privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய் !

இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய் !

-

த்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுகளின் மேம்பாட்டிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பெருமளவில் செலவிடப்படாமலிருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட/ பழங்குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ரூ. 2.8 லட்சம் கோடிகள் மத்திய மாநில அரசுகளால் செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

atrocity-against-oppressed-castes-2
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியைத் திருப்பிவிட்டு டெல்லியில் நிர்மாணிக்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு கிராமம்; (கோப்புப் படம்)

தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு என சொல்லிக்கொண்டு ”பட்டியல் சாதியினருக்கான துணைதிட்டம்” (Scheduled Caste Sub Plan), மற்றும் ”பழங்குடியினருக்கான துணை திட்டம்”(Tribal Sub Plan) ஆகிய பட்ஜெட் வறைமுறைகள் 70-களின் இறுதியில் கொண்டுவரப்பட்டன. இதன்படி மத்திய மாநில அரசுகள் தங்களின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட/பழங்குடிளின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீகித நிதியை மேற்கண்ட திட்டங்களில் ஒதுக்கி செலவிடவேண்டும்.

அதன்படியும் இறுதியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் இந்தியாவில் மத்திய பட்ஜெட்டில் 16.5% பட்டியல் சாதியினர் துணைத்திட்டத்திற்கும், 8.6% பழங்குடியினர் துணைதிட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மேற்கண்ட திட்டங்கள் அமலுக்கு வந்த காலம் முதல் 2014-15 ஆண்டுவரை ஒதுக்கப்பட்ட தொகை என்பது, ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையைக் காட்டிலும்
சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் (5,27,723.72 ) குறைவாகும்.

இது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடைசி மூன்று ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், 2012-13 ஆண்டில் மட்டும் ரூ. 3952 கோடிகளும், 2013-14-ல் 6839 கோடிகளும், 2014-15 மிக அதிகபட்சமாக 20,513 கோடிகளும் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் திருவாளர் மோடி ஆட்சியில் இந்த தலித் வெறுப்பு (பயன்படுத்தப்படாத நிதியின் அளவு) முந்தைய ஆண்டுகளை காட்டிலும் 250% மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோடிதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலுக்கு தலைகுனிவதாக கண்ணீர் வடிக்கிறார். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடையும் தலித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

(இடது) சிதிலமடைந்த நிலையில் உள்ள சென்னை எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் விடுதிக் கட்டிடம். (கோப்புப் படம்)
(இடது) சிதிலமடைந்த நிலையில் உள்ள சென்னை எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் விடுதிக் கட்டிடம். (கோப்புப் படம்)

மாநில வாரியாக எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதில் ஆந்திரா, உத்திரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், பழங்குடிமக்கள் நிதியில் ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் முன்னிலை வகிக்கின்றன. 2005 முதல் 2014 ஆண்டுகளில் ஆந்திரா மாநிலம் செலவிடாத தொகை ரூ.19,367 கோடி. உத்திரபிரதேசம் ரூ.16,970 கோடி. 2014-15 ஆண்டிற்கான நிதியில் 61% (ரூ.4,643) தொகையை செலவு செய்யாமல் வைத்திருக்கிறது தெலுங்கானா. பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் போகவிடாமல் தடுப்பதாக ஆளும் வர்க்கம் சொல்லிக் கொள்கிறதே, அந்த மாநிலங்களின் யோக்கியதை இது.

தலித்திய மாயாவதியின் உத்திரபிரதேசம் பயன்படுத்தபடாத நிதியில் முன்னணி மாநிலங்களின் ஒன்றாக இருக்கிறது. மாயாவதியின் ஆட்சிக் காலமான 2007-12 ஆண்டுகளில் சுமார் 3500 கோடிகளுக்கு மேலாக செலவிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை2002-2015 ஆகிய 13 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 கோடிகள் செலவிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான நிதியைச் செலவிடும் விசயத்தில் கேரளாவும் தமிழகமும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவாயில்லை என்கிறது, இந்தப் புள்ளி விவரம்.

நிலவும் அரசமைப்பில் பங்கேற்பதன் மூலம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏற்படுத்த்த முடியும் பேசும் தலித் தலைவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கூட பெற்றுத்தரமுடியவில்லை என்பதே யதார்த்த நிலை.

சரி, செலவு செய்யப்பட்டது யாருக்கு ?

atrocity-against-oppressed-castes-3
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைத் தாமதமின்றி வழங்கக்கோரி திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)

ஒதுக்கப்பட வேண்டிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கிய தொகையும் செலவிடப்படவிலைலை என்பவை ஒருபுறம். செலவிடப்பட்ட தொகை யாருடைய நலனுக்காக செலவிடப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு நல்ல உதாரணம் குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு திட்டம். இத்திட்டம் பழங்குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்று அம்மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அவர்களுக்குரிய நிவாரணமோ, மாற்று இடமோ தரப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, பழங்குடி மக்கள் துணைத்திட்ட நிதியை நர்மதா அணைக்கட்டு திட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கியிருக்கிறது குஜராத் அரசு. அது மட்டுமல்ல, விவேகானந்தரின் 150-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களுக்கும் இந்த நிதியை குஜராத் அரசு திருப்பி விட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது தெகல்கா.

ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆந்திரா, தெலிங்கானா மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலன் என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகை, என்னென்ன இனங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை எடுக்க முடிந்தால் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள இயலும். பழங்குடி மக்களுக்கான நிதியை பழங்குடி ஒழிப்பு – மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்டிருப்பதையும் நாம் காணக்கூடும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தாழ்தப்பட்ட மக்கள் மேம்பாட்டு நிதியை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பிவிடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மாநிலத்திற்கு விமானம் வாங்குவதற்கும், முதலமைச்சர் வீட்டிற்கு ஹெலிபேட் அமைப்பதற்கும், மாவட்ட தலைநகரங்களில் சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதேதான் பிற மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. தொகையில் மட்டும்தான் வேறுபாடு.

மொத்தத்தில் இத்திட்டங்களினால் கணிசமாகப் பயனடைகிறவர்கள் அமைச்சர்கள், கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள், காண்டிராக்டர்கள்! ஆனாலும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். தலித் மக்கள் நலனுக்காக எந்த ஆட்சி அதிகம் நிதி ஒதுக்கியது என்று தங்களுக்குள் சண்டையிட்டும் கொள்கிறார்கள்.

இது, இந்தியாவின் பெரிய ஊழல் முறைகேடுகளில் ஒன்று. எல்லா கட்சிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆனால் இதை ஊழல் என்றோ முறைகேடு என்றோ எவரும் பேசுவதில்லை. தீண்டாமையையும் சாதி ஆதிக்கத்தையும் ஊழலாகவோ, முறைகேடாகவோ கருதாத மனப்போக்கு இதனை எப்படி ஊழலாகக் கருத முடியும்?

ஒருபுறம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகள், பெருகி வரும் சாதி சங்கங்கள், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறைகள், முன் எப்போதைக் காட்டிலும் தேர்தல் அரசியலில் அதிகரித்துவரும் சாதி அமைப்புகளின் செல்வாக்கு, பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களுடைய நிலத்தை அபகரித்துக் கொள்வதையே வளர்ச்சியாகச் சித்தரிக்கும் பொருளாதாரக் கொள்கை – தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கான நிதி ஒதுக்கீடு என்ற இந்தப் பிரச்சினைய மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பாருங்கள். நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தைச் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எத்தனை அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கயர்லாஞ்சி படுகொலை வழக்கைக் கையாண்ட அதிகாரிகளில் ஆகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தபோதிலும், போட்மாங்கே குடும்பத்துக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கவில்லை. நிதி கிடைக்காததில் வியப்பேதும் இல்லை. தேர்தல் அரசியல் மூலமாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும் என்று பேசுவதற்கும், பேசுபவர்களை நம்புவதற்கும் இன்னமும் ஆளிருக்கிறதே, அதுதான் வியப்புக்குரியது.

– அமலன்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________