Saturday, May 3, 2025
முகப்புசெய்திதஞ்சை கீழவாசல் டாஸ்மாக் மூடப்பட்டது ! வென்றது மக்கள் அதிகாரம் !

தஞ்சை கீழவாசல் டாஸ்மாக் மூடப்பட்டது ! வென்றது மக்கள் அதிகாரம் !

-

மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் பரந்துபட்ட மக்களின் முழக்கமாகி தமிழ்நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் இல்லாத நாள் இல்லை என்ற நிலைமைதான் பொதுவில் நிலவுகிறது.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பது போல எடப்பாடி குற்றக்கும்பல் நடித்து வந்தாலும் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்களை தேடிப்பிடித்து டாஸ்மாக் கடையை திறக்க எத்தணிக்கிறது. மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டங்களின் மூலம் மூக்கறுபட்டாலும் “டாஸ்மாக்கடைகள் மூடப்பட்ட பின்னாலும் வருமானம் உயர்ந்திருக்கிறது” என்று புள்ளிவிவரங்களை காட்டி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மக்கள் போராட்டங்கள் காரணமாகவும் தஞ்சை மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சை மாநகரில் 5 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்த கடைகளையும் மூடவேண்டும், டாஸ்மாக் இல்லா நகரமாக தஞ்சையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி வருகிறது. வடக்கு வாசல், கொடிக்காலூர், கீழவாசல் பகுதிகளில் மக்கள் தொடர்ந்து டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.

தாலுக்கா காவல் நிலையத்திற்கு அருகிலேயே கீழவாசல் அண்ணாசாலை டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. பொதுமக்களும் வியாபாரிகளும் இந்தக் கடையினால் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வந்தனர். கீழவாசல் காமராஜர் சிலை, பனகல் கட்டிடம் ஆகிய இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் போதையில் தள்ளாடும் ‘குடிமக்களை’ தூக்கிசெல்லும் அவதிக்கு ஆளானார்கள். டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்களும், விபாபாரிகளும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டனர்.

வணிகர் சங்கப்பேரமைப்பை சார்ந்த வணிகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அண்ணாசாலை கடையை மூடக்கோரியபோது, “நம்ம அரசு நம்ம கடை நீங்கள் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று திருப்பி கேள்வி கேட்டு “அந்த கடை அரசு விதிகளுக்கு உட்பட்டே உள்ளது, மூட முடியாது” என்று அடாவடியாக மறுத்தார்.

இதனைக் கேட்டு கொதிப்படைந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மக்கள் அதிகாரத் தோழர்களை அணுகினர். அதைத் தொடர்ந்து “மாவட்ட நிர்வாகமே அண்ணாசாலை டாஸ்மாக்கை மூடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மற்றும் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. கீழவாசல் பகுதி வணிகர்கள் மக்கள் அதிகார சுவரொட்டிகளை தங்கள் கடைகள் முன்னால் வைத்து டாஸ்மாக்குக்கு எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

மக்கள் அதிகாரத்தின் பிரச்சார வடிவமும், போராட்ட வடிவத்தையும், அதனால் பொதுமக்கள், வியாபாரிகள் இடையே பெருகிவரும் போராட்ட உணர்வையும் கண்டு அஞ்சி, கடையை 23.06.2017 அன்று ஓசைப்படாமல் மாவட்ட நிர்வாகம் காலிசெய்து விட்டது. மூட முடியாது என்று எக்காளமிட்ட மாவட்ட நிர்வாகம் பணிந்தது. இதனைக் கண்ட மக்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வியாபாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க