Wednesday, January 26, 2022
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

-

மஸ் தமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்க பொறுப்பாளர் என்ற முறையில் வாரம் ஒரு புரட்சியை அல்லது அதிர்ச்சியை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் இருப்பவர். அது அவர் சம்பளத்துக்கு செய்ய வேண்டிய வேலை. அதுவன்றி, நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பொறுப்பையும் தன்னந்தனியாக அவர் தன் தோள் மேல் சுமக்கிறார். இதற்கும் சேர்த்துத்தான் இந்து நிர்வாகம் அவருக்கு சம்பளம் வழங்குகிறதா, அல்லது கொழுந்து விட்டெரியும் தேசபக்தியின் காரணமாக இந்தப் பெருஞ்சுமையை அவர் தானாக முன்வந்து ஏற்றிருக்கிறாரா தெரியவில்லை.

பிரபல தேர்தல் ஈவென்ட் மானேஜர் பிரசாந்த் கிஷோர் கூட மோடி, நிதீஷ், ராகுல் போன்ற பலருக்கும் வழிகாட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அவரால் வழிகாட்ட முடிந்திருக்கிறது. திருவாளர் சமஸோ நேரெதிர் துருவங்களுக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றவர்.

அவர் அ.தி.மு.க வில் ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு வழி சொல்கிறார். அடுத்த வாரத்தில் திமுக வின் பிரகாசமான எதிர்காலத்துக்கு திராவிட அரசியலைக் கைவிடுவது அவசியம் என்று ஸ்டாலினை எச்சரிக்கிறார். “இந்து மதத்தைக் காப்பாற்றும் பொருட்டு சாதியை ஒழிக்குமாறு” சங்க பரிவாரத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறார். “காங்கிரசைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்” என ராகுல் காந்திக்கு கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறார். அது மட்டுமல்ல, உலகமயமாக்கலின் வெற்றிக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளின் வெற்றிக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டுகிறார். நம்மைப்போல ஒரே ஒரு மூளையுடன் பிறந்த சராசரி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற பிரமிப்புதான் எற்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரின்றி வீதியில் விடப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதர்களில் சிலர் முச்சந்தியில் நின்றபடி, டிராபிக் கான்ஸ்டபிள் வேலை செய்வதை பார்த்திருப்பீர்கள். கார், டூ வீலர், சைக்கிள் முதல் லாரிகள், பேருந்துகள், பாதசாரிகள் வரையிலான அனைவரையும் “நீ அப்படிப்போ, நீ இப்படிப்போ” என்று கடும் கண்டிப்புடன் இவர்கள் நெறிப்படுத்தும் தோரணை இருக்கிறதே, அதைக் கூர்ந்து கவனியுங்கள். மொத்த நகரத்தின் போக்குவரத்தையும் தன்னந்தனியாகச் சமாளிக்க வேண்டிய பொறுப்பை சுமந்து தவிக்கும் ஒரு மனிதனின் மன அவஸ்தை அவர்களது முகத்தில் வெளிப்படுவதை நீங்கள் காண முடியும்.

பரிதாபத்துக்குரிய இத்தகைய மனிதர்களின் அகவுலகமும், “தி நேஷன் வான்ட்ஸ் டு நோ” என்று ராத்திரி 9 மணிக்கு கத்துவாரே, அந்த அர்னாப் கோஸ்வாமியின் அகவுலகமும் ஏதோவொரு விகிதத்தில் கலந்திருப்பதன் விளைவாகக் கிடைக்கும் ஆபாசம்தான், “நான் நினைக்கிறேன், நான் கவனித்து வருகிறேன்” என்ற சமஸின் தோரணை.

மூன்று மந்திரச் சொற்கள்!

“மோடியின் காலத்தை உணர்தல்” என்ற தொடரில் “வெறுப்பரசியலில் நக்சல்பாரிகளின் பங்கு” என்ற தலைப்பில் வன்முறை, சகிப்பின்மை, தூய்மைவாதம் என்ற மூன்று சொற்களை நம் மீது கடாசியிருக்கிறார் சமஸ். பொருள் புரிவதற்கு அவசியமில்லாமல், சில ஒலித்துணுக்குகள் நம் மனதைக் கொள்ளை கொண்டு, மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்குமல்லவா? அப்படி இந்த சொற்கள் அவரிடம் எப்போது இறங்கின, யாரிடத்திலிருந்து இறங்கின என்று அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூளைக்குள் பல்பு எரிகின்ற படைப்பின் உன்மத்த நிலையில், அப்படி யோசித்துப் பார்க்கின்ற மனநிலை ஞானியர்க்கு இருப்பதில்லை.

அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன்  ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ். இந்த இட்டிலி ஒரு நடுப்பக்க பிளேகியரிசம்!

அத்வானியின் ரத யாத்திரை காலத்தில் தொடங்கி, தற்போதைய மோடியின் காலம் வரையில் சங்க பரிவாரத்தினை  எதிர்த்து வருபவர்கள் ம.க.இ.க-வினர் என்பது எச்.ராஜாவும் கூட ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. “அது உண்மையல்ல, இடதுசாரி ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதன் மூலம், ம.க.இ.கவும் நாடு முழுவதும் உள்ள நக்சல்பாரி அமைப்புகளும் மறைமுகமாக வலதுசாரிகளுக்கு (சங்க பரிவாருக்கு) உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டின் அருகதையைப் பரிசீலிப்போம்.

அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன் ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ்.

மோடியின் காலம் எப்படி இருக்கிறது? மூன்றாண்டு காலத்தில் வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. “அச்சே தின்” சந்தி சிரிக்கிறது. பஞ்ச் டயலாக்குகளும் காகித திட்டங்களும்தான் அறிவிக்கப்படுகின்றனவே தவிர காரியத்தில் எதுவும் இல்லை. பொருளாதாரம் எழுந்து நிற்க மறுக்கிறது. வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.  பண மதிப்புநீக்கம், ஆதார் திணிப்பு முதலான பல நடவடிக்கைகள் மக்களுக்கு கடும் துன்பத்தையே கொடுத்திருக்கின்றன. இருப்பினும் சமீபத்திய தேர்தல்களில் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காரணம் என்ன என்பது ஆய்வாளர்கள் பலர் விவாதித்து வருகின்ற கேள்வி.

எதிர்க்கட்சிகளின் ஊழல், பிழைப்புவாதம், குடும்ப அரசியல், பாஜக வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கப்படாமல் இருப்பது, மாற்றுத் தலைமையில்லாமலிருப்பது – என்பன போன்ற காரணங்களையும் இவையன்றி ஒவ்வொரு மாநிலத்தின் விசேடமான காரணங்களையும் எதிர்க்கட்சிகளின் தவறுகளாகவும் பலவீனங்களாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மதவெறியைத் திட்டமிட்டே தூண்டுவது, சாதிப் பிளவுகளைப் பயன்படுத்திக் கொள்வது, எதிர்க்கட்சி அதிருப்தியாளர்களை வலை வீசிப்பிடிப்பது, மையப்படுத்தப்பட்ட பொய்ப்பிரச்சார நடவடிக்கைகள், ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவு, ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட தேர்தல் வேலை போன்றவற்றின் மூலம்தான் மோடியின் இமேஜ் முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஜனநாயக உணர்வற்ற நாயக வழிபாட்டு மனோபாவம், சாதி – மதவெறிக்கு ஆட்படுவது, மோடியை சூப்பர்மேனாக காட்டும் விளம்பர மோசடிக்கு இரையாவது, எதிர்க்கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்கள், மோடியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாக்காளர்களின் பலவீனங்களாக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன.

நேர்மறையில் எதையும் சாதிக்க இயலாத மோடியின் கையில் இருக்கும் ஆயுதங்கள் இரண்டு. ஒன்று மதவெறியைத் தூண்டுவது, இரண்டாவது – தனது எதிர் தரப்பினரை ஒடுக்குவது, மதிப்பிழக்கச் செய்வது, தோல்வி மனப்பான்மையில் ஆழ்த்துவது.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அரசு மோடியின் அடிமையாக நடந்து கொண்டபோதிலும், தமிழ்ச் சமூகம் மோடியையும் பாரதிய ஜனதாவையும் வெறுக்கிறது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பாஜகவை தமிழக மக்களின் தலையில் கட்டுவதற்கு பெருமுயற்சி செய்துதான் பார்க்கிறார்கள். இருப்பினும் சமூக ஊடகங்களும் சமூகத்தின் பொதுக்கருத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை கூர்மையாகத் தாக்கித் தனிமைப் படுத்துகின்றன. இந்தப் பின்புலத்தில் சமஸின் புளித்த இட்லி உப்புமாவைக் கிளறிப் பார்ப்போம்.

ஒடுக்கச்சொல்லும் எச்.ராஜா, ஒதுக்கச் சொல்லும் சமஸ்!

ஹெச்.ராஜாவும், பொன்னாரும் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

“நக்சல் ஆதரவு இயக்கங்கள், (தமிழகத்தில் ம.க.இ.க, புதிய ஜனநாயகம் போன்றவை)  இடதுசாரி ஜனநாயக சக்திகளை கண்ணியப் படுகொலை செய்ததன் மூலம் அவர்களை மதிப்பிழக்க வைத்து, மோடியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் ஆய்வு முடிவு.

மோடி அரசை முறியடிக்க விரும்புகிறவர்கள் ம.க.இ.க வினரை ஒதுக்கவேண்டும் என்பதுதான் சமஸ் கூறவரும் செய்தி. சமஸின் இந்த “மொழி” நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட போலீசின் “மொழி”தான்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நடக்கும் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட கிராமங்களை மொய்க்கும் உளவுத்துறையினர் அந்த மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை, “மக்கள் அதிகாரம் அமைப்பினரை உள்ளே விடாதீர்கள்” என்பதுதான். டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினால், அதில் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் உரையாற்றக் கூடாது” என்பதை நிபந்தனையாகவே விதிக்கிறது போலீசு. தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு போலீசு வழங்கும் அறிவுரையும் இதுவேதான்.

எச்.ராஜாவின் கூற்றுப்படி நெடுவாசல் போராட்டம் ஒரு நக்சலைட் சதி, தமிழிசையின் கூற்றுப்படி மருத்துவர்கள் போராட்டமும் நக்சலைட்டு சதி, பொன்னாரின் கருத்துப்படி (சமஸ் கருத்தின்படியும்) மெரினா போராட்டம் வன்முறையில் முடிந்தது நக்சலைட் சதி! மோடி வறட்சி நிவாரணம் வழங்காததை நிருபர்கள் கேள்விக்குள்ளாக்கினால், ஏச். ராஜா கூற்றுப்படி அது பிரதமருக்கு எதிரான கண்ணியப் படுகொலை (belittling the prime minister).

போலீசின் மொழியையும் சங்க பரிவாரத்தின் மொழியையும் மோடி எதிர்ப்பு போர்க்குரல் போல மார்க்கெட்டிங் செய்கிறாரே சமஸ், இதன் பொருள் என்ன?

தாக்குதல் இலக்கு – “தாராளர்கள்”!

வளர்ச்சி என்ற பொய்மானைக் காட்டி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடியின் ஆட்சியின் கீழ், நிர்வாகம், கல்வி போன்றவற்றில் தொடங்கி இராணுவம், நீதித்துறை வரையிலான எல்லா நிறுவனங்களையும் சங்க பரிவாரம் கைப்பற்றி வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் பலர் அறிவுத்துறையினர் என்பதும் எதார்த்தம்.

மோடி அரசின் தாக்குதல் லிபரல் அறிவுத்துறையினர் முதல் இடதுசாரி அறிவுத்துறையினர் வரையிலானோர் மத்தியில் தெளிவையும் தடுமாற்றத்தையும் ஒரே நேரத்தில் தோற்றுவித்திருக்கிறது.

சான்றாக கோமாதாவின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகள் குறித்து, “அரசியல் சட்டம் – மத நல்லிணக்கம்” என்ற வரம்புகளுக்குள் நின்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த பலரும் பார்ப்பன மதம் என்ற கோணத்தில் இந்து மதவெறியை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதே போல தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் குறித்து உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்கள் நொறுங்கி, மனித முகம் கொண்ட உலகமயம் என்ற கருத்தாக்கமே “கவைக்குதவாத கற்பனை” என்பது மக்களிடையே அம்பலமாகி வருகிறது. அதற்குச் சான்றுதான் கெயில் எதிர்ப்பு, மீதேன் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்.

மனித முகம் கொண்ட பார்ப்பனியமும் இல்லை, மனித முகம் கொண்ட உலகமயமும் இல்லை என்கின்ற தெளிவு பரவி வருவதைத்தான் “நெகிழ்வுத் தன்மைக்கு எதிரான போக்கு” வளர்ந்து வருவதாகவும் வெறுப்புச் சொல்லாடல் வளர்ந்து வருவதாகவும் சொல்கிறார் சமஸ்.

இனி, அறிவுத் துறையினரின் தடுமாற்றம் குறித்த பிரச்சினைக்கு வருவோம்.

லிபரல் அறிவுத் துறையினருக்கு மோடியைத் தோற்கடிப்பது முயற்கொம்பாகவே தெரிகிறது. எதிர்க் கட்சிகளின் இயலாமை மட்டுமல்ல, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு, பார்ப்பன பாசிசத்துக்கு ஒத்துப் போவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் நம்பிக்கொண்டிருந்த இந்த நிறுவனங்கள் அனைத்தும், சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியிருப்பதையும் காண்கிறார்கள். இந்த எதார்த்த நிலைமைகள், அரசமைப்பின் வரம்பைத் தாண்டி சிந்திக்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. எனினும், அவ்வாறு சிந்திக்க இயலாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.

இந்த தடுமாற்றத்தை ஆள் வைத்து மோப்பம் பிடித்துவிட்ட சமஸ், அவர்களுக்குத் தூண்டில் வீசுகிறார். கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களைத் தூய்மைவாதிகள் என்று தூற்றுகிறார். தூய்மைவாதம் காரணமாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் வளர முடியவில்லை என்று குற்றவுணர்வுக்கும் ஆளாக்குகிறார்.

சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள்தான் பாசிச எதிர்ப்பின் கூர்முனையாக இருக்க முடியும். இட்லர் காலம் தொடங்கி இன்று வரை இதுதான் உண்மை. அத்தகையவர்கள் யார் என்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதனால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

மக்களை சகிப்பின்மைக்குத் தூண்டியது யார்?

தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.

“நக்சல் ஆதரவு இயக்கங்கள் தோல்வி அடைந்து விட்டன” என்ற திருப்தியான பிரகடனத்துடன் தனது கட்டுரையைத் தொடங்குகிறார் சமஸ். அடுத்தடுத்த பத்திகள் “யு டர்ன்” எடுக்கின்றன. தமிழக ஊடகவியலாளர்களின் மொழி நடையில் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி, முன்னணி வார இதழ் ஒன்றின் அட்டையில் புதிய ஜனநாயகம் அட்டையின் சாயல், இடது சாரி இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கையாளும் மொழியும் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி என்று பட்டியலிடுகிறார் சமஸ்.

தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது. சகிப்பின்மை ஊடகங்களில் மட்டும் அதிகரிக்கவில்லை. சமூகம் முழுதும் அதிகரித்து வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பெண்கள் கடப்பாரை ஏந்தி டாஸ்மாக் கடைகளை இடிக்கிறார்களே, அது ஊடகங்களின் மொழியைக் காட்டிலும் “வலிமையான சகிப்பின்மை”யில்லையா? காந்திய வழியிலிருந்து இவர்களை வன்முறைக்கும் சகிப்பின்மைக்கும் திருப்பியவர்கள் யார்?

“இந்த அரசமைப்பிடம் முறையிட்டுப் பயனில்லை. அதிகாரத்தை மக்கள் தம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது அடிச்சு தூக்கு” என்று இரண்டாண்டுகளுக்கு முன்னரே மக்கள் அதிகாரம் அறைகூவல் விடுத்தது உண்மை. அடித்து தூக்கியதும் உண்மைதான். இருப்பினும், மக்களை கடப்பாரை ஏந்த வைத்த பெருமை இந்த அரசையும், போலீசையும், நீதிமன்றத்தையுமே சாரும்.  தமது நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரத்தின் அறைகூவல் சரியானது என்று மக்களுக்குப் புரியவைத்தவர்கள் அவர்களல்லவா?

சமஸின் சகிப்பு – ஊடகங்களின் சகிப்பின்மை!

ஊடகங்களின் மொழி மாறி வருகிறது என்று சமஸ் தன்னை மறந்து கூறுவதும் உண்மைதான். அதற்கு புதிய ஜனநாயகம் எள்ளளவேனும் காரணமாக இருந்தால் அது குறித்து பெருமை கொள்கிறோம். லஞ்ச ஊழல்களை, சமூக ஒடுக்குமுறைகளைப் பற்றி எழுதிவிட்டு, “முதல்வர் கவனிப்பாரா, ஆட்சியர் கவனிப்பாரா, அரசு பரிசீலிக்குமா” என்றெல்லாம் கட்டுரையை முடித்த காலம் ஒன்றிருந்தது. “அவர்கள்தான் திருடர்கள்” என்று தெரிந்த பின்னால், “எந்தக் கொடுமையை அம்பலப்படுத்தினாலும் நீதி கிடைக்காது” என்று தெளிந்த பின்னால் சொரணையும் நேர்மையும் உள்ள பத்திரிகையாளனாக இருப்பின், அவனை கோபமும் கையறு நிலையும் பற்றிக் கொள்கின்றன. அவனுடைய மொழியில் சகிப்பின்மை வெளிப்படத்தான் செய்யும்.

“தமிழ்ச் சமூகத்தை சீரழித்த சதிகாரி” என்று ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது புதிய ஜனநாயகம். “அடிமைகளே உங்கள் ஊழல் ராணியின் கல்லறையை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துங்கள், இல்லையேல் மக்கள் அதை அகற்றுவார்கள்” என்று வீடியோ வெளியிட்டது விகடன். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நக்சல்பாரிகள் தகர்ப்பது குறித்து சமஸ் ரொம்பவும்தான் பதறுகிறார். குன்ஹா தீர்ப்புக்கெதிராக வெறியாட்டம் நடத்தி ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிமுகவினர் தகர்த்தார்களே, அப்போது அவர் என்ன செய்தார்?

அன்றைய கடையடைப்பை பயன்படுத்தி பால் பாக்கெட்டுக்கு விலையேற்றிய வியாபாரிகளை, ஜெயலலிதாவுடன் இணை வைத்து, “குன்ஹா அவர்களே எங்களுக்கு என்ன தண்டனை?” என்று தலைப்பு போட்டு கட்டுரை எழுதினார்.  ஜெ வின் ஊழல் குறித்து குற்றம் சாட்டினால், “எவன் யோக்கியன்” என்று நாஞ்சில் சம்பத் எழுப்பக்கூடிய கேள்வியையே தத்துவ விசாரம் போன்ற பாவனையில் ஒளித்து எழுதிய கயமையல்லவா அந்த எழுத்து?

 “ஊத்திக்கொடுத்த உத்தமி”யும் “கண்ணியக் கொலை”யும்!

வெள்ளை மாளிகை முன் படுத்திருக்கும் நாயாக மன்மோகன் சிங்கை சித்தரித்து புதிய ஜனநாயகம் வெளியிட்ட புகைப்படம் சமஸின் நினைவிலேயே இருக்கிறதாம்! ஏன், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கள்ளத்தனமாக அவர் கையெழுத்திட்டதும், அதே முறையில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்தியா பெற்ற பேறு என்று ஆக்ஸ்போர்டுக்குச் சென்று போற்றிப் பேசியதும் சமஸின் நினைவில் நிற்கவில்லை போலும்! புதிய ஜனநாயகம் வரைந்தது வெறும் படம் மட்டும்தான். மேற்சொன்ன நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களை நாயினும் கீழாக நடத்தியவர் மன்மோகன் சிங் அல்லவா?

காங்கிரசு முதல் கம்யூனிஸ்டு கட்சி வரையிலான எல்லாக் கட்சிகளையும் விமரிசித்திருக்கிறோம். புலிகள், மண்டல் அரசியல், தமிழினவாதம் போன்ற, மற்ற கட்சியினர் தவறென்று தெரிந்தாலும் பேசத்தயங்குகின்ற விசயங்களைப் பேசியிருக்கிறோம். பதிலுக்கு விமரிசிக்கப்பட்டிருக்கிறோம். அனைத்தும் பொதுவெளியில் நடந்தவைதான். இவற்றிலெல்லாம் புதிய ஜனநாயகத்தின் கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதை சகித்துக் கொள்ள முடியாததன் விளைவே இந்த புளித்த உப்புமா.

கோவன் கைது செய்யப்பட்டதை காங்கிரசு கட்சியினரும் திமுகவினரும் கண்டித்தபோது, “ம.க.இ.க காரர்கள் உங்கள் தலைவரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டு தரம் தாழ்ந்த விதத்தில் கோஷ்டி சேர்க்க முயன்றார் சி.கே சரஸ்வதி. தனது கட்டுரையில் சமஸ் செய்திருப்பதும் அதே வேலைதான்.

சில நாட்களுக்கு முன், “வலது கம்யூனிஸ்டு கட்சி அலுவலகமும் ரிலையன்ஸ் அலுவலகமும் ஒரே மாதிரி இருப்பதாக” எழுதியிருந்தார் சமஸ். பதிலுக்கு அவரை “சகுனி” என்று சாடியிருந்தது ஜனசக்தி. அடுத்த கட்டுரையில் “அவர்களை போலி கம்யூனிஸ்டு என்று எப்படி சொல்லப்போச்சு?’ என்று நம்மிடம் சாமியாடுகிறார். இரண்டு நாட்களுக்குப் பின் “சீக்கிரம் ஐக்கியப்படுமாறு” வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கு அறிவுரை கூறுகிறார். சமஸின் எழுத்தை ஆபாசம் என்று நிரூபிக்கும் சான்றுகள் இவை.

முதலாளித்துவ அரசியலில் மூழ்கி முத்தெடுக்கும் கட்சிகள் என்ற காரணத்தினால்தான் போலி கம்யூனிஸ்டு என்று இரு கட்சிகளையும் விமரிசிக்கிறோம்.  “இன்னும் போதுமான அளவுக்கு உலகமயமாக்கத்தை ஆதரிக்கவில்லை” என்று அந்தப்பக்கம் திரும்பி அவர்களை விமரிசிக்கிறார் சமஸ், இந்தப்பக்கம் திரும்பி, “அவர்களை போலிகள் என்று எப்படி நீங்கள் கண்ணியப் படுகொலை செய்யலாம்?” என்று நம்மிடம் எகிறுகிறார்.

போலி கம்யூனிஸ்டு என்ற எங்களது விமரிசனத்தில் அக்கட்சி அணிகளுக்கு உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அது கம்யூனிசத்தின் பால் நாங்கள் கொண்ட அக்கறையிலிருந்து பிறந்த விமரிசனம் என்பதை அவர்களும் அறிவார்கள். சமஸ் வெளிப்படுத்தும் “மிகை நடிப்பு அக்கறை” சந்தேகத்துக்குரியது என்பதையும் விளங்கிக் கொள்வார்கள்.

“நல்லகண்ணுவே போலி கம்யூனிஸ்டா?” என்று கொதிக்கிறார் சமஸ். “அப்படியானால், அவரைத்தவிர மற்றவர்களெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளா?” என்றுதான் பதில் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கும். தளி ராமச்சந்திரனின் ஊரறிந்த குற்றங்கள், தா.பா போயசுடன் பேணும் நெருக்கம்,  விஜயகாந்தை முதல்வராக்கும் முடிவு – போன்றவை குறித்த நல்லகண்ணுவின் கருத்து என்ன? அநீதியைக் கண்டுங்காணாமல் ஒதுங்குபவர்களும், மவுனம் சாதிப்பவர்களும் நல்லவர்களா? தா.பாண்டியனை நல்லகண்ணுவிடமிருந்து பிரித்துக் காட்டுவதும், கம்யூனிஸ்டு கட்சியை மற்ற முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதும் “நல்லகண்ணுவின் எளிமை”தான் என்றால், அந்த எளிமை தவறுகளை மறைக்கின்ற முகமூடி அல்லவா?

நல்லெண்ணத் தூதர் – சமஸ்

“நக்சல்பாரிகள் உரையாட மறுப்பவர்கள். ஏனென்றால் அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்தரப்பை அழித்தொழிப்பதே அவர்களது வழிமுறை. காரணம் அவர்களுடைய வெறுப்பரசியல், அதற்குப் பின்னால் இருப்பது சகிப்பின்மை, அதற்குப் பின்னால் இருப்பது தூய்மைவாதம். தூய்மைவாதிகள் என்ற முறையில் வகையில் இந்துத்துவ பாசிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் ஒன்றே” – என்றவாறு போகிறது அவரது ஆய்வு.

சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்று பகைமையான வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் சமூகத்தில், ஒடுக்கும் சாதி – ஒடுக்கப்படும் சாதி என்று பிளவு பட்டிருக்கும் சமூகத்தில், “நல்லெண்ணம், சகிப்புத்தன்மை, வெறுப்பு, தூய்மை” ஆகியவற்றை அனைவருக்கும் பொதுவானவை போலப் பேச முடியுமா?

தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் “நல்லெண்ணத்தின்” மீது தாழ்த்தப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பன்னாட்டு முதலாளி வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் மீது தொழிலாளி வர்க்கம் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பசுப்பாதுகாவலர்களின் நல்லெண்ணத்தின் மீது முசுலீம்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா?  “சப் கா சாத் சப் கா விகாஸ்” (எல்லோருடனும் – எல்லோருக்கும் முன்னேற்றம்) என்ற மோடியின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் விளைவு நரகம்தான் என்பதை மக்களின் அனுபவம் காட்டவில்லையா?

“புறவயமான உண்மைகளிலிருந்து தொடங்கு” என்பது மார்க்சியம். “நல்லெண்ணத்திலிருந்து தொடங்கு” என்பது காந்தியப் பித்தலாட்டம். தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார் காந்தி. மறுத்தார் அம்பேத்கர். இன்று அந்த நல்லெண்ணத்தின் கோரைப்பற்களில் ரத்தம் வழிகிறது. அதுதான் இந்துத்துவம்.

வர்க்க ரீதியாகவும், சாதி, மத, இன ரீதியாகவும் ஆதிக்கம் செய்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அடக்கப்படுபவர்களின் பால் சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமா, அல்லது அடக்கப்படுபவர்கள் ஆண்டைகளின் பால் “சகிப்புத்தன்மை” காட்ட வேண்டுமா? “நீ தீண்டத்தகாதவன்” என்று ஆதிக்க சாதிக்காரன் சொல்வதும், “தொழிலாளர் நல சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும்” என்று மோடி அரசு கூறுவதும், சகிப்புத்தன்மையுடன் காது கொடுக்க வேண்டிய “மாற்றுக் கருத்து”களா?

“எதிரிகளிடம் மட்டுமல்ல, நண்பர்களிடமும் சகிப்புத்தன்மை காட்டாதவர்களே நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ். நண்பர்கள் என்று அறியப்படுவோரே ஆயினும், அவர்களது சொல்லும் செயலும் சகித்துக் கொள்ள இயலாதவையாக, மக்கள் விரோதமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் பால் எப்படி சகிப்புத்தன்மை காட்ட இயலும்?

“மாவோயிஸ்டுகள் இவர்கள் எந்த தரப்புக்காக பரிந்து பேசுவதாக சொல்கிறார்களோ, அந்த்த் தரப்பினரைத்தான் அதிகம் கொல்கிறார்கள். தண்டகாரண்யத்தில் கான்ஸ்டபிள் உடையில் நிற்பவர்கள் பழங்குடிகள்தானே” என்கிறார் சமஸ். அடேயப்பா, இந்த அறிவுக்காகத்தான் இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தை இவரிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்களா? அம்பானியும் அதானியும் யூனிபார்ம் போட்டு சி.ஆர்.பி.எப் இல் துப்பாக்கியை ஏந்தி நின்ற பின்னால் ஆயுதப் போராட்டம் நடத்துமாறு மாவோயிஸ்டுகளுக்கு அறிவுருத்த வேண்டுமோ!

“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ்.

இந்து மதவெறி என்று சொல்லத் தயங்குவோரால் புழக்கத்தில் விடப்பட்ட “வெறுப்பு அரசியல்” என்ற சொற்றொடரை நக்சல்பாரிகளுக்கு எதிராக ஏவுகிறார் சமஸ். சுரண்டலையும் ஆதிக்கத்தையும் வெறுக்கச் சொல்லும் நக்சல்பாரி அரசியல், ஒடுக்கப்படும் சமூகத்தினரை வெறுக்கச் சொல்லும் இந்துத்துவ அரசியல் ஆகிய இரண்டுமே வெறுப்பு அரசியலாம்! உழைக்கும் வர்க்கத்தின் மீது பணக்கார வர்க்கம் காட்டும் வெறுப்பும், தன்னைச் சுரண்டும் பணக்கார வர்க்கத்தின் மீது உழைக்கும் வர்க்கம் காட்டும் வெறுப்பும் ஒன்றா? பார்ப்பன, ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்படும் சாதிகள் மீது காட்டும் வெறுப்பும், ஒடுக்கப்படும் சாதிகள் ஆதிக்கசாதியினர் மீது கொண்டுள்ள வெறுப்பும் ஒன்றா?

உழைக்கும் மக்களுக்கு எதிரான வெறுப்பரசியல் நடத்துவது அரசும் ஆளும் வர்க்கங்களும்தான். அவர்களுக்கு சொம்படிக்கும் ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.  “விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை” என்று கூறுகின்ற, “சாராயக்கடைகளை நடத்தியே தீருவேன்” என்று வெறி பிடித்து அலைகின்ற, “தொழிலாளிகளின் ஓய்வூதியத்தை திருடிக்கொண்டு, அதைத் தட்டிக்கேட்டால் வேலைநீக்கம்” என்று மிரட்டுகின்ற – இந்த அரசின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் காட்ட வேண்டிய உணர்ச்சி – வெறுப்பைத் தவிர வேறு என்ன?

“தொட்டால் தீட்டு” என்று தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பனியத் தூய்மைவாதமும், சாதி ஆதிக்கவாதிகளை ஒதுக்கி வைக்கும் கம்யூனிஸ்டுகளின் தூய்மைவாதமும் ஒன்றா? கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட விரும்பும் மெக்கார்த்தியிச தூய்மை வாதமும், முதலாளித்துவக் கருத்தியலின் கறை படியாமல் தன் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் கம்யூனிஸ்டு கட்சியின் தூய்மைவாதமும் ஒன்றா? “லஞ்சம் வாங்காதே, பொதுச் சொத்தை திருடாதே” என்று கூறுபவர்களைக்கூட தூய்மைவாதி என்று தூற்றும் நபர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு தூற்றுவோர் பிழைப்புவாதிகள் என்றல்லவா அறியப்படுகிறார்கள்!

இந்துத்துவ மண் வாசனை!

“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ். எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், தற்காலிக சமரசம் மேற்கொள்வதும் இல்லாத போராட்டங்கள் உலகத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். சமஸ் பேசச் சொல்வதன் பொருள் வேறு. அவர் பாசிஸ்டுகளுடன் பேசி கருத்தொற்றுமைக்கு வரச்சொல்கிறார். பேச மறுப்பவர்களும் பாசிஸ்டுகளே என்று முத்திரை குத்துகிறார்.

ஏனென்றால், “இந்த மண்ணில் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் ஒருநாளும் எடுபடாது” என்று நக்சல்பாரிகளுக்கு அறிவுரை சொல்கிறார் சமஸ். ஆயுதமும் வன்முறையும் இல்லாமலும், அந்த வன்முறைக்கு இந்து பொது உளவியலின் ஒப்புதல் இல்லாமலும்தான் இந்த மண்ணில் இந்துத்துவம் அரியணை ஏறியிருக்கிறதா? தீண்டாமைக் கொலைகளும் ஆணவக் கொலைகளும் வேறு ஏதோவொரு மண்ணில் நடக்கும் வன்முறைகளா?

அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ். அதனால்தான் போலீசு காவலில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தோழர் சாரு மஜும்தாரை, “இறந்தார்” என்று எழுதுவதற்கு அவர் கூசவில்லை. கார்ப்பரேட் ஆதரவு நரவேட்டைக்காக, மாவோயிஸ்டுகளை “நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று கூறிய மன்மோகன் சிங்கின் வருணனையை அப்படியே வழிமொழிவதிலும் அவருக்கு உறுத்தல் இல்லை.

நக்சல்பாரி இயக்கத்தை இந்துத்துவ பாசிச எதிர்ப்பின் ஈட்டி முனை என்று நாம் கருதுகிறோம். பாஜக வினரும் அவ்வாறே கருதுகிறார்கள். ஆனால் “எதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தி சங்க பரிவாரத்துக்கு உதவியிருப்பவர்கள் நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ்.

“தோற்றுப்போய் பல்லிளித்து மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட இந்த அரசமைப்புக்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைக்க வேண்டும்” என்று நாம் கூறுகிறோம். “ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைத்தவர்களே நக்சல்பாரிகள்தான்” என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறார் சமஸ்.

இந்த அரசமைப்பின் துணை கொண்டு இந்துத்துவத்தை வீழ்த்த சண்டமாருதம் செய்யும் சமஸ், “இப்போது கூட இல்லையென்றால் எப்போது இணையப்போகிறீர்கள்” என்று கம்யூனிஸ்டுகளை கடிந்து கொள்கிறார். இணைந்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதில் அடுத்த நாள் வருகிறது. “தமிழிசையிடமே பேச முடியாவிட்டால், மோடியிடம் எப்படி பேசப்போகிறோம்?”

எட்டப்பன் கூட தனியாகத்தான் கும்பினிக்காரனின் காலில் விழுந்திருக்கிறான். “கும்பினிக்கு எதிரான பாளையக்காரர்களை அணிதிரட்டி, போர் போர் என்று சங்க நாதம் செய்து, பிறகு கூட்டமாகப் போய் காலில் விழுந்தால், சன்மானம் வெயிட்டாக கிடைக்கும்” என்ற சாமர்த்தியம் எட்டப்பனுக்கு இல்லை. என்ன செய்வது கொஞ்சம் பிந்திப் பிறந்து விட்டார் சமஸ்!


 1. சம காலத்து எட்டப்பன் சமஸ்.இந்துப் பத்திரிக்கையில் இந்தக் கருத்துக்கள் சுதந்திரமான முறையில் வெள்யிடப்பட்டுள்ளதால் இதற்குப் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.இல்லாவிட்டால் இந்த நடுப்பக்க நாயகனை நாய் கூட சீந்தாது.கட்டுரையாளர் சொன்னதைப் போல ஒரே நேரத்தில் எல்லோருக்கும்( நாற்சந்தியில் ) வழி காட்டும் பொறுப்பை சமத்துவ ஞானி ஏற்றுக்கொண்டுவிட்டதால் இந்த பதில் அவர் கட்டுரையில் காணப்பட்ட அனைவருக்குமான பதிலாக அல்லது புரிதலாக அமைந்துவிட்டது.அதற்காக ச ம ஸ் ஐ நினைத்துக்கொள்ளலாம்!

 2. இட்டிலி உப்புமா எதைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் புளிக்கும்.வாய் வழியே போய் ஆ.வாய் வழியே வருகிறவரைக்கும் குணத்தைக் காட்டும்.

 3. நக்ஸல்பாரிகள்வீழ்கிறார்களா எழுகிறார்களா!சமஸின்கட்டுரைகுழப்புகிறது,பிஜேபியைஆதரிக்கிறாரா ,வெறுக்கிறாரா!அசைவஹோட்டலில்ரசைவபிரியர்களை சாம்பாரைவைத்துகரெக்பண்ணுவதுபோல.சிதறாமல்வளர்கிறதுபிஜேபிஎன்றுபாராட்டுகிறார்,இவர்கள்வளர்வதேகம்யூனிஸ்டுகள்வெறுப்புஅரசியலால்தான்எனவிமர்சிக்கிறார் .வழுவானதேவெற்றிபெறூம்எனமீண்டுமாபாஜகவைகொண்டாடுகிறார்.நக்ஸல்பாரிகம்யூனிஸ்டுகள்விவாதித்தே காலத்தைதொலைத்ததாகசாடுகிறார்! அடுத்த பத்தியில் பல ஊடகமும் ,ஊடகவியலாளர்களும் ,சமூக ஊடகங்களும்புதியஜனநாயகம்மொழிக்குமாறிநெடுகாலம்ஆச்சுஎன்கிறார்.உச்சநீதிமன்றமுன்னாள்நீதிபதி கட்ஜூமுதல், அரசியலுக்குவரஆண்டவன்அனுமதிக்காக காத்திருக்கும் ரஜினி வரைஇந்தசிஸ்டமேபெயிலியர்என்கின்றனர்!தமிழகபெண்கள்காந்திவழியைகடாசிவிட்டுகடப்பாரையைகையிலேந்திபகத்சிங்பாதையில்பயணிக்கிறார்கள்.விவசாயிகள்முழுநிர்வாணமாகநின்று இன்றைய இந்தியாவைதிறந்துகாட்டுகிறார்கள்,ஏழுநாளில்அதிகாரத்தைகையில்எடுத்துகாட்டிஆதிகாரவர்க்கத்தைபணியவைத்தார்கள்மாணவர்கள்பாவம்”போலிசுஅரசு”அவர்களைஇன்னமும்தூங்கவிடவில்லையே தேர்தல்காலத்தில்நல்லகண்ணுவிற்குஉங்கள்கட்டுரையில்முதல்வர்அந்தஸ்துவிற்குகூடதகுதியற்றவர்என ஒதுக்கிதள்ளியவர்நீங்கள்!பொதுஉடமைஅரசியலில்எப்படிமுன்னிருத்தமுடியும்? உங்கள்பாதைதெளிவில்லை!பிஜேபிசமூகஆர்வலர்கள் பிரிவு,ஊடகப்பிரிவுபோல,சமஸ்வகைபிரிவுஒன்னுஇருக்கா!

 4. சமஸ் தி இந்து கட்டுரை மூலம் புதிய ஜனநாயக புரட்சியாளர்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் .

 5. சமஸ் கட்டுரைக்குள்ள எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று இந்த கட்டுரைய படிச்சா நல்லா தெரியும். கீற்றிலும் சம்ஸை பற்றி விமர்சனம் வந்தது அதில் அவர் கூறிய விஷயத்தை விவாதித்து. ஆனால் இந்த கட்டுரை அவரை தோலுரித்துள்ளது.

 6. இந்த கமெண்டை எல்லாம் வல்ல சமசுக்கு அற்பணிக்கிறேன்.

  //எதிரிகளும் சொல்லக் கூசும் மொழியில் ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’ என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வசை பாடினர்.//

  அப்படியா? உண்மை வேறாக அல்லவா உள்ளது! இந்த இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள பழைய தொண்டர்களை கேட்டால் என்ன பதில் சொல்கிறார்கள் தெரியுமா சமஸ்? ‘கம்யூனிஸ்டு தலைவர் என்று சொல்லிக்கிறாங்க ஆனால் அவர்கள் டாடா சுமோவில் செல்கிறார்கள்”, “பழைய தலைவர்கள் மாதிரியெல்லாம் இல்லங்க”, “தன்னுடைய சொந்தகாரர்களுக்கு தான் கட்சியில் பதவியை கொடுக்குறாங்க”, “நாங்க DYFI யில் தொடர்ச்சியாக வேலை செய்தோம் ஆனால் எந்த வேலையும் செய்யாத மாதர் சங்க தலைவரோட பையனுக்கு மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்தாங்க அதனால தாங்க விலகிட்டேன்” இதுப்போல் இன்னும் நிறைய உதாரணம் கொடுக்க முடியும். ம.க.இ.க. காரங்க சொல்வது இருக்கட்டும் முதலில் இரண்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகியவர்களை போய் ஏன் விலகினீர்கள் என்று கேட்டுப்பாருங்க நிறைய சொல்வாங்க. இவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களில் அதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய சங்கம் CITU. அதில் உள்ளவர்கள் தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்று கேட்டுபாருங்கள் அப்பவாவது உங்களது புத்தியில உரைக்குதா என்று பார்ப்போம். ஐயா சமசு! ஒரு கட்டுரை எழுதும் போது நன்கு ஆய்வு செய்து எழுத வேண்டும் சரியா? சும்மா நான்கு சுவத்துக்குள் உட்கார்ந்துக்கொண்டு கதையளக்க கூடாது.

  //அந்தக் கட்சிகளுக்குள் நெகிழ்வுத்தன்மைக்கு எதிர்ப் போக்கு உருவாகவும் வழிவகுத்தன. விளைவாக, சமரசம் எனும் சொல் தொடர்ந்து இழிவானதாகவே பார்க்கப்பட்டது. நெகிழ்வுத்தன்மை எதிர்மறையாக அணுகப்பட்டு, ‘புரட்சிகரமான’ எனும் சொல் ‘மேலும் தூய்மையான, மேலும் கறாரான, மேலும் இறுக்கமான’ என்று அணுகப்பட்டது.//

  இதுல சமசு இன்னா சொல்ல வராருனா, CPI, CPM யை போன்று ம.க.இ.க.வும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்க, ஜி. ராமகிருஷ்ணன் சொல்வதைப்போன்று “விஜயகாந்த் ஒருவரால் மட்டும் தான் ஊழலை ஒழிக்க முடியும்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்க, சபரி மலைக்கு மாலைப்போட்டு போங்க”, “அச்சுதானந்தனைப் போல் பூணூல் போட்டுக்குங்க”, ஏனா “பார்ப்பனியத்துடம் சமரம் செய்துக்கொள்வது மிகவும் முக்கியம் அமைச்சரே”.

  //முதலாளித்துவ அல்லது சங்கப்பரிவார அல்லது பார்ப்பனக் கைக்கூலி எனும் முத்திரைகளுக்கும் அவற்றின் அடித்தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ பொருத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மைதானே?//

  இதைப் படிக்கும் போது ஒரு வடிவேல் காமெடிதான் நியாபகம் வருகிறது “அரசியல் நடுத்துறியா அராஜகம் நடத்துறியா?…” என்று வடிவேல் பேசியதற்கு “மாப்ள இவன்தான் எங்கேயோ செமத்தையா வாங்கிருக்கான், இங்க வந்து வேறெவனோ வாங்குன மாதிரி அவுத்துடறான்”.

  //இந்த மண்ணில் ஒருநாளும் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் எடுபடாது//

  கண்டுபிடிச்சுடாருயா சமசு! இன்றைக்கு காஷ்மீரில் இந்திய இராணும் கையில் பூச்செண்டோடு உலாவருகிறது, டாஸ்மாக்கை எதிர்த்து போராடும் பெண்களை காவல்துறை மயிலிறகால் வருடி வருகிறது, அப்படித்தானே? சமசு உங்க அறிவு எல்லை எதுவோ அதிலிருந்து மட்டும் பேசுங்க! (கடுப்பேத்துறார் மைலார்ட்). 5 ம் வகுப்பு படிக்கும் மாணவன் PhD., thesis யைப் பற்றி வியாக்கியானம் செய்தால் அபத்தமாக இருக்கும் புரியுதா?

  பல்வேறு விவரங்களை தொகுத்துகொண்டு அதை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவது அறிவியல் பூர்வமான வழிமுறை, ஆனால் சமசு கையாளும் வழிமுறையோ அப்படியே தலைகீழானது. முதலில் ஒரு முடிவெடுத்து விட்டு பிறகு அதற்கு தகுந்தாற்போல் விவரங்களை திரட்டுவது. அந்த அபதத்தை தான் ஒவ்வொரு கட்டுரையிலும் காண முடிகிறது. உடல் அளவுக்கு ஏற்பதான் சட்டை எடுக்கனுமே தவிர, சட்டைக்கு ஏற்ப உடல் அளவை மாற்ற கூடாது.

  இன்னொரு கட்டுரையில் //ரஷ்ய மக்கள் போரில் அவதியுறுவதைக் காணச் சகிக்காமல், ஜெர்மனியுடன் சமாதானம் பேச ட்ராட்ஸ்கியை அனுப்புகிறார் லெனின்.// என்று எழுதியுள்ளார். ஐயா சமசு, திரும்பவும் சொல்கிறேன், நுனிப்புல் மேய்வது என்று சொல்வார்கள், அப்படித்தான் உள்ளது உங்களது கட்டுரைகள். உங்களுடைய கட்டுரைகளை படிக்கும் சிலர் ஹாஹா.. ஓஓ.. என்று விதந்தோதலாம். அது எப்படி என்றால் ஒரு பலமொழியைப்போல், ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்று சொல்வதுப்போன்று, அல்லது மோடியை பார்த்து ரகுராம் ராஜன் கூறிய பழமொழியைப் போன்றது. பள்ளியில் பல ஆண்டுகள் தேர்ச்சி பெறாமல் ஒரே வகுப்பிலே தங்கியிருக்கும் மாணவன் அந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை விட சற்று புரிதல்(!) அதிகம் உள்ளவனாக இருப்பான், அதை பார்த்து அந்த வகுப்பை சார்ந்த மற்ற மாணவர், அண்ணன் என்று அழைப்பார்கள், அதேப்போல் தான் உங்களை பாராட்டுபவர்களும், உங்களது மனநிலையும். கொஞ்சம் விசியம் தெரிந்தவர்களுக்கு சிரிப்புதான் வருகிறது.

  ஆனால் சமசு, யார் என்ன சொன்னால் என்ன நீங்கள் உங்களது மன தைரியத்தை விட்டுவிடாதீர்கள், யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள், ‘அடிச்சி கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’.

Leave a Reply to செங்கதிர்செல்வன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க