந்தக் கனவுகள் நனவாகத் தொடங்கியது. உலகில் ஆறில் ஒரு பாகமான ரஷ்யாவில் எல்லா கேடுகளும் ஒழிக்கப்பட்டது.
ஓட்கா மதுவைக் குடித்துவிட்டு சோம்பிக் கிடப்பவனா உலகை ஆளப்போகிறான் என்று முதலாளித்துவவாதிகள் எக்காளமிட்டனர். ரஷ்யா நம்பமுடியாத ஒரு அதிசயம் என்று முதலாளித்துவ அறிஞர்களே வியந்தார்கள். தந்தை பெரியார் ரஷ்யாவிற்குச் சென்றுவிட்டு வந்து ‘சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான பொய்ப்பிரச்சாரத்திற்குப் பதில்’ என்று பிரசுரம் வெளியிட்டார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று எழுந்த முதலாளித்துவ புரட்சி ஜனநாயத்தைக் கொண்டுவரவில்லை. ஏன்என்றால் தனிச்சொத்துடமை ஒழிக்கப்படவில்லை… ஏற்றத்தாழ்வைத்தான் கொண்டுவந்தது. எங்கே தனிச்சொத்துடமை நிலவுகிறதோ, நிலைநாட்டப்படுகிறதோ அங்கே உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது. புரட்சி நடந்து முடிந்த ஆண்டுகளும், இட்லரின் பாசிசத்திற்கு எதிரான போராட்ட காலத்திலும் கடுமையான நெருக்கடியை ரஷ்ய மக்கள் எதிர்கொண்டார்கள், வெற்றியடைந்தார்கள்.
இது எப்படி சாத்தியமானது? சரியானது என்ற கருத்துக்கு வராமல் எந்தக்காரியத்தையும் யாரும் செய்ய முடியாது. லெனின் கூற்று நியாயம் என்று மக்கள் நம்பினார்கள். கடமை என்று ஏற்றார்கள். உலகத்தையே ரஷ்ய மக்கள் வியக்க வைத்தார்கள்.
எதிரிகளின் சித்தாந்தத்தை முறியடிக்காமல் புரட்சியை நிறைவு செய்யமுடியாது. அதற்கு நம்முடைய சித்தாந்தத்தை மார்க்சிய லெனினியத்தைப் பிரச்சாரம் செய்வது நமது கடமையாகிவிடுகிறது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையில் நாம் தெளிவு பெற்றுக்கொள்வதும், செயலாற்றுவதும் அவசர அவசிய தேவையாக உள்ளது. நாம் மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையைப் புரிந்து கொள்வதில் பின்தங்கியுள்ளோம் என்பதை உணர்ந்து ஆழமாகவும், வேகமாகவும் கற்று நடைமுறையில் செயல்பட்டு புரட்சிகர கடமையாற்றுவோம்” என்றார்.
நவம்பர் புரட்சிநாள் வாழ்த்துக்களைத் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. அன்று இரவே நவம்பர் புரட்சிநாள் சூளுரைப்பு சுவரொட்டிகளைத் தஞ்சை நகரில் ஒட்டிவிட்டு (திங்கள்) 07-11-2016 காலையில் மானோஜிப்பட்டி உப்பிலிமண்டபம் அருகில் கொடியேற்று நிகழ்ச்சியில் தோழர்கள் சங்கமித்திருந்தனர். ம.க.இ.க தோழர் காந்தி தலைமையில் தோழர் இராவணன், ம.க.இ.க கொடியை ஏற்றினார். இந்தியப் புரட்சியின் வருகையை வரவேற்று இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை மக்களுக்கு வழங்கினர். தஞ்சை இரயிலடியிலும் நவம்பர் புரட்சிநாள் முழக்கமிட்டு பிரசுரம் விநியோகித்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் சுமைபணித்தொழிலாளர் சங்கத்தலைவர் தோழர்.சேவையா தலைமையில் ம.க.இ.க, ஏ.ஐ.டி.யு.சி தோழர்கள் அணிதிரண்டனர். ஏ.ஐ.டி.யு.சி மாநிலச் செயலர் தோழர் சந்திரகுமார் மாவட்ட செயலர் தோழர்.தில்லைவனம், கட்டுமானசங்கச்செயலர் தோழர்.பி.செல்வம், அரசுப் போக்குவரத்து சங்கப்பொதுச்செயலர் துரை.மதிவாணன், அனைத்துக்கட்சி – இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் விடுதலைவேந்தன், மக்கள் கலைஇலக்கியக்கழக தஞ்சைக்கிளைச்செயலர் தோழர் இராவணன் ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குச் சேவைபுரிந்து வரும் மாற்றுத் திறனாளி தொழிலாளி செல்வம், செருப்பு தைக்கும் தொழிலாளி குபேந்திரன், புத்தகங்கள் மற்றும் படங்கள் விற்பனையாளர் காதர்பாட்சா, பூ வியாபாரி விஜயா, தேனீர் கடை தொழிலாளி ராஜா ஆகியோருக்கு அவர்கள் பணிசெய்யும் இடத்திற்குச் சென்று சால்வை அணிவித்து அவர்களது உழைப்பையும், நேர்மையையும் கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சி ஒரு நாள் மட்டுமல்ல. ஆண்டு முழுதும் தொடரும் நவம்பர் புரட்சியின் வீச்சைத் தஞ்சையிலும் பரவச்செய்யும் என்ற நம்பிக்கை முகமலர்ச்சியைப் பங்கேற்ற தோழர்களிடம் காணமுடிந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
வினவு செய்தியாளர்.