Friday, May 2, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !

மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !

-

தில்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார

டந்த 14.07.2017 அன்று இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் கழிவுத் தொட்டி ஒன்றைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளிகள் விசவாயுவினால் தாக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். ஐந்து தொழிலாளிகளில் சுவர்ன் சிங், பல்விந்தர் சிங் மற்றும் ஜஸ்பால் சிங் ஆகிய மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜஸ்பால் சிங் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.

”நான் மயக்கமடைவதற்கு முன் எனக்குக் கடைசியாக நினைவில் இருந்த காட்சியை எனது வாழ்வில் மறக்கவே முடியாது. சுய நினைவை இழந்த எனது தந்தை தனது இடுப்பில் கட்டிய கயிற்றில் தொங்கி ஊசலாடிக் கொண்டிருந்தார்” என்கிறார் ஜஸ்பால்.

கழிவுநீர்த் தொட்டியின் மூடியைத் திறந்த ஜஸ்பாலின் தந்தை சுவர்ன் சிங், முதலில் இறங்கியுள்ளார். கடைசியாக இறங்கிய ஜஸ்பால், ஏதோ அபாயகரமான வாயுவின் சுவாசம் மூக்கில் பட்டதும் அவசரமாக வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளார். இந்தத் தொழிலாளிகள் சனிக்கிழமையன்று வேலை செய்ய வேண்டாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தனர்; எனினும், வேறு வழியின்றி இந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஜஸ்பாலின் தந்தைக்கு கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் வேலையை அளித்த காண்டிராக்டர், அந்த தொட்டிக்குள் கழிவுநீர் தேங்கியிருக்கும் விசயத்தை சொல்லாமல் மறைத்துள்ளார். தொட்டியினுள் மழை நீர் தேங்கியிருப்பதாகச் சொல்லித் தான் வேலைக்கு அழைத்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த தீபு சிறுவன்; பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவன். ஜஸ்பாலைப் போலவே கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்வதில் எந்த அனுபவமும் இல்லாதவன் தீபு.

“தீபு ஒருவன் தான் எங்கள் குடும்பத்தில் சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பெற்றோர் இறந்து விட்டனர். இந்த வேலைக்குச் போக வேண்டாம் என்று அவனிடம் சொன்னேன். ஆனால், மழைநீர் தொட்டியைச் சுத்தம் செய்து கொடுத்தால் நூறு ரூபாய் கிடைக்கும் என்று நம்பிப் போனான். இப்போது தீபு இறந்து விட்டான். இந்தச் செய்தியை பீகாரில் உள்ள எங்கள் உறவினர்களிடம் சொல்லவில்லை. அவர்களிடம் சொன்னால், சாவுக்கு அவர்கள் வந்து செல்ல வேண்டிய செலவை நானே ஏற்க வேண்டியிருக்கும். தீபுவை அடக்கம் செய்வதற்கே காசில்லாத போது, சொந்தக்காரர்களின் செலவை எப்படி என்னால் சமாளிக்க முடியும்?” என்கிறார் தீபுவின் மூத்த சகோதரர் பம் போலா தூபே.

கடந்த நூறு நாட்களில் மட்டும் இந்தியா முழுக்க 39 பேர் கழிவுத் தொட்டிகளுக்குள் சிக்கி மாண்டு போயுள்ளனர். இவை “அரசியல் படுகொலைகள்” என்கிறார் சமூக செயல்பாட்டாளர் பெஸவாடா வில்சன். 2013ம் ஆண்டு “மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்து அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக” கொண்டு வரப்பட்ட சட்டம் இதுவரை எந்தவொரு மலக்கிடங்குக் கொலைகளுக்காகவும் பிரயோகிக்கப்படவில்லை. இத்தனைக்கும் மத்திய அரசின் இரயில்வே துறை துவங்கி உள்ளூர் நகரசபைகள், பஞ்சாயத்துகள் வரை மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

துப்புரவு வேலைகளில் தலித் மக்களே ஈடுபடுத்தப்படுவதால், தானே இயற்றிய சட்டத்தைத் தானே மீறுவதைப் பற்றி அரசுக்கு துளியளவும் மனவுறுத்தல் இல்லை. இதுவரை நடந்துள்ள மலக்கிடங்குப் படுகொலைகளைப் போலவே தில்லியில் நடந்த கொலைகளின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்கிறார் பெஸவாடா வில்சன். தில்லி முதல்வரும் கவர்னரும் வழக்கம் போல் மாற்றி மாற்றி பழிபோட்டுக் கொள்வார்களே ஒழிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமோ, அவர்களை மரணக் குழிக்குள் தள்ளிய காண்டிராக்டரின் மேலான நடவடிக்கையையோ எடுக்க வேண்டுமென்கிற நோக்கம் இருவருக்குமே இல்லை என்கிறார் வில்சன்.

மேட்டுக்குடியினரின் வசதிக்காகவும், முதலாளிகளின் லாபத்துக்காகவும் திறன் நகரங்களையும், புல்லட் இரயில்களையும் கனவில் கண்டு கொண்டிருக்கும் மோடி அரசு எளிய மக்களை எந்தளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதற்கு இந்தச் சாவுகளே சான்று. சாதாரண மக்கள் வாங்கும் தீப்பெட்டி முதல் ஒவ்வொரு பொருளின் விலையில் இருந்தும் ஸ்வச் பாரத் வரி எனப் பிடுங்கி அதைக் கொண்டு பணக்காரர்களின் அக்கிரகாரங்களை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

இந்துத்துவம் என்றால் என்னவென்பதற்கு அரசியல் விளக்கத்தை நாக்பூர் காவிக் கோமாளிகளும், சமூக ரீதியான விளக்கத்தை மலத்தொட்டிகளும் வழங்குகின்றன.

செய்தி ஆதாரம்:

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க