தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், தமிழ்நாடு மதுவகைகள் ( தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீட்டில் வைத்துக்கொள்ளுதல்) விதியில் திருத்தம் செய்து அதன்படி, இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும், 4.5 லிட்டர் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு முன்பு ஒருவர் தனது வீட்டில் இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் ஒரு பாட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் ஒரு பாட்டிலும், ஒயின் ஒரு பாட்டிலும், 2 பீர் பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று இருந்தது.

இந்த திருத்தம் குறித்து கூறிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், கடந்த இருபது ஆண்டுகளாக இந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. மற்ற மாநிலத்தில் இருக்கும் நிலவரப்படி இந்த விதியை திருத்தி இருக்கின்றோம். ஆனால் விதிகளை மீறி அதிக மது பாட்டில்கள் வைத்திருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும். இதற்கு குறைந்தபட்ச தண்டனையாக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், குடியிருப்புகளில் வைப்பதற்கு மட்டுமே இந்த புதிய விதி திருத்தம் அனுமதிக்கிறதே தவிர வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளார்.
மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக் கொள்வது குறித்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பஞ்சாப்பில் 2 பாட்டில் ஐ.எம்.எப்.எல், ஒரு பாட்டில் பீர், இரண்டு பாட்டில் இறக்குமதி சரக்கு, இரண்டு பாட்டில் நாட்டு சரக்கு வகைகள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் ஆண்டுக்கு ரூ.1000 அல்லது வாழ்நாள் கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்தி எல்-50 பிரிவின் கீழ் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஹரியாணாவில் 6 பாட்டில் நாட்டு மது, 18 பாட்டில் ஐ.எம்.எப்.எல், 6 பாட்டில் இறக்குமதி மது, 12 பீர் பாட்டில் 6 பாட்டில் ரம், 12 பாட்டில் ஒயின், 6 பாட்டில் வோட்கா, ஜின், சைடர் ஆகிய சரக்கு வகைகளை வைத்துக் கொள்ளலாம். அதுபோக ஆண்டுக்கு ரூ.200, அல்லது ஆயுளுக்கு ரூ.2000 செலுத்தி எல்-50 அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
ராஜஸ்தானில் 12 பாட்டில் அல்லது 9 லிட்டர் ஐ.எம்.எப்.எல் வைத்துக் கொள்ளலாம். வீட்டு விருந்துகளுக்கு மது பாட்டில்கள் இருப்பு வைக்க ரூ.2000 வரி செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். வர்த்தக பயன்பாட்டிற்கு ரூ.10 ஆயிரம் வரி செலுத்தி கூடுதல் மது பாட்டில்கள் இருப்பு வைத்துக் கொள்ளலாம். கேரளாவில் மூன்று நட்சத்திர ஓட்டல்கள் உரிமம் பெற்று மது விற்கலாம்.
மத்தியப் பிரதேசத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 100 பாட்டில்கள் வரை தங்கள் வீட்டில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். ரூ .10 ஆயிரம் ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அளவில் வேறுபட்டுள்ளது.
மேற்படி விவரங்களின் அடிப்படையில் தான் இந்த விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது என்று கூறுகிறார் டாஸ்மாக் அதிகாரி. இதனடிப்படையில் நாளடைவில் நிகழ்ச்சிகளுக்கும், வர்த்தக நோக்கத்திற்கும் யார் வேண்டுமானாலும் உரிய வரியை செலுத்தி விட்டு மதுவை வாங்கிக் கொள்ளலாம் என்ற விதியை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழகத்தில் மதுவிற்கு எதிராக பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதுக்கடைகளை பெண்கள் திரண்டு அடித்து நொறுக்குகிறார்கள். மக்களே தங்கள் சொந்த அதிகாரத்தில், கடையை மூடுகிறார்கள். இந்த குடிகெடுக்கும் அரசோ எப்படியேனும் மதுவை விற்றாக வேண்டும். வருமானம் பெற்றாக வேண்டும். தமிழகத்தை போதை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று வெறிபிடித்து அலைகிறது. காடு, வயல் வரப்புகள் என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் புதிய கடைகளை திறந்து வருகிறது. புதுசுபுதுசான அறிவிப்புகள், சட்ட திருத்தங்கள் மூலம் சாராய விற்பனையை தொடர்கிறது அரசு.
மேலும் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளால் தமிழக அரசின் வருமானம் குறையவில்லை எனபதையம் அரசே தெரிவித்திருக்கிறது. சில கடைகளை மூடினால் திறந்திருக்கும் கடைகளில் விற்பனை அதிகம் நடக்கும் என்பதை அரசே ஊக்குவிக்கிறது.
தற்பொழுது டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தியுள்ளது. “மது பாட்டில் விற்பனைக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரத்து செய்து, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத் தொகை என்பது மது விற்பனையை அதிகரிக்கச் செய்யும் செயல், இது பூரண மது விலக்குக் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது” என்று டாஸ்மாக் ஊழியர்கள் அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக பலமுறை போராடியும் வெறும் ரூ.300, 400 அதிகபட்சமாக ரூ.500 என்ற விகிதத்தில் தான் உயர்த்தியுள்ளது. தற்பொழுது ரூ.2000 உயர்த்தியுள்ளதற்கு காரணம், மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஊழியர்களின் ஆதரவைந் தக்க வைத்துக்கொள்ளவே இந்த ஊதியத்தை உயர்த்தியுள்ளது எடப்பாடி அரசு. “பூரண மதுவிலக்கை” விரும்பும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியும் வழங்கக்கோரி போராடுவது மட்டுமே சாத்தியம் என்பதை ஊழியர்கள் உணர வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் சாராயக் கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை. மாதவரத்தில் கல்லூரி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக ஆகஸ்ட் 9-ம் தேதி மாணவர்கள் திரண்டு போராடியதன் விளைவாக அந்த கடையை மூடுவதாக தெரிவித்தனர்.
சாராயத்தை விற்பது தான் இந்த அரசின் கொள்கையாக உள்ளது. படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் சதியன்றி வேறல்ல. சதியை வெல்ல அனைத்து மதுக்கடைகளையும் மூடும் போராட்டம் தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
செய்தி ஆதாரம் :
- யார் எவ்வளவு மது வைத்து இருக்கலாம் வீட்டுக்கு 12 மது பாட்டில் வைத்துக்கொள்ளலாம் : தமிழக அரசு அனுமதி
- மாதவரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்: அதிகாலை ‘பார்’களுக்கு போலீஸ் உடந்தை என புகார்
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு : செப்டம்பர் மாதம் முதல் அமல்
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி