Saturday, May 3, 2025
முகப்புசெய்திசிறுமி அஃப்சனா : என் கண்ணீரை விட அலங்காரத்தின் மதிப்பு அதிகம்

சிறுமி அஃப்சனா : என் கண்ணீரை விட அலங்காரத்தின் மதிப்பு அதிகம்

-

ஒரு முகத்தை, ஒரேயொரு முகத்தை நினைவுபடுத்த கடினமாக முயல்கிறேன் ஆனால் யாரும் நினைவிற்கு வரவில்லை

பாலியல் தொழிலில் தள்ளப்பட்டோருக்கு இருக்கும் கடுமையான மற்றும் கொடூரமான வாழ்க்கை உலகின் எந்த நாடுகளிலும் வேறுபட்டதல்ல. அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் அங்கே சிக்கிக்கொள்ளும் போது சூழல் மிகவும் சிக்கலாகிவிடுகிறது. இது அத்தகைய கதைகளில் ஒன்று. பங்களாதேசின் பிரபலமான புகைப்படக்காரர் ஜி.எம்.பி.ஆகாஷ் அஃப்சனாவின் கதையை பகிர்ந்து இருக்கிறார்.

அஃப்சனாவின் கதை எவரொருவருக்கும் கோபம், ஏமாற்றம், தவிப்பு, விரக்தி கலந்த உணர்சிகளை எழுப்பி விடும். அந்த பதின்ம பருவ பெண் ஒரு பசுமையான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏங்குகிறாள். இதயத்தை முள்ளாக குத்தும் அவளது இந்த கதையானது அவளது ஒவ்வொரு நாள் போராட்டத்தையும் முன்னிறுத்துகிறது.

நீண்ட காலமாகவே மிகவும் பசுமையான ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த ஒரு பசுமையான இடத்திற்கு ஒருபோதும் நான் சென்றதில்லை. எனக்கு ஒரு நோய் இருக்கிறது, மூடிய கதவிற்கு பின்னே என்னால் மூச்சு விட முடியாது. நான் சிரிக்கும் போதும் அழுகிறேன், என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது எனது அம்மாவிற்கு நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எங்களது மேடம் தான் எங்களது அம்மா. நான் சிரிக்க மட்டும் செய்வேன், ஒருபோதும் அழமாட்டேன், விரைவில் சரியாகிவிடுவேன் என்று அவருக்கு உறுதி கூறினேன்.

இந்த விபச்சார விடுதிக்கு எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவளாக இருந்தேன். ஆனால் என்னுடைய ஒரே பிரச்சினை மூச்சு விட இங்கு சிரமமாக இருப்பது தான். அது மட்டுமல்லாமல் எந்த நபரும் என்னுடைய நினைவில் இல்லை. விழிகளை நான் மூடுகையில் யாருடைய முகமும் எனக்கு நினைவில் இல்லை. நான் தனிமையில் உணர்கிறேன். எங்களுக்கும் கூட யாரும் இல்லை என்று பெண்களும் கூறுவார்கள். ஆனால் எனக்கென்று ஒரு அம்மாவோ அப்பாவோ அல்லது தொலைந்து போன ஒரு குடும்பமோ யாரேனும் எங்கேயாவது இருக்ககூடும் என்று எனக்கு நானே கூறிக் கொள்கின்றேன். நினைப்பதற்கு யாரும் எனக்கு இல்லை. அதனால் ஒரு முகத்தை, ஒரேயொரு முகத்தை நினைவுபடுத்த கடினமாக முயல்கிறேன் ஆனால் யாரும் நினைவிற்கு வரவில்லை.

என்னுடைய முக ஒப்பனையை அழிக்கும் முன்பே என்னுடைய தோழி பிரியங்கா மிக வேகமாக என்னுடைய கண்ணீரைத் துடைத்து விடுகிறாள். என்னுடைய கண்ணீரை விட முக ஒப்பனை விலையுயர்ந்தது என்று அவள் எப்பொழுதும் எனக்கு நினைவூட்டுகிறாள். ஒரு நாள் பசுமையான இடம் ஒன்றிற்கு நாம் செல்வோம் என்றும் அங்கு என்னை அவள் அழைத்து சென்ற பிறகு  எவ்வளவு முடியுமோ அவ்வளவு நான் சுவாசிக்க முடியும் என்று அவள் என்னிடம் கூறினாள். அன்று என்னுடைய விழிகளை மூடும் பொழுது யாரேனும் ஒருவரை என்னால் பார்க்க முடியும் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். ஒருமுறையாவது என்னுடைய வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை என்று நான் உணர விரும்புகிறேன்.

– அஃப்சனா

செய்தி ஆதாராம்: