Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !

கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !

-

jaya-mafia-rule-from-apolo“எனக்குப் பிறகு… பேரழிவு” என்று பிரெஞ்சுப் புரட்சியில் தலையை இழந்த மன்னன் பதினான்காம் லூயி கூறியதாகச் சொல்வதுண்டு. எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம். தனக்கு அடுத்தபடி இன்னார் என்று சொல்வது கூட, இன்னொரு நபரை “தனக்கு நிகரானவர்” என்று தானே ஒப்புக் கொண்டதாகிவிடும் என்று அஞ்சுபவர்கள். இவர்கள், தன்னுடன் சேர்த்து தனது மனைவிமார்களையும் அடிமைகளையும் பிரமிடுக்குள் புதைக்கச் சொன்ன எகிப்திய மன்னர்களைப் போன்றவர்கள்.

இந்திய ஜனநாயகத்தின் போலிப் பெருமையையும், பிரதமர்கள், நீதியரசர்கள், ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட அவற்றின் பிரதிநிதிகளுடைய போலி கவுரவத்தையும், முச்சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தியதிலும், இந்த அரசமைப்பின் நிர்வாண சொரூபத்தை அதன் பக்தர்களுக்குத் தரிசிக்கத் தந்ததிலும் ஜெயலலிதாவுக்கு ஈடு சொல்ல இந்திய அரசியலில் அநேகமாக வேறு யாரும் இல்லை. அந்த திசையில் இப்போது புதிய எல்லைகளைக் காட்டி வருகிறார் ஜெயலலிதா.

செப்-22 அன்று ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கவர்னர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் அவரைப் பார்ப்பதற்கே அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்களைத் தவிர சசிகலாவும் மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த சிலரும் மட்டுமே அவரைப் பார்ப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு – இரண்டு நாளில் வீடு திரும்புவார் என்றார்கள். அங்கிருந்தே பணிகளை கவனிக்கிறார் என்றார்கள். “அப்படியானால் புகைப்படத்தை வெளியிடலாமே” என்று கருணாநிதி கேட்டவுடன் முதல்வரின் “உடல்நிலையை அரசியலாக்குகிறார்” என்று குற்றம் சாட்டினார்கள். கேட்பவர்கள் மீது வைகோ, தா.பா. போன்ற அடிப்பொடிகளை ஏவினார்கள். சமூக ஊடகங்களில் எழுதுவோர் மீது வதந்தி பரப்புவதாக வழக்கு போட்டுக் கைது செய்தார்கள்.

அரசு முடங்கிவிட்டது என்று கருணாநிதி அறிக்கை விட்டவுடனே, “முதல்வர் ஆலோசனைப்படி அவரது துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக” கவர்னரின் அறிக்கை வந்தது. ஜெயலலிதாவை கவர்னர் சந்திக்கவில்லை, ஜெ. கையெழுத்திட்ட கடிதமும் தரப்படவில்லை என்பது நாடறிந்த உண்மை. அடுத்தபடியாக மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அங்கீகரித்து ஜெயாவின் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. ரேகை வைத்து சொத்துகள் பினாமி பெயருக்கு மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

சசிகலா குடும்பம் சார்ந்த கும்பலும், ஓய்வு பெற்ற அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணனும்தான் அரசின் முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறார்கள் என்றும் ராம் மோகன ராவ் மூலம் அவை அதிகாரபூர்வ முடிவுகளாக்கப்படுகின்றன என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். ஒரு வகையில் பார்த்தால், இதில் புதிய செய்தி ஒன்றுமில்லை. தேர்தல் வெற்றியில் தொடங்கி ஆட்சி நிர்வாகம் வரை அனைத்துமே சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும்தான் நடந்து வருகின்றன. கொடநாட்டிலும், பையனூர் பங்களாவிலும், போயஸ் தோட்டத்திலும் நடந்து வந்த கும்பலாட்சி, இப்போது அப்போலோவுக்கு இடம் மாறியிருக்கிறது. அவற்றையெல்லாம் அங்கீகரித்து வக்காலத்து வாங்கிய பார்ப்பனக் கும்பலும், ஊடகங்களும் இப்போதும் வக்காலத்து வாங்குகின்றன.

சட்டமன்ற விவாதம், அமைச்சர்களின் அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் 110 என்ற விதியைக் கொண்டு முறியடித்தவர் ஜெயலலிதா. 110 என்ற எண்ணுக்குப் பின்னால் திரைமறைவிலிருந்து அந்த முடிவுகளை எடுத்து வந்த வந்த மாஃபியா இப்போது வெளியே வந்திருக்கிறது. மாஃபியா ஆட்சி நடத்துகிறது. ராஜ முத்திரையாக அம்மாவின் கட்டைவிரல் ரேகை.
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க