
” எனக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்பதை அறிந்திருந்தும் நான் எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்” என புதுதில்லி ’டிஸ் ஹசாரி’ நீதிமன்ற நீதிபதியின் முன்னால் டிசம்பர் 18, 2010 அன்று, பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தனது பங்கையும், ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கையும் விரிவாகப் பதிவு செய்தார் அசிமானந்தா. சுமார் 5 மணிநேரம், அசீமானந்தா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கியது.
தனது வாழ்க்கையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோடு சேர்ந்து செய்த சதித்திட்டங்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களைப் பற்றி கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை, 4 தவணைகளாக ’கேரவன்’ இதழுக்கு சுமார் 9 மணிநேரத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். அவ்விதழ் 2014-ம் ஆண்டில் அந்த நேர்காணலைச் சுருக்கி வெளியிட்டது. இந்த நேர்காணலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க விட்டது.
இப்பேற்பட்ட அசிமானந்தாவைத் தான் தற்போது அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில், ’போதுமான சாட்சி இல்லாத’ காரணத்தால் விடுதலை செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மிகவும் பழமை வாய்ந்த தர்காவான அஜ்மீர் தர்காவில் அக்டோபர் 11, 2007 அன்று மாலை நேரத்தில் ரம்ஜான் நோன்பு முடித்து இஃப்தார் விருந்து நடக்கையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த உடனேயே இசுலாமியத் தீவிரவாதிகள் தான் குண்டுவைத்தனர் எனக் கதை விட்டு, உடனடியாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது போலீசு.
இதேக் காலகட்டத்தில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பில், குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வைத்து பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா தாக்கூரையும் , இராணுவ அதிகாரி புரோகித்தையும் கைது செய்து விசாரித்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசு. அங்கு விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜுக்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முக்கியக் குற்றவாளியான சுவாமி அசிமானந்தாவை 2010-ம் ஆண்டு இறுதியில் கைது செய்தது சிபிஐ. பழங்குடி இன மக்களுக்கு இந்து மத வெறியை ஊட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.ஆல் உருவாக்கப்பட்ட அமைப்பான வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் முழு நேர ஊழயர் தான் அசிமானந்தா. சிறையில் அடைக்கப்பட்ட அசிமானந்தா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தாம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரை 2 நாட்கள் போலீசின் தலையீடின்றி நீதிமன்றக் காவலில் வைத்து விட்டு பின்னர் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது தில்லி ’டிஸ் ஹசாரி’ நீதிமன்றம்.
டிசம்பர் 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான அசிமானந்தா, மாலேகானில் 2006, 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள், சம்ஜுக்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தமது பங்கையும், பின்னிருந்து சதித்திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பங்கையும் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். குறிப்பாக அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாருடன் இணைந்து செய்து முடிக்குமாறு மோகன் பாகவத் நேரடியாகத் தம்மைச் சந்தித்துக் கூறியது குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு டிசம்பர் 24 அன்று இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் மிக முக்கியப் ‘பங்காற்றி’யிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ). அசிமானந்தாவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்.-ன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரை வெறும் விசாரணைக்கு மட்டும் அழைத்து விட்டு வழக்கிலிருந்து என்.ஐ.ஏ. விடுவித்துவிட்டது. ஒரு படி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை விசாரணைக்குக் கூட கூப்பிடவில்லை. அப்படிப்பட்ட இந்த அமைப்பு தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையையும் கையிலெடுத்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட சாத்வி ப்ரக்யாவிற்கு எதிராக அரசுத் தரப்பு வக்கீலாக ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் ரோகினி சாலியன்.
வழக்கை நடத்திய தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரி சுஹாஸ் வார்கே இவ்வழக்கில் சாத்விக்கு தண்டனைக் கிடைக்காதபடி அரசுத் தரப்பிலிருந்து கொண்டே வாதிடுமாறு தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவித்து மறுத்துவிட்டதாகவும் ரோகிணி சாலியன் பகிரங்கமாக பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்துத்துவாவின் ஆதரவாளர்களால் நிரம்பி வழியும் ஒரு அமைப்பே ”தேசிய புலனாய்வு முகமை”.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் அஷ்வினி குமார் சர்மாவும் 2015-ம் ஆண்டு பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தேசிய புலனாய்வுக் கழகத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் எதிர்தரப்பு வக்கீல்கள் அரசுத்தரப்பு சாட்சிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு, பிறழ்சாட்சி அளிக்க பேரம் பேசுவதாகவும், அரசுத் தரப்பு சாட்சிகளை, கோர்ட்டில் ஆஜராவதற்கு முந்தைய நாள் இரவே ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு எதிர்த்தரப்பு வக்கீல்களால் பகிரங்கமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேசியப் புலனாய்வு முகமை நினைத்திருந்தால், அரசுத் தரப்பில் பிறழ்சாட்சி சொன்னவர்களின் அலைபேசி எண்களில் பேசியவர்கள் பட்டியலை வைத்து, எதிர்தரப்பின் (ஆர்.எஸ்.எஸ்.) பேரத்திற்குப் படிந்து அவர்கள் பிறழ்சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்று நிரூபித்திருக்க முடியும் என்றும் அஷ்வினிக் குமார் சர்மா கூறியுள்ளார். ஆனால் தேசியப் புலனாய்வுக் கழகம் அவ்வாறு செய்யவில்லை. அந்த அளவிற்கு தேசியப் புலனாய்வுக் கழகம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புக்களின் ஒன்றாகிவிட்டது.
போலீஸ் கொட்டடியில் தாம் கொடுக்கும் வாக்குமூலத்தை, ஒரு சாட்சி மறுதலித்துப் பேசும் போது அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்திய தண்டணைச் சட்டப்பிரிவு 164-ன் படி நீதிபதிக்கு முன்னால் அளிக்கப்படும் வாக்குமூலத்தைச் சாட்சி மறுதலித்தால் அது குறித்த பின்னணியை விசாரிக்கவும், அதன் பிறழ் சாட்சியத்தை ஏற்காமல் புறக்கணிக்கவும் நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. ஆனால் ’நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு’ என்பது போல, சிறப்புக் குடுமி மன்றம் தனது இந்துத்துவ சேவையைச் சாட்சிகள் வழுவியதைக் காரணமாக வைத்து ‘சந்தேகத்தின் பலனை ”குற்றவாளிக்கே” சாதகமாக்கி அசிமானந்தாவை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறது!!
இந்தச் சாட்சியங்கள் எல்லாம் 2011-ம் ஆண்டு நீதிமன்றத்தில், சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக் கூடாது என தங்களுக்கு அலைபேசியில் மிரட்டல் வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், வழக்கு விசாரணைத் தேசிய புலனாய்வுக் கழகத்தின் கீழ் வேகமாகச் சென்றிருக்கிறது. 2014-க்குப் பின்னர் முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக பிறழ்சாட்சியாளர்களாக மாறத் தொடங்கினர். இத்தனைக்கும் நீதிபதியின் முன்னிலையில் இவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தைத் தான் இவர்கள் மறுதலித்துக் கூறியிருக்கிறார்கள். நீதிமன்றம் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக போலீசால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பென்-ட்ரைவ் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லாத போதும், ”தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆவணங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை” என ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழிகாட்டுதல் கொடுத்திருந்தும், சாய்பாபா உடலளவில் 90% செயல்பட முடியாத மனிதர் எனத் தெரிந்திருந்தும், அவரைப் பழி வாங்கவும், இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுபவர்களை மிரட்டவும் தான் பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை துல்லியமாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அசிமானந்தாவை, ”சாட்சிகள் போதவில்லை” என்ற மொன்னைக் காரணத்தைக் கூறி விடுதலை செய்திருக்கிறது தேசியப் புலனாய்வு மையத்தின் சிறப்பு நீதிமன்றம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காவிகளின் குண்டுவெடிப்புகளும், வன்முறைகளும் வரைமுறையின்றி நடத்தப்படுவதற்கு, இத்தீர்ப்பின் மூலம் பச்சைக் கொடியைக் காட்டியிருக்கிறது நீதிமன்றம். காவி இருளை விரட்ட, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பின் மூலமும் நமக்கு உணர்த்தியிருக்கிறது நீதிமன்றம்!!
– நந்தன்
செய்தி ஆதாரம்:
- Exclusive: After Malegaon, Ajmer Blast Case Faces Allegations of Sabotage
- Rohini Salian names NIA officer who told her to ‘go soft’ against Malegaon blasts accused
- Not just Rohini Salian: Public prosecutor in Ajmer blast case is also unhappy with NIA
- There was enough evidence against Swami Aseemanand, says Public Prosecutor
- ‘Case weakens’: One more Ajmer blast case witness now hostile
- Swami Aseemanand acquitted in Ajmer blast case: A brief timeline