திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் சாராயக்கடை 21/06/17 அன்று இழுத்து பூட்டப்பட்டது.
ஒரு கணவன் – மனைவி சண்டை கூட டாஸ்மாக்குக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ வைத்துவிடும் என்கிற கொதிநிலையில் தான் தமிழகம் உள்ளது என்பதை இந்தப் போராட்டம் உணர்த்துகிறது.
முதல் நாள் இரவு குடிபோதையில் மனைவியை போட்டு கணவன் அடித்ததை சகிக்க முடியாத பெண்கள் 20 பேர் அடுத்த நாள் காலையில் ஒன்று திரண்டனர். கிராம இளைஞர்கள், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு வந்த பெண்கள், இளைஞர் மன்றத்தினர், சுய உதவிக்குழு பெண்கள் ஆதரவுடன் கடையை முற்றுகையிட்டனர். ஏற்கனவே இப்பகுதியில் 13 ஆண்டுகளாக இயங்கி வந்த சிறுகனூர் சாராயக்கடையை மூடிய மக்கள் அதிகாரம் அமைப்பையும் இப்பிரச்சினையில் தலையிடக் கோரி போராடும் மக்கள் அழைத்தனர்.
அனைவருமாக சேர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் 12:00 மணிக்கு முன்பே திரண்டு டாஸ்மாக்கை கடை திறக்கும் முன்னரே முற்றுகையிட்டனர். சிறுகனூர் காவல்துறை ஆய்வாளரும் வந்து சேர்ந்தார். வந்த வேகத்தில் உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுத்துவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று நைச்சியமாகப் பேசினார். மக்களோ, தாசில்தாரை வரச்சொல்லுங்கள். கடை திறக்க மாட்டோம் என்று எழுதித்தரச் சொல்லுங்கள் என்று பதிலடி தந்தனர்.
தான் மட்டுமே உத்தரவிட்டுப்பழகிய ஆய்வாளருக்கு மக்கள் இட்ட உத்தரவு கோபத்தை வரவழைத்தது. கலைந்து செல்லவில்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டிப் பார்த்தார். மக்களோ துளியும் அசராமல் தாசில்தாரை வரச்சொல்லுங்கள் என்று உறுதிகாட்டினர். மக்களின் உறுதி காரணமாக 1:00 மணிக்கு தாசில்தார் ஜவஹர்லால் நேரு வந்து சேர்ந்தார்.
சுற்று வட்டாரத்தின் 25 கிராமத்திலிருந்து வந்த குடிகாரர்கள் அட்டகாசம் செய்வதையும், குடிகார கணவன்களால் பெண்கள்படும் வேதனைகளையும், பள்ளி மாணவர்கள் குடிப்பது, ஆபாச வசவுகளை அன்றாடம் கேட்டு காது கூசிப் போவது போன்ற குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர்.
இதெல்லாம் தெரியும் என்று தாசில்தார் கூறியவுடனே, “இதெல்லாம் தெரிந்த நீங்கள் கடையை ஏன் மூடவில்லை?” என்று உடனடியாக வந்த எதிர் கேள்வியில் திணறினார். தான் இதுவரை எந்த இடத்திலும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி தரவில்லை என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு சென்றார்.

70 வயது மூதாட்டி ஒருவர் தான் ஆடு மேய்க்கும் போது இளைஞன் ஒருவன் குடித்துவிட்டு வந்து இடிக்கிறான் என்றும், ஏண்டா இப்படி செய்யிற என்று கேட்டதற்கு “நீ என்ன வயசு புள்ளையாடி” என்று அடிக்க வந்ததையும் சொல்லி கண்ணீர் விட்டார். இதன் பிறகும் இளகாத அதிகாரி மானங்கெட்ட முறையில் 15 நாள் அவகாசம் கேட்டார். அதற்கு மக்களோ “15 நாளுக்குப் பின் உள்ளேயுள்ள சரக்கை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் கடையை இன்றே மூடவேண்டும்” என உத்தரவிட்டனர். பெண்களோ, “நீங்க பூட்றிங்களா? இல்ல நாங்களே பூட்டட்டுமா?” என்றனர். திரும்பத் திரும்ப அவர், மேலதிகாரி அனுமதி வாங்க 15 நாள் ஆகும் என்றதால், “15 வினாடி கூட அவகாசம் இல்லை. நாங்கள் மூடிவிட்டோம். உங்கள் அரசாங்கத்தால் முடிந்தால் திறந்து பாருங்கள்” என்று மக்கள் அதிகாரம் தோழர் அறிவித்ததுடன் கடையின் முன் முள்ளை வெட்டிப் போடச்சென்றார். உடனடியாக மக்கள் முள்ளை வெட்டிப் போட்டதுடன் செருப்பு, விளக்குமாரையும் கடை முன் கட்டி தொங்கவிட்டனர். இதுதான் சரியென கூடியிருந்த மக்கள் ஆமோத்தித்தனர்.
மக்கள் அதிகாரத்தின் முன் தனது அதிகாரத்தை இழந்து விட்டதை உணர்ந்த அதிகாரி, “மேலதிகாரியிடம் பேசி கடையை எடுத்து விடுகிறோம். அதுவரை திறக்கமாட்டோம்” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
இப்போராட்டத்தில், உள்ளூர் இளைஞர் மன்றத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஊர்த் திருவிழா போல உற்சாகமாக வேலை செய்தனர். போராட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் தண்ணீர் பாக்கெட், டீ விநியோகித்தனர். மதிய நேரம் கடந்ததால், மதிய உணவு தேவையை உணர்ந்து முன்கூட்டியே சமைத்து முடித்தனர். போராட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர். ஊரில் ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது. இடையில் வெளியூரிலிருந்து வந்திருந்த குடிமகன்கள் சிலர் எங்களுக்கு சரக்கு வேண்டும், கடையை திறக்கவிடுங்கள் என்று கேட்டு அடிவாங்காமல் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை அகற்றப்படுவதைப் போல மக்களுக்கு எதிராகிப்போன இந்த அரசுக்கட்டமைப்பை அகற்றிவிட்டு மக்கள் அதிகாரம் நிலைநாட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 94454 75157