பச்சைப் படுகொலை
பயிர் கருகுது
காணச் சகியாமல்
கண்கள் இமையாமல்
இதயம் துடிக்காமல்
உயிர் உறையுது.

விவசாயி
நெஞ்சு வெடிக்குது
விளைநிலம்
துடித்து அடங்குது.
கடன் சுமை
காத்திருக்கும் நம்பிக்கை
மானம் மரியாதை
கடைசிப் பிடிமானம்…
எல்லாம் சேர்ந்த
நெற்பயிர் அழிவு
தற்கொலை ஆகுமா?
மேலாண்மை வாரியம் நிறுத்தி
காவிரி ரத்தம் மறித்து
கைக்காசையும்
செல்லாதாக்கிப் பறித்து
நாத்தாங்கால் மூச்சை
அணு அணுவாக நெறித்து
பச்சை படுகொலை செய்யுது
பா.ஜ.க.
பாடை கட்டுது அ.தி.மு.க.
ஊரையே அறுவடை செய்ய
அம்மா, சின்னம்மா
உழவன் பிணம் விளையும்
ஒரு மா, ரெண்டு மா!

தேசத்துரோகிகள்
சேகர்ரெட்டிகளை
தோண்டத் தோண்ட பல கோடி
மோசம் போன விவசாயி
வெடித்த நெஞ்சிலும்
விலகாத சேத்து நெடி!
நெல்லோடு
உயிர் அலைந்து
நீராகாரத்தில்
பசி அலைந்து
பொய்த்துப் போன கனவில்
நெஞ்சாங்குலை குலைந்து
சரிந்த விவசாயி
காய்ந்த தாளின் உடலாக.

புல்லோடு பூவழித்து
நீராதாரத்திலும்
பணம் அளந்து
ஊற்றுக் கண்ணையும்
தோண்டி எடுத்து
ஆற்று மணலையும்
தின்றவர்கள்
குற்ற உணர்ச்சி
கூச்சமின்றி
கட்சிகளாக நம்மைச் சுற்றி.
பசுமை புரட்சி
வெண்மைப் புரட்சி
பாக்டம்பாஸ்
பல வகை உரங்கள்…
விவசாயிகளை
முன்னெற்றுவதாய் சொல்லி
மகசூல் பார்த்த முதலாளிகள்.
கடைசியில்
பச்சைத் தண்ணீருக்கு வழியில்லாமல்
மாடு சாகுது,
கடையில்
பால்டாயில் வாங்கவும் காசில்லாமல்
விவசாயி
பார்த்து சாகிறான்!
அரசியல் களை
எடுக்காமல் – இனி
அருகம் புல்லும்
முளைக்காது
ஆள அருகதையற்ற
அரசமைப்பை ஒழிக்காமல்
இனி யாருக்கும்
உயிர் நிலைக்காது!
சோறு திங்கும் அனைவருக்கும்
சொந்தமான துக்கம் இது.
உழவு
இழவான நாட்டில்
பொங்கல் ஒரு கேடா?
உழவருக்காக
பொங்காவிட்டால்
இது உயிருள்ள நாடா?
– துரை. சண்முகம்