2017, ஜனவரி முதல் நாள் மெக்சிகோ அரசு 20% க்கும் அதிகமாக பெட்ரோல் விலையை உயர்த்தியதன் எதிர்வினையாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு என்பது மட்டுமல்லாமல் அரசின் அலட்சியம், ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளதால் இந்தப் போராட்டம் காட்டுத்தீ போல 14 க்கும் அதிகமான மாநிலங்களில் பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் போராட்டக்காரர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“எங்களிடம் கார் இருப்பதனால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கான செலவீனங்களும் அதிகரிக்கும்” என்று காப்பீடு நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக இருக்கும் ஹெக்டர் பெரெஸ் கூறுகிறார். மெக்சிகோ மக்களின் குறைந்தபட்ச நாள்கூலி 4 டாலர்கள் (280 ரூபாய்) என்று இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு அவர்களது பொருளாதாரப் பிரச்சினைகளை மென்மேலும் அதிகரிக்கும் என்பதை அம்மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.
மெக்சிகோவின் தானியங்கி மோட்டார் தொழிற்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு மூலதனமிட்டு இருக்கின்றன. மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிகவரி விதிக்கப்படும் என்று ஜனவரி 3 ஆம் நாள் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணிநேரங்களிலேயே வில்லா டி ரெய்ஸில் சுமார் 1.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட இருந்த ஒரு தொழிற்சாலைக்கான திட்டத்தை இரத்து செய்வதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்தது.
இந்த காரணங்களால் இந்தப் போராட்டத்திற்கான அடித்தளம் நீறு பூத்த நெருப்பு போல சில மாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு என்பது மெக்சிகோ மக்களால் ஏற்றுகொள்ள முடியாத ஒரு கொடுஞ்சுமையாக மாறி இந்தப் போராட்டத்திற்கான தீப்பொறியாக அமைந்து விட்டது.
மெரினாவில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமி போராடியதை முதன்முறையாக பார்த்த நாம் மெக்சிகோ நாட்டில் அடிக்கடி நடக்கும் இத்தகைய போராட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கும் ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள், முதலாளிகள், அரசுகள் மீது மக்கள் அதிருப்பதி அடைந்திருப்பதோடு இவர்களைக் காப்பாற்ற வரும் போலீசை எதிர்த்து அன்றாடம் போராடுகின்றனர்.











படங்கள் : நன்றி – RT