Saturday, May 10, 2025
முகப்புசெய்திமைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !

மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !

-

மைசூர் கலாமந்திர் வளாகத்தில் அமைந்துள்ள மனேஅங்களா அரங்கில் 25.06.2017 அன்று சாருவாகா சமூக மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் “உணவுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் உரிமைகள்” என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்புர்கிக்கு அடுத்து… என இந்துத்துவ கும்பலால் குறிவைக்கப்பட்ட எழுத்தாளர் கே.எஸ். பகவான் மற்றும் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு, முன்னால் மேயர் புருஷோத்தமன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இக்கருத்தரங்கில் கோழி மற்றும் மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது.

அதனால் அந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி பாஜக-வின் இளைஞரணியினர் (யுவ மோர்ச்சா) 26.06.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக இளைஞரணி தலைவர் சம்பத்குமார், மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும். கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டனராம்.

மாட்டு மூத்திரத்தை மா இலையால் கலாமந்திர் வளாகத்தில் தெளிக்கும் பாஜக -வினர்

மைசூர் காவல்துறை இணை ஆணையர் ரன்தீப் என்பவரும் கலாமந்திர் விதிமுறைகளை மீறியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரங்குக்கு செலுத்திய முன்பணத்தை அரங்க உரிமையாளர்கள் திருப்பித் தரக்கூடாது என தெரிவித்துள்ளார். இது காவல் துறையின் புனித மீட்பு முயற்சி. காங்கிரசு அரசாங்கமே ஆனாலும் அதிகார வர்க்கம் எனும் எந்திரம் பார்ப்பனியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒன்றுதான்.

காக்கி சட்டை அணிந்திருப்பதால்  பாஜக –வின் இளைஞரணி தலைவர் போல நேரடியாக பேச முடியாது என்பதால் விதிமுறைகள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு; நிகழ்ச்சி அரங்கில் உணவு பரிமாறுவது விதிமுறை மீறல் எனக் கூறியது போலீசு. அப்படியே உணவு வழங்கினாலும் உணவுக்கூடத்தில் சைவ உணவைத் தான் பரிமாற வேண்டும் என நைச்சியமாகவும் கூறியுள்ளர் காவல்துறை இணை ஆணையர். அத்தோடு நிற்காமல் இனி சாருவாகா சமூக மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் நிகழ்ச்சிகள் வருங்காலத்தில் கலாமந்திர் வளாகத்தில் நிரந்தரமாக அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அதாவது நிரந்தரத் தடை!

அதுமட்டுமல்லாது கன்னட கலாச்சாரத்துறை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதுவும் காங்கிரசு அரசாங்கம் காவி பயங்கரவாதிகளுக்கு செய்யும் சேவை!

நாடு முழுவதும் மாடு, மாட்டு மூத்திரம், சாணி என அரசியல் செய்து வந்தாலும் இந்துத்துவ கும்பலுக்கு எதிரான எதிர்ப்புணர்வு பரவலாக அதிகரித்துக் கொண்டேவருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஆப்பசைத்த குரங்காகவே சிக்கிக் கொண்டுள்ளது இந்துத்துவா கும்பல். இருப்பினும் அரசு எந்திரம் எங்கிருந்தாலும் காவிகளின் கட்டளைக்காகவே வேலை செய்கிறது.

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க