Thursday, May 1, 2025
முகப்புஉலகம்இதர நாடுகள்ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு

ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு

-

மியான்மரில் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த சுமார் 80,000 முசுலீம் குழந்தைகள் பட்டினிச்சாவின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு எச்சரித்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 45 கிராமங்களிலும் ஒரு குழந்தைக்குக் கூட குறைந்தபட்ச போதுமான உணவு கிடைப்பதில்லை என்கிறது அந்த ஆய்வு.

மியான்மர் இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 75,000 ரோஹிங்கியா மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை கூறுகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட 80,500  குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிகப்பட்டுள்ளனர். வாழ்வாதார உதவிகளை எதிர்பார்த்து 2,25,000 மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரோஹிங்கியா இனவழிப்புத் தாக்குதல்கள் நடக்கும் முன்பு 13 இலட்சம் ரோஹிங்கியா மக்கள் மியான்மரில் குறிப்பாக ராக்கின்(Rakhine) மாநிலத்தில் வாழ்ந்து வந்தனர். சவூதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் ரோஹிங்கியா இனத்தின் 80 விழுக்காட்டினருக்கு மியான்மர் தான் தாயகமாக இருந்தது.

வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாங்கடா (Maungdaw) மாவட்டத்தின் மூன்றில் ஒரு பகுதி வீடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறை இருக்கிறது. அதாவது நாள் முழுதும் கூட அந்த பகுதி மக்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். இராணுவத் தேடுதல் வேட்டை காரணமாக பெரும்பாலான ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதால், தனியாக இருக்கும் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

பர்மாவில் ரோஹிங்கியா இன மக்களின் வலியை படம்பிடித்துக் காட்டும் குழந்தையின் ஓவியம் ( படம் – நன்றி : இன்டிபெண்டன்ட் )
பர்மாவில் ரோஹிங்கியா இன மக்களின் வலியை படம்பிடித்துக் காட்டும் குழந்தையின் ஓவியம் ( படம் – நன்றி : இண்டிபெண்டன்ட் )

வன்முறையினால் வேலை வாய்ப்பும் அருகிப் போய் விட்டது. சந்தைகளும் அங்காடிகளும் பாதிக்கும் மேல் மூடப்பட்டு விட்டதால் உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. அதனால் பொருள்களின் விலையும் அதிகரித்துவிட்டது.

ரோஹிங்கியா மக்கள் மியன்மாரின் பூர்வகுடிகளா என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவர்கள் பூர்வகுடிகளா என்ற கேள்வியையும் தாண்டி அவர்களுக்கென்று எவ்வித அடையாளமும் அங்கே கிடையாது. பர்மாவின் குடிமக்களாக அவர்களை பௌத்த பேரினவாதம் அங்கீகரிக்கவில்லை. பௌத்தர்களை பொறுத்தமட்டில் அவர்கள் வந்தேறிகள்.

ரோஹிங்கியா இன அழிப்பு மற்றும் அவர்களுக்கெதிரான குற்றங்களை எதிர்த்து நோபல் பரிசுப் பெற்ற பத்திற்கும் மேற்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு கடிதம் எழுதினர். ஆனால் பர்மா அதிகாரிகள் எந்தவித விசாரணைக்கும் ஒப்புக் கொள்ளவில்லை. ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று அனைத்தையும் மறுத்து விட்டனர்.

மியான்மர் பாதுகாப்புப் படையினரைக் கடந்த 2015 –ம் ஆண்டு அக்டோபரில் ரோஹிங்கியா ஆயுதப் போராட்டக்காரர்கள் தாக்கியதற்கு பதிலடியாக வானூர்திகள் மூலம் ரோஹிங்கியா கிராமங்களை இராணுவம் கடுமையாகத் தாக்கியது. இதில் ரோஹிங்கியா மக்கள் பலர் பலியானார்கள். இதற்காக மியான்மரின் தேசிய ஆலோசகரான ஆங் சான் சூகி சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டார்.

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்ததால் சூகி 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூகி 2015 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் பிரதமர் ஆக முடியவில்லை. ஆயினும் பிரதமருக்கு இணையான தேசிய ஆலோசகர் என்ற புதிய பதவியை 2016 -ம் ஆண்டு ஜனவரியில் உருவாக்கி அதிகாரத்தை தனதாக்கி கொண்டார்.

இராணுவ ஆட்சியை எதிர்த்து நடந்த போராட்டத்தை ஈவிரக்கமில்லாமல் நசுக்கியதற்காக மியான்மரின் மீது 1989 -ம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. ஆனால் முதலாளித்துவம் மலர்ந்த பின்னர் ரோஹிங்கியா மக்கள் மீதான இனவழிப்பு குற்றத்திற்குப் பரிசாய் பொருளாதாரத் தடையை நீக்கியது அமெரிக்கா.

முதலாளித்துவமும் இனவெறியும் ஓட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒரு கட்சி சர்வாதிகாரத்தில் எந்த ஒரு ஜனநாயகமும் இல்லை என்று ஒப்பாரி வைக்கும் முதலாளித்துவத்தின் ஜனநாயக எல்லை எதுவென்பதை  ரோஹிங்கியா இசுலாமிய இன அழிப்பு நமக்குக் கூறுகிறது.

செய்தி ஆதாரம் :

_______________________

இந்தச் செய்தி உங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா!
இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வாரச் செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க