Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !

ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !

-

திராமங்கலம் ஊரு
கதிரேசன் பேரு…
வயவெளி காத்துலதான்
என்னோட உசுரு
வாழ வச்ச பூமி…     எட்டு ஏக்கரு…

குள்ள பொன்னி, குதுர வாலு
ஆடுதுறை, அய். ஆர். எட்டு
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
கூட வந்தது நாத்துக் கட்டு
தங்கச் சம்பா வெளஞ்சது
தங்கச்சிய கர சேத்தேன்,
முத்து முத்தா வெளஞ்சது
மூத்தவன படிக்க வச்சேன்…

குடும்ப பாரத்தையே
சொமந்தது அந்த கதுருதான்
ஒவ்வொரு கஷ்ட்டத்திலேந்தும்
கர சேத்தது வயலுதான்
வரப்புல நடந்துதான்
வந்தேன் இத்தன தூரம்
மடை தண்ணி பாய்ஞ்சுதான்
மனசு வரைக்கும் ஈரம்…

வண்டி மாடு வச்சிருந்தேன்
வைக்கோல் போரு வித்திருந்தேன்
மாயவரத்தில் நெல்லு போட்டேன்
மளியக்கடையில் கணக்கு தீர்த்தேன்
அள்ளி தெளிச்ச பயிறு போட்டு
வெள்ளிக் கொலுசு வாங்கி வந்தேன்
வெத நெல்லு ஒரு குதுரு
வீட்டு நெல்லு ஒரு குதுரு
வேண்டிய போகமெல்லாம்
வெளஞ்சி தந்தது மஞ்ச கதிரு…

அள்ளி அள்ளி தந்தது
நெல்லு மட்டுமா?

அந்த நிலம் மட்டும் இல்லேன்னா
எதுவும் கிட்டுமா!
மாடு கன்னு நிக்குமா
ஆடு கோழி அண்டுமா!
ஒரு பத்திரிகை வைக்கவும்
ஊர் மரியாதை கெடைக்குமா?
அத்தனையும் தந்தது… வெவசாயத்தால்
ஆயிரம் உறவு வந்தது….

அண்ட வெட்ட, கள புடுங்க
அறுப்பாளு அத்தன பேரு
தொண்டக்குழி நீராகாரம்
தொட வரைக்கும் சேறு
கெண்டக்கால சுழிக்காம
விட்டதில்ல வெட்டாறு

கதிரேசு கதிரேசுன்னு
கூப்பிட்ட குரலுக்கு வரும் ஊரு
அத்தனயும் போன தெச தெரியல
வெடிச்சது இந்த வயலா….!
இன்னும் நம்ப முடியல!
என் அடிவயிறு எரியுது
இந்த அரசாங்கம் எதுக்கு புரியல…
கண் எதிரே செத்துப் போச்சி… எட்டு ஏக்கரு
கைய விட்டு போயிடிச்சி… எட்டு ஏக்கரு
கல்யாண பத்திரிகைல மட்டும்… பேரு மிராசு!

என் நெஞ்சில் வெடிக்குதய்யோ… எட்டு ஏக்கரு
இப்போ… ஏ.டி.எம்.மு வாசலுக்கு
நான் காவல்காரு…
அய்யோ… ஏ.டி.எம்மு வாசலுக்கா
இந்த உசுரு…!

  • துரை. சண்முகம்

_____________

இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • விவசாயிகளின் தோழன் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி