Friday, May 2, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

-

விவசாயிகளின் சாம்பலில் பிறக்கும் புத்தாண்டு.

farmer-revised-post

ஓவியம்: முகிலன்
***

தற்கொலை செய்யாதே !  போராடவா !

ஒரே  நாளில் 11 விவசாயிகள் இறந்திருக்கின்றனர் என்ற தகவலோடு புத்தாண்டு பிறந்து விட்டது.  இவர்களில் பலர் வாங்கிய கடனுக்காகவும் தான் வைத்த பயிர் கண்முன்னே காய்ந்துபோய் விட்டதே என்ற சோகம் தாங்க முடியாமலும் மாரடைத்தும், வயலிலே மயங்கி விழுந்தும் இறந்து போய் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்த விவசாயிகள் தற்கொலைப் பட்டியலில் இப்போது தமிழகமும் சேர்ந்து விட்டது. இங்கே யாரும் விவசாயிகளின் தற்கொலையை ஆத்திரத்தோடு பேசவதில்லை. மல்லையா, அதானி போன்ற முதலாளிகளுக்கு கடன்கொடுத்தும், கடனை ரத்து செய்தும் பாதுகாக்கும் அரசு விவசாயித்தை ஒழித்துக்கட்ட மானியத்தை நிறுத்தியும், கடன் கொடுப்பதை மறுத்தும் விவசாயத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. இது போக போராடி கடன் வாங்கிய விவசாயிகளை தற்கொலை மரணம் ஈர்த்துக் கொள்கின்றது.

அனைவரும் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்து அனைத்து மனித உயிருக்கும் உணவளிக்கும் உழவனின் உயிர், தினந்தோறும் பறித்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் பயங்கரவாதத்தை யாரும் கண்டு கொள்ளாமல் மது போதையில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருப்பது கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் இன்று உயிர் குடிக்கும் நஞ்சு நிலமாக மாறி நிற்கிறது.

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்று கேட்டபோது இங்கு எத்தனை பேர் அதிர்ச்சியடைந்தார்கள்? அதே தற்கொலை இங்கு நடக்கும்போதும் அதே பாரமுகம். சோற்றை தட்டில் பார்க்கும் போதெல்லம் ரத்தவாடையாக வீசுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவு உற்பத்தி செய்தவர்கள் தமிழ் மக்கள். அந்த உணவு உற்பத்தி என்பது நமது மரபில், பாரம்பரியத்தில் ஒட்டிய ஒன்று. இருக்க குடியிருப்பு இல்லாத போதும், வறுமை தன்னை வாட்டியபோதும் ஏதோ போராடி வாழ்ந்த விவசாயி இன்று தன்பயிர் தண்ணீர் இல்லாமல் கருகியபோது மணம் தாங்கிக்கொள்ளாமல் தற்கொலையை நாடுகிறான். விவசாய உற்பத்தியில் லாபம் இல்லை நட்டமே என்று தெரிந்தபோதும், தன்னால் ஏதாவது ஒரு நகரத்திற்கு சென்று பிழைப்பு நடத்திக்கொள்ள முடியும் என்ற குறைந்தபட்ச வாய்ப்பு இருந்தபோதும் அவர்கள் விவசாயத்தை விட மறுக்கிறார்கள்.

விவசாயம் என்பது லாபத்திற்கானதல்ல மனித குலத்தை காக்கும் அனைத்து ஜீவராசிகளுடன் ஒன்றியது. கடந்த காலத்தில் பண்ணையார்களிடமும், மிராசுதாரர்களிடமும் அடிமைப்பட்டு விவசாயம் செய்தாலும் தனக்கு ஒருபடி நெல் அதிகமாக கிடைக்காது என்று தெரிந்த பின்னும்கூட  வயலில் நெற்பயிரை காயவிடமாட்டான் அந்த விவசாயி. ஆனால் நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று மார்தட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி தினம்தினம் ஒரு தகவலை, இல்லை ஒரு உத்தரவை போடும் மோடி, தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இறந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? விவசாயிகள் தற்கொலைகளை விட போயஸ்தோட்டத்து செய்திகளை மட்டுமே நாட்டின் பிரச்சனையாக காட்டுகிறார்களே ஊடகங்கள்? வெறும் வாய் சவடால்களை மட்டுமே அடித்து வருகிறதே ஓட்டுக்கட்சிகள்?

மக்களை போராடாமல் ஒடுக்குவற்கு போலீசும், நீதி மன்றமும். வரி வசூல் செய்வதற்கு அரசு. எத்தனை நாட்களுக்கு தான்  அமைதி காக்க போகிறோம். இதில் இருந்து மீள வழியில்லையா என்று பதைபதைத்து தற்கொலை செய்வதை நிறுத்த வேண்டாமா? இந்த புத்தாண்டு என்பது மற்றவர்கள் சொல்வது போல் கொண்டாட்டம் அல்ல. மாறாக தமிழகத்தில் இறந்துபோன 70 விவசாயிகளின் கொலைகளுக்கு தீர்வு காணவேண்டிய போராட்ட தினம்.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை. இதே உழவன் நக்சல்பாரி தலைமையில் மாபெரும் இந்திய உழவர் புரட்சிக்கு தலைமை தாங்கினான். அடிமை விலங்கை உடைத்தெறிந்தான். அன்று பண்ணைகளின் கொட்டத்தை மட்டுமல்ல, விவசாயிகளை இன்றுவரை கொல்லும் அரசையும் அஞ்சாமல் எதிர்கொண்டு உரிமையை நிலைநாட்டினான். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உழவன் உரிமையை மீட்டெடுத்தான். அந்த மரபு நமக்கு மட்டும் இல்லையா என்ன? நமது விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசிடம் மனு கொடுத்தது போதும், கெஞ்சியதும் போதும். இந்த கொலைகாரர்களிடமே நீதி கேட்பதை நிறுத்துவோம். மணளை அள்ளி ஆற்றை சீரழித்தவர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிமன்றங்கள். கழிவு நீரை வெளியேற்றி ஆற்றை சாக்கடையாக மாற்றி விவசாயம் செய்ய முடியாமல் செய்தவர்களும் இவர்களே. கொள்ளையடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நாட்டுக்கு சோறுபோடும் நம் விவசாயிகள் ஏன் சாகவேண்டும்? நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவசரத் தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிசிச்சைக்கு, (உழவர் எழுச்சிக்கு) தலைமை தாங்க காத்திருக்கிறது நக்சல்பாரி.

– புத்தாண்டு தினத்தில்(01-01-2017) விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் வட்டார செயலர் தோழர் கோபிநாத் ஆற்றிய உரை…

தகவல்: விவிமு, பென்னாகரம் வட்டம், தருமபுரி.
தொடர்புக்கு @ 9943312467

இணையுங்கள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க