Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைஇந்தியா வல்லரசாகுது ! எங்க ஊரு காலியாகுது !

இந்தியா வல்லரசாகுது ! எங்க ஊரு காலியாகுது !

-

கொல்லைப்புறத்தின்
குடக்கல்லில்
பாம்புச்சட்டையை
கண்டு பயந்து

குட்டி போட
எட்டிப்பார்த்த நாய்
ஓடிவிட்டது.

மக்கிப்போன புடைமுறத்தை
சுற்றிச் சுற்றி வந்து ஏமாந்து
சுறுசுறுப்பை இழந்து விட்டது எறும்பு.
சீண்ட ஆளின்றி
குப்பைமேனி
காய்ந்த சிரங்காகி கிடக்கிறது.

இற்றுப்போன கூரையின்மேல்
தத்தி வரும் அணில்
ஆள் புழங்கும் ஓசையற்ற
வீட்டின் தனிமை கண்டு
வெலவெலத்து ஓடுகிறது.

வெகுநாளாய்
குழம்பு கொதிக்கும் வாசமற்று
குழம்பிப்போன பூனைகள்
ஆதரிக்க குரல் தேடி
குழந்தைகளாய் அழுகிறது.

பூராணும், தேளும் கூட
புழங்க முடியாமல்
புழுங்கிக் கிடக்கும் சுவரில்
பழைய கருக்கரிவாள்
தழும்பாகத் தெரிகிறது.

ஊர் என்று சொல்ல
ஒரு காக்கை குருவி இல்லை
உறவென்று சொல்ல
ஒரு புழு, பூச்சி இல்லை
யார் என்று கேட்க
குரல் ஒன்றுமில்லை…

மூடிக் கிடக்கும்
வீட்டு வாசலின் முன் நின்று
விவரம் புரியாமல்
விடாது கத்துகிறது மாடு.

வழக்கமாக
தண்ணீர் வைப்பவளின்
குரலைக் கேட்காமல்
அது நகர மறுக்கிறது.

இந்த வீடு  மட்டுமல்ல
கிராமத்தில்
பல வீடுகளில்
ஆளில்லை என்பதை
எப்படி புரிய வைப்பது
அந்த மாட்டிற்கு!

– துரை. சண்முகம்
_____________

இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை
ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி