Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் - திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

-

எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன,
உடைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை!

பொதுக்கூட்டம்
தேதி: 15-04- 2017
நேரம்: மாலை 5 மணி
இடம்: திருத்துறைப்பூண்டி

போராடும் விவசாயிகளே, மீனவர்களே, மாணவர்களே, இளைஞர்களே !

நாம் ஒன்றிணைய வேண்டிய தருணமிது., விவசாயிகள் தற்கொலை, வறட்சி, தண்ணீர் பஞ்சம் என தமிழகமே சுடுகாடாக மாறி வருகிறது. நமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காகவும் அரசின் அழிவுத்திட்டங்களுக்கு எதிராகவும் கொதித்து எழுந்துள்ளோம்.

போராடும் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, எவ்வாறு மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி. மைதானத்தையும், முற்றுகையிட்டு தாக்கினரோ, அதே போல தமிழகம் முழுவதும் அதிரடிப்படையும், உளவுப்படையும் முற்றுகையிட்டுள்ளன. முக்கிய சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு போராடுவோர் தடுக்கப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம்தான் இந்த சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கை நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கு அலையும் பாலைவனமாக்கியுள்ளனர். கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக வளர்ச்சி என்ற பெயரால் மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர்.

நாடு முழுவதுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் மின் தேவைக்கான உற்பத்தி குவிமையமாக தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நமது காட்டுவளம், கடல்வளம், நீராதாரம், அனைத்தையும் சூறையாடுகின்றனர். அதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நிறுவப்படுகின்றன. இவற்றின் கழிவுகளால் நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகின்றன.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் 37 லட்சம் கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறது மத்திய அரசு. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து நாடகமாடுகிறது.

அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை. கொள்ளையே குறியாக செயல்படுகிறார்கள். மக்கள் போராட்டங்களை வரிசைகட்டி ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இனி என்னதான் செய்வது? டாஸ்மாக்கிற்கு எதிராக கோர்ட் மூலம் தீர்வுகாண முடியாது. அதனால் விளக்குமாறு, செருப்போடு போய்தான் போராட வேண்டும் என தாய்மார்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

விவசாயிகளை கொன்று, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குகிறார்கள். இனியும் சகிக்க முடியாது. சோறு சாப்பிடும் அனைவரும் பதில் சொல்ல வேண்டும். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண இன்னும் எத்தனை விவசாயிகள் சாக வேண்டும்? மயிலே மயிலே என்றால் இறகு போடாது. வேறு வழியில்லை. புடுங்கிதான் ஆக வேண்டும்.

தனித்தனியான போராட்டங்களால் இனி தீர்வு காண முடியாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு மக்கள் போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். மக்கள் அதிகாரம்தான் ஒரே தீர்வு.

மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம் – 91768 01656