பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களில் பர்கூர் மற்றும் ஆலாம்பாடி இன மாடுகள் முக்கியமானவை. இவை கர்நாடகத்தின் கொள்ளேகல் பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளேகல் பகுதி, தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் பகுதியாக இருந்தது.
கொள்ளேகல் பகுதி மக்கள் பர்கூர் இன மாடுகளையும், மாதேஸ்வரன் மலை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆலம்பாடி இன மாடுகளையும் வளர்க்கிறார்கள். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள குருநாதசாமி தேர் திருவிழாவில் கூடும் மாட்டுச் சந்தையில் இந்த மாடுகளை விற்பனை செய்து வந்தனர் கர்நாடக விவசாயிகள்.
முதலில் மோடி அரசின் மாடு விற்க தடை உத்தரவு அந்த மக்களை கால்நடை வளர்ப்பிலிருந்தே விரட்டியடிக்கும் பொருளாதாரத் தாக்குதலாக இருந்தது.
இதனிடையே மோடி அரசின் இந்த அறிவிப்பை தடைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கடந்த 2017, மே 30 அன்று, மத்திய அரசின் உத்தரவிற்கு நான்கு வாரங்களுக்கு தடையாணை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை.
இதே போல உச்ச நீதிமன்றத்திலும், மோடி அரசின் அறிவிப்புக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடை நாடு முழுவதற்கும் செல்லுபடியாகும் என்றும் அத்தடை தொடர்ந்து வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இதற்குப் பின்னும் பர்கூர் மற்றும் ஆலாம்பாடி மாடுகளை கர்நாடக விவசாயிகள் தமிழகம் வந்து விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது திருவிழா களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் மாட்டுச் சந்தையில் தங்களது மாடுகளை விற்கலாம் என்று இருந்த மக்களுக்கு பேரிடி விழுந்துள்ளது.
காஞ்சி காமகோடி சங்கர மடமும், இழி புகழ் பீட்டா அமைப்பும் நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அவற்றை தமிழகத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் சட்ட விரோதமாக கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்தியுள்ளனர். மேலும், மாடுகளை சந்தையில் விற்காமல், தங்களிடம் விற்குமாறு நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
காஞ்சி கேடி மடத்தின் இராகவேந்திர சாமிகள் அமைப்பும், பீட்டாவும் கர்நாடக சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர்களிடம் ‘நாட்டு மாடுகளை மாநில எல்லைக்கு வெளியே கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்’ என்று மனு அளித்துள்ளனர். இவ்விரு அமைப்புகளும் நடத்தும் இந்த அப்பட்டமான சட்ட விரோத செயலுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். தமிழக மாட்டுச் சந்தைக்கு மாடுகளைக் கொண்டு செல்லக் கூடாது, மீறி கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து காமகோடி பீட்த்திற்கு கொடுத்து விடுவோம் என்று மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
மாடுகளை விற்க கர்நாடக மக்களும், அவற்றை வாங்க தமிழக மக்களும் தயாராக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமே மோடி அரசின் உத்தரவிற்கு 3 மாதங்கள் தடை விதித்துள்ள நிலையில் அரசு அதிகாரிகள் அதை பின்பற்ற வேண்டும். மேலும், மாடு கொண்டு செல்ல தடை ஏற்படுத்தும் நபர்கள், அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் சட்டத்தில் இடமுள்ளது.
ஆனால், சங்கர மடம் மற்றும் பீட்டா போன்ற பார்ப்பன அதிகார மையங்கள் இடும் உத்தரவிற்கு பணிவிடை செய்கிறார்கள் அரசு அதிகாரிகள். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் அதற்கே முரணாக நிற்கிறார்கள்.
அரசியலமைப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்று எதுவாக இருந்தாலும் அது ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும். நடைமுறையில் பார்ப்பனீயம் தான் கோலோச்சுகிறது என்பதைக் காட்டுகிறது இச்சம்பவம்.
செய்தி ஆதாரம் : நக்கீரன், ஆக 13 – 15, 2017.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி