privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இழிவுகளே பெருமை ! எகனாமிக் டைம்ஸின் மகளிர் தின ஸ்பெஷல் !

இழிவுகளே பெருமை ! எகனாமிக் டைம்ஸின் மகளிர் தின ஸ்பெஷல் !

-

‘முதலாளித்துவ கட்டமைப்பையே அகற்றினால் தான் பெண்ணுக்கு சுவாசம்’ என்று தோழர் துரை சண்முகத்தின் கவிதையைப் படித்த வினவின் வாசக நண்பர் ஒருவர், ‘முதலாளித்துவம்தான் பெண்ணுக்கு பல அக்கப்போர்களிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தது. நாப்கின், வாசிங் மெசின், டிஷ் வாசர், மைக்ரோவேவ் ஓவன், ரெடிமேட் உணவு, ரூம்பா ரோபாட், டயப்பர், பால்பவுடர், கருத்தடை சாதனம் போன்றவையல்லாம் முதலாளித்துவத்தின் சாதனைகள்’ என்று பட்டியலிட்டிருந்தார்.

வியப்பூட்டும் வகையில் நமது வாசகரை விட இந்தவருடம்  பல முதலாளித்துவ ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மிகவும் பெருந்தன்மையுடன் உழைக்கும் மகளிர் தினத்தில் (உழைக்கும் என்பதை மட்டும் தூக்கிவிட்டு) மகளிர் தினம், மகளிர் தின ஸ்பெசல் என்று விளம்பரங்கள், செய்திகள் என்று சக்கைப்போடு போட்டனர். அவற்றிலிருந்து சில செய்திகளை புகைப்படங்களாக இங்கு முன்வைக்கிறோம். முதலாளித்துவம் பெண்களை எப்படி பார்க்கிறது? நமது வாசக நண்பர் முன்வைக்கும் கருத்து எப்படிப்பட்டது? பதிலை அறிவதற்கு இவை உதவும்.

எகானமிக்ஸ் டைம்ஸ்-பனாச் சிறப்பிதழ், மகளிர் தின வாழ்த்துக்கள் என்று இலச்சினையை போட்டு சிறப்பிதழின் உள்ளே பல சங்கதிகளைச் சொல்லியிருக்கிறது.

எகானமிக்ஸ் டைம்ஸ், ‘இந்த மகளிர் தினத்தில் உங்களது காதலிக்கு கீழ்க்கண்ட அழகுசாதனப்பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்’ என்று ஒரு செய்தியைப் போட்டிருக்கிறது.

இந்த சாதனைப் பட்டியலில் ஐபுரோ, நகப்பாலீசு, பேசியல் டச் அப் மற்றும் இது இன்னதென்று தெரியாத பல கருமாந்திரங்களும் அவற்றின் அடக்கவிலையும் இங்கு கச்சிதமாக தரப்பட்டிருக்கின்றன. இந்த அழகு சாதன பொருட்கள் இல்லை என்றால் ‘போட்டிகள்’ நிறைந்த ‘காதலர்கள் உலகில்’ நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்பதே இவ்விளம்பரக் ‘கவிதை’ முன்வைக்கும் கருத்து. இதயத்தின் மொழியாக பேசப்படும் காதல் இங்கே ‘இன்டெக்ஸ்’ பட்டியலாக உணர்த்தப்படுகிறது.

பெண் உரிமை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப்பட்டியலில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வஸ்துக்கள் பெண் கருப்பாக இருப்பதை அசிங்கம் என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறதே? தன்மானமுள்ள எவர் ஒருவரும் தன்னை அழகுபண்டமாக பார்க்கும் இந்த இழிவை ஏற்பாரா? ஒவ்வொரு மனித முகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுவதே அழகு எனும் இயற்கைக்கு எதிராக அனைவரும் ஐஸ்வர்யா போன்ற பார்பி பொம்மைகளாக மாறவேண்டும் என்றால் இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு வேறு என்ன வேண்டும்?

உழைக்கும் மகளிர் தினத்தில், எங்களுக்கு வேலை வேண்டும், வேலை நேரத்தை ஒழுங்கமைக்க வேண்டும், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை பெறவேண்டும், மருத்துவம், மகப்பேறு, குழந்தைநலத்தை காப்பதற்கான குறைந்தபட்ச அரசமைப்பு கூட இல்லாதிருப்பதை எதிர்த்து போராட வேண்டும் என்று சனநாயக அமைப்புகள், புரட்சிகர இயக்கங்கள் உழைக்கும் மகளிரை அணிதிரட்டும் பொழுது, உங்கள் காதலியை மேற்கொண்டு அழகுபடுத்துங்கள் என்று சொல்வதன் பின்னணியில் நுகர்வு மட்டுமல்ல பெண்கள் மீது ஆயிரம் ஆண்டுகளாக சுமத்தப்பட்டிருக்கும் பார்ப்பனிய கொடுங்கோன்மையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்துப்பண்பாட்டின் காமசூத்திரம் ரஜோ, தமோ, சாத்வீக குணம் என்று பெண்களை பிரிக்கிறது. சாத்வீகமான பெண் அதிர்ந்து பேசமாட்டாளாம். கற்பூர வெற்றிலையுடன் கமகமக்கும் சிவப்பு செவ்வாயுடன் கணவனுக்கு சேவைசெய்ய காத்திருப்பாளாம். இங்கு கற்பூர வெற்றிலைக்குப் பதிலாக உதட்டிற்கு லேக்மே சாயம் பூசி பெண்களை சாத்வீகமாக்குங்கள் என்று சொல்கிறது முதலாளித்துவம்.

பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது.

வினவு செய்தியாளர்கள் சலவைத் தொட்டி, கடை வியாபாரிகள், தனித்து வாழும் முதியோர்கள் என்று பெண்களின் நிலையைக் காட்டினால், பெண்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஜாய்ண்ட் வென்ச்சர், தனியார் கந்துவட்டி நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள் பாருங்கள் என்கிறது எகானமிக்ஸ் டைம்ஸ். ஆனால் உழைக்கும் மகளிர் தினம் என்பதே இத்தகைய முதலாளிகளை ஒழிப்பதற்குத்தான்.

மேற்கண்ட படத்தில் பெண்கள் முதலாளிகளாக இருப்பதைப் பார்த்து எகானமிக்ஸ் டைம்ஸ் பெருமைப்படுவதைப் போலத்தோன்றும். ஆனால் அதுவல்ல நிசம்! பெண்களை முதலாளித்துவம் பாலியல் பண்டமாக நடத்துகிறது என்பதற்கு இந்தப் பத்திக்கு பக்கத்திலேயே மேட்டுக்குடிகளுக்கான (எலைட்) செக்ஸ் கிளப்பில் சேருவதற்கு உண்டான விளம்பர செய்தியை எகானாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்..

படத்தில் நீச்சல் உடையை மறைத்திருக்கிறோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியுயார்க் நகரில் அமைந்துள்ள இந்த பாலியல் விடுதி, ஆண் பெண் இருபாலருக்கும் குழு பாலுறவு என்ற அழைக்கப்படும் குரூப் செக்ஸ், பாலுறவுத் துணையை அடிமையாக நடத்தும் ஜீனர்கள், தீம் செக்ஸ் போன்ற சேவைகளை வழங்குகிறதாம். இதற்கு கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 48 இலட்சமாம்!

ம் நாட்டில் பழங்குடியினர் இயற்கையை தாயாக பாவித்து போற்றி வளர்க்கும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட பழங்குடியினர் மீது இந்த அரசு பச்சை வேட்டை நடத்தி அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. எதற்காக? யாருக்காக? மில்லியன் டாலர் கனிம வளங்களை வேதாந்தா போன்ற தரகு முதலாளிகள் அபகரிப்பதற்காக.

இதுவரை இந்த கனிமவேட்டைக்காக சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட பெண்கள் எத்துணை பேர்? மத்திய துணைராணுவப்படையின் வன்புணர்வால் சீரழிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் எத்துணை பேர்? இயற்கையை தாயாக போற்றிப் பாதுகாக்கும் பழங்குடியினரின் நிலை இதுவென்றால் வேதாந்தா நிறுவனம் மேற்கண்ட படத்தில் பெண்களின் மேம்பாட்டிற்காக தனது நிறுவனம் உழைப்பதாக பிசினஸ் ஸ்டேண்டர்டு நாளிதழில் மகளிர் தின செய்தி வெளியிட்டிருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள் முதலாளித்துவத்தின் கீழ் பெண்களின் நிலை என்ன? உழைக்கும் மகளிர் தினம் என்பதே இந்த முதலாளித்துவத்தையும் இத்தகைய முதலாளிகளையும் ஒழிப்பதற்குத்தான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?

– சம்புகன்