privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கநெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி

நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி

-

வளர்ச்சி என்ற பெயரில் மோடி ஏவிவிட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் பேரழிவை எதிர்த்து நெடிய போராட்டத்தை நடத்திவரும் நெடுவாசல் பகுதி விவசாயிகள்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்:  வளர்ச்சியல்ல, திருட்டு!
– தோழர் மருதையன்

“நமக்கு வேறு வேலை இல்லையா, ஒவ்வொன்றுக்கும் இப்படிப் போராட முடியுமா? எதற்காக இவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்?” என்று நெடுவாசல் போராட்டம் பற்றி சமூக ஊடகமொன்றில் கோபமாக கேள்வி எழுப்பியிருந்தார் ஒரு பெண். இது தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகள் பற்றிய பிரச்சினை மட்டுமே என்று அவரும் அவரைப் போன்ற பலரும் புரிந்து கொண்டிருக்கக் கூடும். இது வெறும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான பிரச்சினை அல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அரசமைப்பு தொடர்பான பிரச்சினை.

நெடுவாசலில் விளைநிலங்களையும் நீராதாரங்களையும் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வணிகர்கள் கோக், பெப்சி விற்பதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். வரலாறு காணாத வறட்சியை அச்சத்துடன் எதிர்நோக்கியிருக்கிறது தமிழகம்.  இந்தச் சூழலில், “தாமிரபரணியிலிருந்து கோக், பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடையில்லை” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். வீணாக கடலுக்குப் போகும் தண்ணீரைத்தான் கொடுக்கிறோம். அதனால் பாதிப்பில்லை என்று கூறியிருக்கிறார் சசிகலா அரசின் வழக்கறிஞர்.

கங்கைகொண்டான் “சிப்காட் வளாகத்தில் உள்ள மற்ற நிறுவனங்கள் தாமிரபரணித் தண்ணீரைப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்காமல், கோக் –  பெப்சியை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள். உற்பத்திக்கு தண்ணீரைப் பயன்படுத்தும் ஆலைகளுக்கும், தண்ணீரை உறிஞ்சி விற்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கும் கோக் – பெப்சிக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள் என்று மாண்புமிகு நீதியரசர்களை நாம் கருதவியலாது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற அரசியல் சட்டத்தின் சமத்துவ உணர்ச்சியால் உந்தப்பட்டுதான் பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதற்கு கோக்-பெப்சிக்கு உள்ள உரிமையை அவர்கள் உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.

“கோக் பெப்சியை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்” என்று உயர் நீதிமன்றம் கேட்டதைப் போலத்தான், “நரிமணத்திலும் குத்தாலத்திலும் தடுக்காமல், பாஜக எம்.பியின் கம்பெனியை மட்டும் நெடுவாசலில் ஏன் தடுக்கிறீர்கள்” என்று வெடிக்கிறார் எச்.ராசா. “தாமிரபரணி தண்ணீரை எடுப்பதால் பாதிப்பில்லை” என்று கூறும் சசிகலா அரசின் முதல்வர் எடப்பாடி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்” என்று போராட்டக் குழுவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். எனவே போராட்டத்தை உடனே முடிக்க வேண்டும் என்று மக்களை நிர்ப்பந்திக்கிறது போலீசு. மாணவர்களையும், மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் கிராமங்களிலிருந்து வெளியேற்றுமாறு விவசாயிகளை மிரட்டுகிறது.

00000

தாமிரபரணி தண்ணீரை கோக்கும் பெப்சியும் கொள்ளையடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்ததைக் கண்டித்துப் பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி நடத்திய போராட்டம்.

“ஒரு ஆபத்தும் இல்லை” என்கிறார் பொன்னார். “தியாகம் செய்யுங்கள்” என்கிறார் இல.கணேசன். “மக்களின் ஒப்புதல் இல்லாமல் அமல்படுத்த மாட்டோம்” என்கிறார் மத்திய அமைச்சர்.  “உடனே கலைந்து போ” என்று மிரட்டுகிறது போலீசு.

நடந்து கொண்டிருப்பது வழிப்பறித் திருடர்களுடனான விவாதம். மத்திய அரசு, மாநில அரசு, காவல்துறை, நீதிமன்றம் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்ற உண்மை இல்லாமல் ஆகிவிடாது.

கழுத்து சங்கிலி அறுப்பவனோடு விவாதம் நடத்தி தன்னுடைய நகையை ஒரு பெண் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? எனினும் இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் அத்தகையதுதான். “சங்கிலி சும்மாதானே கழுத்தில் கிடக்கிறது. அதை அறுத்து விற்றால் உனக்கு கொஞ்சம் ராயல்டி தருவேன். எனக்கு ஒரு பைக் வாங்குவேன். அதனால் என்பீல்டு கம்பெனிக்கு வியாபாரம் ஆகும். பல தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கும். மெக்கானிக் ஷாப்புக்கு வேலை பெருகும். அவர்களுக்கெல்லாம் ஊதியம் கிடைத்தால் அதை வைத்து அரிசி, பருப்பு வாங்குவார்கள், வணிகர்களுக்கு வியாபாரம் ஆகும், விவசாயிகளாகிய நீங்கள் நெல்லும் காய்கனியும் விற்று பணம் பார்க்கலாம். இந்தியாவின் ஜி.டி.பி சீனாவை விட அதிக வேகத்தில் வளரும். யோசித்துப்பார். இந்த தேசத்துக்குப் பயன்படாமல், அந்தச் சங்கிலி உன் கழுத்தில் தொங்கி என்ன பயன்?” என்கிறான் திருடன்.

வளர்ச்சி பற்றி திருவாளர் மோடியும், ஆளும் வர்க்கங்களும் அளிக்கும் வியாக்கியானங்கள் அனைத்தும் சங்கிலித் திருடனின் வியாக்கியானங்களே. “வேஸ்டாக கடலுக்குப் போகும் தண்ணீரை எடுத்து பாட்டிலில் அடைத்து கின்லே, அக்குவா பினா என்று பெயர் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குகிறோம். தமிழக அரசுக்கு ஆயிரம் லிட்டருக்கு 15 காசு ராயல்டியும் கொடுக்கிறோம். தண்ணீர் கடலுக்குப் போனால் ராயல்டி கிடைக்குமா யுவர் ஆனர்” என்று கோக்-பெப்சி எழுப்பும் கேள்விக்கும் சங்கிலித் திருடனின் கேள்விக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 31 இடங்களில் நான்கைத் தவிர மற்றவையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நியக் கம்பெனிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம். தேவைப்பட்டால் நீட்டிக்கலாம். இவர்கள் எடுக்கின்ற எண்ணெய் எரிவாயுவை உலக சந்தை விலையில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் விற்க உரிமை உண்டு. அந்த விலையில்தான் இந்திய அரசும் வாங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

நெடுவாசல் மண்ணில் துளை போட்டு ஆய்வு செய்ய முடிந்த ஓஎன்ஜிசி யிடம், எரிவாயு எடுப்பதற்குப் பணமில்லையாம். கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பாரதிய ஜனதா எம்பியிடம் பணம் இருக்கிறதாம், அதனால் கொடுத்தார்களாம். அவர் 500 பேருக்கு வேலை கொடுப்பாராம். தமிழக அரசுக்கு மொத்தமாக 40 கோடி ரூபாய் ராயல்டி கொடுப்பாராம்.

சங்கிலித் திருடனின் மேற்படி நியாயத்தின்படி பெண்ணின் கழுத்தில் நகை “சும்மா” தொங்குவதும், பாரதிய ஜனதாவைச் சார்ந்த கார்ப்பரேட் முதலாளியால் கொள்ளையிட முடியாமல் நெடுவாசல் வயலுக்கு அடியில் மீதேனும் ஷேல் வாயுவும் “சும்மா” கிடப்பதும், பி.ஆர்.பிக்கு பயன்படாமல் மலைகள் “சும்மா” நிற்பதும், கோக் – பெப்சி நிறுவனங்களின் பாட்டிலுக்குள் அடைபடாமல் தாமிரபரணி ஆறு “சும்மா” ஓடுவதும் குற்றம். இவற்றை விற்றுக் காசாக்க முடியாமல் தடுப்பவர்கள் தேசத்துரோகிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள்.

இது திருட்டு என்பதைப் புரிந்து கொள்ள ஏழாம் அறிவு எதுவும் தேவையில்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படையாக இருந்து மத்திய மாநில அரசுகள் நடத்தும் திருட்டு. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய முதன்மையான விசயம்.

“திருடுவது சரி” என்று அரசாங்கமோ நீதிமன்றமோ கூறவியலாது என்பதனால், திருட்டுக்குப் பெயரை மாற்றி “வளர்ச்சி” என்று கவுரவமாக அழைக்கிறார்கள். “வளர்ச்சி அவசியமானதுதான். ஆனால் அதை அடையும் முறைச் சரியாக இருக்கவேண்டும்” என்று விவாதம் நடத்துகிறார்கள்.

திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதற்கு முன்னால், மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டுமாம். அதாவது கழுத்துச் சங்கிலியை கழற்றித் தருவதன் நன்மையை, அதனால் ஏற்படப் போகின்ற பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியெல்லாம் அந்தப் பெண்ணுக்கு விளக்கி மனப்பூர்வமாக கழற்றிக் கொடுக்க வைத்திருக்க வேண்டுமாம். மக்களின் ஒப்புதலோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுதல் என்று இதற்குப் பெயர்.

பறிகொடுப்பவனின் ஒப்புதலோடு திருட்டு, அடிமையின் ஒப்புதலோடு ஆதிக்கம்! ஒப்புக்கொள்ள மறுத்தால்? “பிடுங்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு” (act of state) என்று எச்சரிக்கிறார் பாரதிய ஜனதாவின் வக்கீல் பா.ராகவன். “ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் ஒப்புதல் வாங்க முடியுமா” என்கிறார் வானதி சீனிவாசன். “ஒருமுறை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து விட்டால், எண்ணியதை எண்ணியபடி கொள்ளையிடும் உரிமை அரசுக்கு உண்டு” என்பதுதான் இவர்கள் கூறவரும் நியாயம். தாலி கட்டிய ஆண் எடுத்துக்கொள்ளும் தாம்பத்திய “உரிமை”யைப் (வல்லுறவு) போன்ற நியாயம்!

“ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருக்க முடியுமா” என்று சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பிய அந்தப் பெண்ணின் ஆதங்கத்துக்கு, “ஒவ்வொன்றுக்கும் ஒப்புதல் வாங்க முடியுமா” என்ற வானதி அம்மையாரின் திமிர்ப் பேச்சுதான் பதில். இது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் மக்களுக்கும் திருடனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். திருடனை மக்கள் பிரதிநிதி என்றும் சட்டபூர்வமான அரசமைப்பு என்றும் இன்னமும் நம்பிக்கொண்டிருந்தால் அது நம்புகிறவர்களின் பிழை. “நாங்கள் திருடர்கள்தான்” என்று அவர்கள் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். சிங்கூர், கலிங்க நகர், கூடங்குளம் ஆகியவற்றின் வரிசையில் இப்போது நெடுவாசல்.

00000

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை பகுதியில் மீனவ மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம். (கோப்புப் படம்)

து “திருட்டு” என்ற உண்மையை மறைப்பதற்கான முதல் கவசம் “வளர்ச்சி” என்ற வாதம். இரண்டாவது கவசம் “அறிவியல்”. நிலத்தடி நீரும் சூழலும் அழிந்து விளை நிலமெல்லாம் பாலைவனமாகும் என்று அஞ்சுகிறான் விவசாயி. இரண்டாயிரம் ஆண்டு விவசாயப் பாரம்பரியம் கொண்ட அந்த தஞ்சை உழவனைப் பார்த்து “நீ விஞ்ஞானியா” என்று கேட்கிறார் பொன்னார்.

ராமேசுவரம் கடலுக்கடியில் இருக்கும் மணல் திட்டுக்கு ராமர் பாலம் என்று பெயர் சூட்டி, சேதுக்கால்வாய் திட்டத்தை பாரதிய ஜனதா தடுத்தது. “ராமன் கட்டிய பாலம் என்கிறீர்களே, ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கருணாநிதி கேட்டவுடன், “தலையை வெட்டுவேன்” என்றார் பாஜக வைச் சார்ந்த வேதாந்தி என்ற சாமியார் எம்.பி. மணல் திட்டை அழித்தால் தலையை வெட்டலாமெனில், விளைநிலத்தை அழிப்பவனது உறுப்புகளில் எதை வெட்டலாம் என்று பொன்னார் தான் சொல்ல வேண்டும். நெடுவாசல் என்பது இயற்கை உருவாக்கிய மணல் திட்டல்ல, விவசாயிகளின் வியர்வை உருவாக்கிய விளைநிலம். அந்த உழவர்களைப் பார்த்து, “நீ என்ன விஞ்ஞானியா” என்று கேட்கும் மனிதருடைய நாக்கு சோறு தின்னும் நாக்குத்தானா என்பதையும் விசாரித்துத்தான் பார்க்க வேண்டும்.

எந்த விஞ்ஞானி ராமன் பாலத்தையும் ராம ஜென்ம பூமியையும் ஒப்புக்கொண்டான்? பாஜக வுக்கும் விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு? “மகாபாரத காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கு பிள்ளையாரே சாட்சி” என்று மோடிஜியின் வாயிலிருந்து பிரிந்த மீதேன் வாயுவை எதிர்கொள்ள முடியாமல் இந்திய விஞ்ஞானிகள் பலர் சுருண்டு விழவில்லையா? அரசியலுக்கு அஞ்ஞானம், பொருளாதாரத்துக்கு விஞ்ஞானமா?

“நீரியல் விரிசல் முறையைக் கையாண்டால் சூழல் நஞ்சாகும், நிலத்தடி நீர் அழியும், விளைநிலம் பாலைவனமாகும்” என்பது அனுபவபூர்வமான உண்மை. இந்த உண்மையைச் சொல்வதற்கு பத்து விஞ்ஞானிகள் இருந்தால், “எந்த ஆபத்தும் இல்லை” என்று சொல்வதற்கு மோடி இருபது விஞ்ஞானிகளை கையில் வைத்திருப்பார். “அணு மின்சாரம்தான் பசுமை ஆற்றல்” (green energy) என்று சாதிப்பதற்கும், “கதிர் வீச்சால் புற்றுநோய் வராது” என்று சத்தியம் செய்வதற்கும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தயாராக இருந்ததை நாம் கூடங்குளம் போராட்டத்தின்போது பார்க்கவில்லையா?

நேற்றைய அறிவியலின் அவதானிப்பை இன்றைய அறிவியல் மறுக்கலாம். அறிவியலாளர்களிடையே கருத்து வேறுபாடும் இருக்கலாம். பிரச்சினை அதுவல்ல. நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் எழுப்பும் கேள்வி, அறிவியலின் நம்பகத்தன்மையைப் பற்றியதல்ல. அறிவியலாளர்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள் எனப்படுவோரின் நம்பகத்தன்மை பற்றியது. சுருங்கக் கூறின் இந்த அரசமைப்பின் நம்பகத்தன்மை பற்றியது.

எரிவாயுக் கிணறு அமைந்துள்ள நரிமணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்கள் தரிசாகிவிட்டன, மக்கள் பல விதமான தோல் நோய்களால், புற்று நோயால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகளிலேயே வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இருப்பினும், “நரிமணம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் கொடுத்த சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு, “எந்த பாதிப்பும் கிடையாது” என்று கூச்சல் எழுப்புகிறார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.

மைய அரசு தமிழகத்தின் மீது ஏவிவிட்டுள்ள மற்றொரு பேரழிவுத் திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குக் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதி. (கோப்புப் படம்)

பொதுப்பணித்துறையின் யோக்கியதை என்ன? காவிரி, தாமிரபரணி, பாலாறு வெள்ளாறு உள்ளிட்ட தமிழகத்தின் ஆறுகள் அனைத்திலும் எடப்பாடி, சேகர் ரெட்டி கும்பல் 30 அடி ஆழத்துக்கு மணலை அள்ளியிருக்கிறது என்பது தமிழகம் அறிந்த உண்மை. இருப்பினும் “ சேகர் ரெட்டி 3 அடிதான் அள்ளியிருக்கிறார்” என்று “அம்மா” மீது சத்தியம் செய்கிறார்கள் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள். பூமிக்கு மேலே எல்லோருடைய கண்ணுக்கும் தெரிகின்ற 30 அடி பள்ளத்தை 3 அடி என்று சாதிக்கும் பொறியாளர்கள், பூமிக்கு கீழே உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருப்பதாக சான்றிதழ் தருகிறார்களாம் அதை  விவசாயி நம்பவேண்டுமாம்.

நெடுவாசலில் தோண்டப்போவது எத்தனை அடி? எடுக்கப்போவது எரிவாயுவா, எண்ணெயா, மீதேனா, ஷேல் வாயுவா? எதுவும் சொல்லவில்லை. ஷேல் வாயு எடுப்பதுதான் அவர்களுடைய திட்டம். அதை மறைப்பதற்குத்தான் ஹைட்ரோ கார்பன் என்ற பித்தலாட்டம். எவ்வளவு எடுப்பார்கள்? எவ்வளவு கணக்கு காட்டுவார்கள்? யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது.

ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை எதற்காவது கணக்கு உண்டா? பொதுப்பணி, சுற்றுச்சூழல், வருவாய், வனம், தொல்லியல், நீர்ப்பாசனம் என்று சகலவிதமான துறை வல்லுநர்களின் உதவியோடுதான் பல லட்சம் டன்கள் கடத்தப்பட்டன, கடத்தப்படுகின்றன. இயற்கை வளங்களைப் பாதுக்காக்கப் பொறுப்பேற்றுள்ள துறைகள்தான் அவற்றை சூறையாடத் துணை நிற்கின்றன. பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், கணக்கு காட்டாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இரும்புக் கனிமத்தின் அளவு மட்டும் ஒரு கோடி டன். அவர்தான் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதாரத்தூண். இந்த யோக்கியர்கள்தான் மோடி அரசாங்கத்தை நம்பச் சொல்கிறார்கள்.

“15 ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மண்ணெண்ணெய் எடுக்கப் போகிறோம் என்று சொல்லி என் நிலத்தை இரண்டாண்டு குத்தகைக்கு கட்டாயப்படுத்தி வாங்கினார்கள். இப்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகிறோம் என்கிறார்கள். என்னைக் கேட்காமலேயே என் நிலத்தை யாரோ ஒரு கார்ப்பரேட் கம்பெனி லாபம் சம்பாதிப்பதற்காக 15 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருக்கிறார்களே, இது என்ன நியாயம்? அன்று மண்ணெண்ணெய் இன்று ஹைட்ரோ கார்பனா? இந்த அநீதியை நியாயப்படுத்தும் ராகவன் அவர்களே, பதினைந்து ஆடுகளுக்கு முன்னரும் உங்கள் பெயர் ராகவன்தானே!” என்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக பிரதிநிதியை எள்ளி நகையாடினார் சந்திரபோஸ் என்ற விவசாயி.

00000

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய்த் துரப்பணவு செய்வதை எதிர்த்து, நாகப்பட்டிணம் மாவட்டம், குத்தாலத்தில் நடந்த முற்றுகைப் போராட்டம். (கோப்புப் படம்)

தற்கெல்லாம் பாஜக நாக்குமாறிகள் வெட்கப்பட மாட்டார்கள். அவர்கள் விவாதம் நடத்துவதன் நோக்கமே வேறு. சென்ற கணம் வரை “கழுத்துச் சங்கிலி அந்தப் பெண்ணுடைய உடைமை” என்று ஊரார் எண்ணிக்கொண்டிருந்தனர். இப்போது “அறுக்கலாமா, கூடாதா” என்ற இடத்துக்கு விவாதத்தைக் கொண்டு வந்து விட்டார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.

பாபர் மசூதி பிரச்சினை நினைவிருக்கிறதா? “மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என்றுதான் முதலில் ஆரம்பித்தார்கள். அது மசூதிதான் என்ற கருத்து மெல்ல விலகி, “மசூதியா கோயிலா” என்ற விவாதம் தொடங்கியது. பிறகு “தோண்டிப் பார்த்தால்தானே இருக்கிறதா இல்லையா என்று தெரியும்” என்று “நியாயம்” பேசினார்கள். திடீரென்று ஒரு நாள் இடித்து விட்டார்கள். நெடுவாசலுக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறது என்று கதையைத் தொடங்கியிருக்கிறார்கள். அதே அயோத்தி கதைதான். இசுலாமியர்களின் இடத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் என்பதுதான் வித்தியாசம்.

மற்றபடி, சங்கிலியை அறுப்பதுதான் திருடனின் நோக்கம். இதை ஒருபோதும் மறந்து விடலாகாது. மரியாதைக்குரிய பாரதப் பிரதமரும் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்டுமான திருவாளர் நரேந்திர தாமோதர் மோடிஜி அவர்களை ஒரு சங்கிலித் திருடனுடன் ஒப்பிடுவது தேசத்துரோகம் என்று தேச பக்தர்கள் சிலர் கருதக்கூடும். இந்த ஒப்பீட்டுக்கு தீய உள்நோக்கம் ஏதும் இல்லை. இது ஐ.எஸ்.ஓ 2001 தரச்சான்று பெற்ற உண்மை.

கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில், மக்களின் கையில் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கினார் மோடி. கைப்பற்றப்பட்ட கருப்புப் பணத்தை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்போகிறோம் என்று ஆசை காட்டினார். நமது பணம் அம்பானிகள், அதானிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குப் பெயர் “கருப்புப்பண ஒழிப்பு” நடவடிக்கையாம்.

சந்திரபோஸ்களின் நிலத்தை சித்தேஸ்வராவுக்கும் அம்பானிகளுக்கும் கொடுக்கும் நடவடிக்கைக்கு HELP என்று பெயர் வைத்திருக்கிறார் மோடி. அதாவது Hydrocarbon Exploration and Licencing Policy. இது மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் இந்த நடவடிக்கை, “சும்மா” கிடக்கும் எண்ணெய் வயல்களை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கிறது. அவற்றை விற்றுப் பணமாக்கி (monetizing the oil fields) பொருளாதாரத்தை வளர்க்குமாறு கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் மோடி.

அடுத்து வரவிருப்பது, சங்கிலி அறுப்பு நடவடிக்கை. “தங்கத்தை எதற்கு “சும்மா” பீரோவில் வைத்திருக்கிறீர்கள். அதை வங்கியிடம் கொடுங்கள். பொருளாதாரத்தை வளர்க்கிறோம். தங்கப் பத்திரம் தருகிறோம்” என்றவாறு 2015 தீபாவளிக்கு முந்தைய “மன் கி பாத்” உரையில் பேசியிருந்தார் மோடி. எதுவொன்றும் சும்மா இருப்பது மோடிஜிக்கு பிடிக்காது. அது சும்மா இருக்கும் பணமானாலும் சரி, சும்மா இருக்கும் நகையானாலும் சரி, சும்மா இருக்கும் நிலமானாலும் சரி.

பணத்தைப் பிடுங்கப் பட்டுவிட்டது. தாய்மார்களே தாலி பத்திரம்! விவசாயிகளே, நிலம் பத்திரம்!

– மருதையன்
புதிய ஜனநாயகம் – மார்ச் 2017