Saturday, May 15, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் அடிக்கடி சிறைக்கு வருவோம் !

அடிக்கடி சிறைக்கு வருவோம் !

-

ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு  ஊழல் செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையும் என்று ஊடகங்கள் எழுதுவது முரண்பாடானது. சந்தர்ப்பவாதமானது. நீதிபதி குன்ஹா  தீர்ப்பின் போது ஜெயா சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக குண்டர்கள்  கலவரம் நடத்தினார்கள். இதற்கு அரசோ, நீதிமன்றமோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை பற்றி ஊடகங்கள் கண்டும் காணாமல் இருந்தன. ஆனால்  குமாரசாமி தீர்ப்பின் போது அதனை ஆரவாரமாக வரவேற்று பத்திரிகைகள் எழுதியதை நாம் மறக்க முடியாது.

இந்த சூழலில், மெரீனா கடற்கரையில் உள்ள குற்றவாளி ஜெயா சமாதியை அகற்ற வேண்டும், ஜெயாவின் படங்கள், அரசு அலுவலகம், பள்ளி பாடப்புத்தகம் உட்பட எங்கும் இருக்க கூடாது. இது எதிர்கால சமூகத்திற்கு ஒரு தவறான செய்தியாக மாறிவிடும்  என்று   சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் மக்கள் அதிகாரம் அறிவித்தது.

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாசலம்  சட்டமன்ற அலுவலகத்தை தோழர் ராஜு  தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தோழர்களை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது காவல்துறை. பத்து நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் தோழர்களிடம் சிறை அனுபவத்தை கேட்டோம்.

தோழர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

டந்த 20ம் தேதி நாங்கள் விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினோம். காவல்துறை எங்களை கைது செய்து  மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

உங்கள் போராட்டம் தமிழகத்தில் பரபரப்பு செய்தியாக மாறிவிட்டது. மேலதிகாரிகள் எங்களை கடிந்து கொள்கிறார்கள். அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறோம் என்றது காவல்துறை.  அதே சமயம் மண்டபத்திற்கு வெளியில் அதிமுக குண்டர்கள் இவர்களை கைது செய்ய வேண்டும், சட்டமன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டனர் என்று கூறி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றனர். அதிமுகவினரை சமாதனப்படுத்தும் நோக்கிலே எங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் (IPC-506,353,447,158,147,148) கீழ் வழக்குகள்  பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது  காவல்துறை.

பத்து நாட்களுக்கு பிறகு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை  பிணையுடன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் காலை 10.30 மணிக்கும்  மாலை 5.00 மணிக்கும் தவறாமல்  பதினைந்து நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளது.

பிணை விவாதத்தில், மக்கள் அதிகாரத்தின் தோழர்களை பிணையில் விடுவித்தால் அவர்கள் நேராக நெடுவாசலுக்கு செல்வார்கள். எங்கு போனாலும் போராட்டம் நடத்துவார்கள். ஏற்கனவே அவர்கள் மீது டாஸ்மாக்கை உடைத்த வழக்கு இருக்கிறது. அதனால் அவரை விடுவிக்க கூடாது என கடுமையாக ஆட்சேபித்தார்  அரசு தரப்பு வழக்கறிஞர். உளவுப்பிரிவினரும் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அரசின் கடுமையான நெருக்கடி காரணமாக ஒரு நாள் தள்ளிவைத்து விட்டு வேறு வழி இல்லாமல் இந்த பிணை வழங்கியுள்ளது.

அதற்கு காரணம் வெளியில் மக்கள் அதிகாரம் தொடர் பிரச்சாரம், துண்டறிக்கை விநியோகம், தமிழகமெங்கும் போராட்டம் தொலைக்காட்சி விவாதங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயா படத்தை  அகற்ற கோரி பல்வேறு வழக்குகள் என்று மக்களிடையே பிரச்சாரம் நடந்தது.  இதனை ஆயிரக்கணக்கான மக்களிடம் அரசியல் பிரச்சாரமாக மாற்றியது மக்கள் அதிகாரம். இல்லையென்றால் பிணை வழங்கியிருக்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை ஒடுக்குவதற்கு காரணம், இது போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் பரவி விடுகிறது என்ற அச்சம் தான்.  பல்வேறு  கட்சிகளும் இந்த சம்பவத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர். சில அரசு அலுவலகங்கில் தாங்களாகவே ஜெயா படத்தை எடுத்து விட்டு திருவள்ளுவர் படத்தை மாற்றியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் குற்றவாளி படத்தை வைத்து கொள்ள கூடாது என்ற சிந்தனையை விதைத்துள்ளது.

எங்களை  காவல்துறை கைது செய்த போதும், சிறையில் சென்ற போதும், மக்களை அதிகாரம் செய்தது  தவறு என்று எள்ளளவும் சொல்லவில்லை. சிலர் வெளிப்படையாக ஆதரித்து பேசினார்கள். எங்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது. யாராலும் எங்களை வெறுக்கவும் முடியாது. எந்த சிறையும்  எங்களை ஒடுக்கவும் முடியாது.

தோழர் மணியரசன்

ங்களை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வளாகத்தை சுற்றி  காவல்துறை இருந்தும், மக்கள் அதிகார தோழர்கள் அங்கு வசிக்க கூடிய பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்து சரியாக பத்து மணிக்கு அந்த வீடுகளில் இருந்து கொடி, பேனர், தட்டி மற்றும் தற்காப்பு உபகரங்களை எடுத்துக் கொண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில்,   மின்னல் வேகத்தில் சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து ஜெயலலிதா படத்தை அகற்றினோம்.

தோழர் மணியரசன்

நாங்கள் ஜெயிலுக்குள் இரவில் சென்றதால் அங்கு உள்ள கைதிகள் யாருக்கும் நாங்கள் வந்தது தெரியவில்லை. காலை 6 மணிக்கு மேல்  நாங்கள் பனியனுடன் இருந்ததை  பார்த்து விட்டு சக கைதிகள் எங்களை தேனீக்கள் சூழ்வதை போல் சூழ்ந்து கொண்டு  மக்கள் அதிகாரம் என்றால் என்ன, என்று ஆர்வமாக கேட்க தொடங்கினார்கள். ஏன் வந்தீர்கள் என்று கேட்டனர். “நாங்கள் குற்றவாளி ஜெயா படத்தை அகற்ற வேண்டும் என்று போராடினோம். அதற்காக எங்களை கைது செய்தார்கள் என்று கூறியதும்  எங்களை  வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து கைதிகள் அனைவரும் எங்களுடன் பேசுவது, நாங்கள் பாடல் படும் பொழுது ஆர்வமாக வந்து கேட்டு அவர்களும் பாடுவது என்று அன்று முழுவதும் உற்சாகமாக இருந்தனர். நாங்கள் தொடந்து கைதிகளுக்கு அரசியல் கற்று கொடுத்ததை  கவனித்த சிறை நிர்வாகம் நாங்கள் இருந்தால் கைதிகளுக்கு உரிமையை கற்று கொடுத்து விடுவோம் என்று அஞ்சி அன்று மாலையே எங்களை தனிச்சிறைக்கு மாற்றியது.

அதனால் என்ன, அங்கே உள்ள தண்டனை கைதிகளிடம் அரசியல் பேசினோம்.

சிறையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, எங்கள் பத்து பேருக்கும் போர்வை, தட்டு குறைவாக கொடுத்தனர்.  காலை உணவை மறுத்து போராடியதும் எங்கள் தேவையை நிறைவேற்றினார்கள். தினமும்  மருத்துவரையே எங்கள் அறைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள், மனு எழுதுவதற்கு தாள்கள், அஞ்சல் கடிதம் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை கேட்டோம், அனைத்தையும் தாமதிக்காமல் உடனடியாக செய்து கொடுத்தனர்.  விளையாடுவதற்கு மைதானத்தை சுத்தம் செய்து கொடுத்தனர்.

கழிப்பறை  மிக மோசமாக இருக்கும் அதை சுத்தம் செய்வதே கிடையாது. நீங்கள்  வந்த பிறகு தான் இதனை சுத்தம் செய்தார்கள், கொசு மருந்து அடித்தார்கள்.  நாங்கள் கேட்டால் எங்களை அடிப்பார்கள். உங்களோடு சேர்ந்து நாங்கள் கேட்டால் நீங்கள் சென்றதும் அடிப்பார்கள் என்று சீனியர் கைதிகள் ஆச்சரியமாக கூறினார்கள்.

சிறையில் ஏதேனும் ஒரு பேப்பர் தான் கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் தமிழ் உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் அனைத்தும் வேண்டும் என்றோம். அத்தனை செய்தி தாள்களையும் வாங்கி வந்து  கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் கேட்காமலேயே சிறை நிர்வாகம் எங்களுக்கு  அத்தனையும் செய்து கொடுத்தது.

அதிக பாதுகாப்பு கொண்ட  சிறையில்அன்றாட செய்தி தாள்களை படித்து அதிலிருந்து ஒரு அரசியல் விவாதங்களை நடத்துவோம். மக்களிடம் எப்படி செல்வது, அவர்களை எப்படி அமைப்பாக்குவது என்ற முறையில் தினமும் விவாதிப்போம். அந்த வகையில் தான் கடந்த பதினோரு நாட்களையும் பயிற்சி பட்டறையாக கருதினோம்.

சிறை என்றால் நான் அச்சத்துடனே இருந்தேன். எங்கள் வீட்டில் இருந்து சிறைக்கு வந்து பார்த்த பொழுது அழுதார்கள்.  ஆனால் தோழர்கள் அவர்களுக்கு எங்கள் போராட்டத்தின் நியாயத்தை புரிய வைத்ததும் ஏற்றுக்கொண்டார்கள். கிராம மக்களும் சரியான விஷயத்திற்கு தானே சென்றுள்ளான் என்று ஆதரவாக பேசியது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது என்கிறார் மாணவர் மணியரசன்.

தோழர் செந்தாமரைக் கண்ணன்

நான் மக்கள் மத்தியில்  அமைப்பு வேலைகள் செய்தாலும் கிரமமாக உடற்பயிற்சி செய்வதில்லை. சிறை எனக்கு அதனை  கற்றுக் கொடுத்தது. போராட்டத்தின் போது காவல்துறையை எதிர்கொள்வதற்கு திடகாத்திரமான உடல்நிலை வேண்டும். அதற்கான பயிற்சியினை மேற்கொள்ள சிறை ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தோழர் செந்தாமரைக் கண்ணன்

காலையில் 6 மணிக்கு எழுந்திருப்போம். எனக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை மற்ற தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரை படித்து விட்டு கூடத்தில் விவாதிக்க வேண்டும்.

சிறை  எனக்கு  நிறைய கற்று கொடுத்துள்ளது. உண்மையில் நாங்கள் யாரும் பிணையை எதிர்பார்க்கவில்லை. எப்பொழுது வந்தாலும் வரட்டும் என்று தான் நாங்கள் இருந்தோம்.  என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அந்த  45 வயது இளைஞர்.

தோழர் விநாயகம்

சிறைக்கு முதல்முறையாக சென்றுள்ளார். அவர்  கூறுகையில், காவல்துறை எங்களை கைது செய்து நீதிபதியிடம் அழைத்து செல்லும் பொது “ பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு உள்ளது” என்று கூறினார், ஜெயலிலிதா பொது சொத்தா என்று தோழர் ராஜு கேட்டது, திகைத்து போன நீதிபதி, அதெல்லாம் எனக்கு தெரியாது. உங்க மேல கேஸ் போட்டாச்சி. நீங்க ஜெயிலுக்கு போகணும் என்றார். நீதிபதியாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். இது எனக்கு புதிய அனுபவமாக தான் இருந்தது.

“சிறையில் சட்டையை கழட்ட முடியாது” என்று உரிமையுடன் போராடியது, ஒரு தோழரை சிறை போலீசார் “டா” போட்டு மரியாதை குறைவாக பேசியதும்   மற்ற தோழர்கள் சண்டை போட்டதும் மன்னிப்பு கேட்டார். எங்கு சென்றாலும் நாம் உரிமைக்காக போராட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

தோழர் முத்து

தோழர் முத்து.  நாங்கள் சிறையில் இருக்கிறோம் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. எங்களை பார்பதற்காக தோழர்கள், மக்கள் தொடர்ந்து வருவார்கள்.  அவர்களுடைய வருகை எங்களை மேலும் உற்சாகமூட்டியது.

தோழர் பாலு, 1987 இல் இருந்து சிறைக்கு சென்று வருகிறேன். இந்த ஆண்டுடன் முப்பதாவது வருடம் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பொழுதெல்லாம் சிறைக்குள்ளேயே ரவுடிகளுக்கிடையில் மோதல் நடக்கும். கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும். சிறை நிர்வாகமும் இதற்கு உடந்தையாக இருக்கும். இப்ப குறைந்துள்ளது.

அப்பொழுது எங்களை தனியாக வைப்பார்கள். காரணம் நக்சலைட், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி அச்சமூட்டுவார்கள். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ச்சியாக நமது அமைப்பு போராட்டத்தின் விளைவாக இன்று அப்படி அவர்களால் சொல்ல முடியவில்லை.

சென்ற  ஆண்டு முதல் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டத்தின் விளைவு  இன்று முற்றிலும்  மாறியுள்ளது. நம் மீதான அச்சத்தின் காரணமாக தனி சிறையில் வைக்கிறார்கள். இருப்பினும் நமக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேற்றுகிறார்கள்.

தோழர் பாலு

திமுக காரர்களும் இப்பொழுது சிறைக்கு  வந்தார்கள். ஆனால்  அவர்களுக்கு நம்மை போன்று உரிய மரியாதை கிடைக்கவில்லை. காரணம்,  என்ன அமைப்பு, அவர்களுக்கு எந்த மாதியான பின்புலம் உள்ளது என்பதை எல்லாம் சிறை அதிகாரிகள்  தெரிந்து  அதற்கேற்றவாறு தான் மரியாதையை தருகிறார்கள்.

சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.  தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.

நாங்கள் வெளியில் வரும் போது ஜெயிலரிடம் போயிட்டு வருகிறோம் என்றோம்.

என்ன இப்படி சொல்றிங்க. இங்க யாரும் வரக்கூடாதுன்னு தானே போவார்கள் என்றார் ஜெயிலர்.

அதற்கு நாங்கள்,  “மக்களுக்கு எதிரான அரசு இருக்கும் வரை போராடுவோம். அடிக்கடி சிறைக்கு வருவோம்” என்று கூறினோம்.

அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரிப்புடன் எங்களையே வெறித்து பார்த்தார் ஜெயிலர்.

நேர்காணல் : வினவு செய்தியாளர்கள்.

 1. மக்கள் அதிகாரம் முழங்கிடும் சிறைச்சாலை
  எங்கள் அச்சம் தொலைத்திடும் கல்விச் சாலை
  வெட்கப்பட வேண்டியது நாமல்ல-மானங்கெட்டு
  மழுங்கிவிட்ட அரசும் அ நீதிமன்றமும்தான்
  போகுமிடமெல்லாம் வைரலாவோம்
  பொறுத்திருந்து பாருங்கள் மக்களின் வைரிகளே!

Leave a Reply to செங்கதிர்செல்வன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க