பத்திரிகையாளர்களுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கையும் ‘கவருமாக’ பிடிபட்டுள்ளது. ஒடிசா மாநிலம் அங்கூலில் இருந்து சம்பல்பூர் வரையிலுமான தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டு நான்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான துவக்க விழா கடந்த 21 -ம் தேதி அன்று நடந்துள்ளது. புதிய திட்டங்களுக்கான துவக்க நிகழ்ச்சி தேசிய நெடுஞ்சாலத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் வந்திருக்கிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ‘கவர்’ அளிக்கப்பட்டுள்ளது. கவரைப் பிரித்துப் பார்த்த பத்திரிகையாளர்கள், அவை ஒவ்வொன்றின் உள்ளும் ஐநூறு ரூபாய்த் தாள் ஒன்று வைக்கப்பட்டிருப்ப்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், தாம் அவமதிக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரமுற்று லஞ்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிகள் மேற்படி விசயத்தை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் இம்மாதிரியான விவகாரங்களில் நடத்தப்படும் விசாரணைகளும், அவற்றின் முடிவுகளும் எவ்வாறு இருக்கும் என்பதை நாடு அறியும். விசாரணைகளின் ‘முடிவை’ முன்னறிவிப்பது போல் இப்போதே மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், தங்களுக்கும் லஞ்சத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையோ, தான் அளித்த கவர்களில் லஞ்சப் பணம் நுழைந்தது எப்படி என தனக்கே தெரியாது என்கிற ‘விஞ்ஞான’ விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.
தான் ஆட்சிக்கு வந்தால், “தின்னவும் மாட்டேன், தின்ன விடவும் மாட்டேன்” என்று தேர்தல் பிரச்சாரங்கள் நடந்த வந்த சமயத்தில் நரேந்திர மோடி மார்தட்டிக் கொண்டது நினைவிருக்கும். எனினும், நரேந்திர மோடி அதிகாரத்துக்கு வந்த பின் லஞ்ச ஊழல் புதிய பரிமாணங்களை எட்டின. விதிமுறைகளை மீறி அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் ஆகட்டும், பாபா ராம்தேவின் புளியமரத்தடி ‘மூலிகை’ பொருட்களுக்காக சந்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகட்டும், ஐம்பது உயிர்களுக்கு மேல் காவு வாங்கியுள்ள மத்திய பிரதேச மாநில வியாபம் ஆகட்டும் – பாரதிய ஜனதா வெறுமனே ஊழல் செய்யும் கட்சி மாத்திரமல்ல, மாறாக ஊழலை மறைப்பதற்காகவே விதிகளையும் சட்டங்களையும் உடைத்துப் போடுவதோடு கொலையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது பல்வேறு சந்தர்பங்களில் நிரூபணமாகியுள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா ஒடிசா பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது அல்ல மேற்படி செய்தியின் சிறப்பு. ஒடிசா மாநிலத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் நவீன் பட்நாயக்கின் ஆட்சியை ஏதாவது செய்து கவிழ்த்து விட்டுத் தனது ஆட்சியை நிறுவ பாரதிய ஜனதா தலையால் தண்ணீர் குடித்து வருகின்றது. இதற்காக, மத்திய ஆட்சியதிகாரம் தம் கையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய துறைகளின் திட்டங்களை பாரதிய ஜனதாவின் திட்டங்களைப் போல் விவரிப்பதற்கும், ஒடிசா வாக்காளர்களிடையே பாரதிய ஜனதாவுக்கென “நற்பெயரை” நிலைநாட்டுவதற்குமே பத்திரிகையாளர்களுக்கு விலை பேசியுள்ளனர். லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தியதோடு, எதிர்ப்பும் தெரிவித்துள்ள ஒடிய பத்திரிகையாளர்கள், பாரதிய ஜனதாவின் முகத்தில் சாணியடித்துள்ளனர் என்பதே மேற்படி செய்தியின் சிறப்பு.
இதில் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு – குறிப்பாக தொலைக்காட்சி செய்தி ஊடகங்களுக்கு – ஒரு செய்தி உள்ளது. தமிழ்நாட்டு செய்தி விவாதங்களில் பங்கேற்கும் பாரதிய ஜனதாவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவாளர்கள், நேர்மைக்கும் உண்மைக்கும் பிறந்த ஒரே குழந்தையாக நரேந்திர மோடியைச் சித்தரிப்பதையும். பாரதிய ஜனதாவைத் தூய்மையின் குறியீடாக சித்தரிப்பதையும், ஊழல் என்றாலே அது அதிமுக, திமுக, காங்கிரசு போன்ற கட்சிகள் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயம் போல அவிழ்த்து விடுவதையும் நாம் அறிவோம். பாரதிய ஜனதாவை ஒழுக்கத்தின் உறைவிடமாகச் சித்தரிக்கும் இந்தப் பொய்களை அம்பலப்படுத்துவதில் பிற கட்சிகளுக்கு வேண்டுமானால் தடைகள் இருக்கலாம் – ஆனால், அந்தப் பொய்களை அனுமதிக்க வேண்டிய தேவை விவாத நெறியாளர்களுக்கு என்ன தேவை உள்ளது?
ஒடிசா பத்திரிகையாளர்கள், தமிழக பத்திரிகையாளர்களை நோக்கி ”உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?” எனக் கேட்கின்றனர். தமிழக பத்திரிகையாளார்களே, என்ன பதில் வைத்துள்ளீர்கள் இதற்கு?
செய்தி ஆதாரம் :
_____________
இந்த செய்திப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
- பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் பித்தலாட்டங்களை அஞ்சாமல் தோலுரிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி