Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? - மதுரை PRPC கருத்தரங்கம்

எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? – மதுரை PRPC கருத்தரங்கம்

-

எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? கருத்தரங்கம்

நாள் : 26.08, 2017 – சனிக்கிழமை
மாலை : 5 மணி
இடம் : இராம-சுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் எதிரில், பி.டி.ஆர். ஸ்வீட்ஸ் பின்புறம், மதுரை.

  • தலைமை : வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
    மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • வரவேற்புரை : பேராசிரியர் .சீனிவாசன்
    தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை

கருத்துரை :

  • வழக்கறிஞர் திரு. ஆனந்த முனிராஜ்
    செயலாளர், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம்,
  • மூத்த வழக்கறிஞர் திரு. எம். அஜ்மல்கான்
    மதுரை உயர்நீதிமன்றம
  • திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
    சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திராவிட முன்னேற்றக் கழகம்.

ன்பார்ந்த நண்பர்களே!

டந்த ஆகஸ்ட்-15, 70-ஆவது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் “புதிய இந்தியாவை” மோடி அறிவித்துக் கொண்டிருந்தபோது, ஜந்தர் மந்தரில் போராடிவரும் தமிழக விவசாயிகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். “தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிச்சாமி முழங்கிக்கொண்டிருந்தபோது, நெடுவாசல் மக்கள் கருப்புக் கொடியுடன் போராடிக் கொண்டிருந்தனர்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி அனைத்தும் அரசியல் சட்டத்தின் காவலர்கள் என அறியப்படுவோரால் கடந்த 70 ஆண்டுகளாக சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான வாழ்வுரிமையும், கருத்துரிமையும் பாசிச ஆட்சியாளர்களால் நசுக்கப்படுகிறது. பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத் எதிர்ப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர், தலித் மக்கள், விவசாயிகள் அச்சுறுத்திக் கொலை செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தின் காவிரி டெல்டாவோ; ஹைட்ரோகார்பன், பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் என சூறையாடப்படுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்போர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது; தேச துரோக முத்திரை குத்தப்படுகிறது.

தமது வாழ்வுரிமைக்காக மக்கள் நடத்தும் நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி மேலாண்மை வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட மிக சாதாரணமான அமைதி வழியிலான அனைத்துப் போராட்டங்களையும் வன்மையாக ஒடுக்குகிறது தமிழக அரசு.முகநூலில் எழுதுபவர்கள், கல்லூரிகளில் துண்டறிக்கை விநியோகிப்பவர்கள், கைது செய்யப்படுகிறார்கள். கதிராமங்கலத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேர், காவல்துறை மிரட்டலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள உரிமை சார்ந்த விழிப்புணர்வுப் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சிதான் மே 17 திருமுருகன், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டக் கைதுகள், கதிராமங்கலம் போராளிகளின் நீண்ட நாள் சிறைவாசம், வழக்கறிஞர் முருகன், கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி மீதான பொய் வழக்கு எல்லாம்.

வெள்ளையர் காலத்தில் அரசை எதிர்த்தவர்கள், பெங்கால் ஒழுங்குமுறைச் சட்டம் 1818, இந்திய பாதுகாப்புச் சட்டம் 1939 மற்றும் ரவுலட் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக போர்க்காலத்தில் மட்டுமே இத்தடுப்புக் காவல் சட்டங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இன்று

வெள்ளையர் ஆட்சியை விடக் கொடுமையான முறையில் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 2015 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,268 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 90% பேர் கைது தவறென விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டங்கள்.இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக எல்லாக் காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாபெரும் மனித உரிமை மீறல் குற்றமாகும். தடுப்புக் காவலில் தவறாகக் கைது செய்யப்பட்டவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதற்கான சட்டமே இந்தியாவில் இல்லை.

மாணவி வளர்மதி

சமீபத்தில் தெலுங்கானாவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விதை உற்பத்தியாளர் மீதான வழக்கை (வி.சாந்தா எதிர் தெலுங்கானா அரசு) ரத்து செய்த உச்சநீதிமன்றம் “மற்ற சட்டங்களில் வழக்குப் போட வாய்ப்புள்ள போது, குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது; குடிமகனின் வாழ்வு, சுதந்திரத்தைப் பாதிக்கும் தடுப்புக் காவல் உத்தரவானது, அரசியல் சட்ட சரத்துக்கள் 14,19,21:22-ஐ மீறக்கூடாது.என்ன நோக்கத்திற்கு சட்டம் இயற்றப்பட்டு, அதிகாரம் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்; ஒரு குடிமகனின் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது; இதில் அதிகார துஷ்பிரயோகம் கூடாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின்படி கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் மற்றும் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டி, பொது ஒழுங்கு – அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கிரிமினல்கள் மீது மட்டும்தான் குண்டர் சட்டம் போட முடியும்.

மாறாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “போராடுபவர்கள், போராட்டத்தைத் தூண்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என சட்டசபையிலேயே அறிவிக்கிறார். இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ன் படி போராடுவதும், போராட்டம் செய்யக் கோருவதும் அடிப்படை உரிமை. தமிழகத்தில் செயல்படும் அனைத்து அமைப்புகள், கட்சியினர் மீதும் போராடியதற்காக வழக்குகள் உள்ளன. அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கலாமா?

போராட்டத்திற்கு குண்டர் சட்டம் என்றால் தி.மு.க ஆட்சியின் போது அதிமுக -வினர் போராடவில்லையா? ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போராடவில்லையா? ஜெயலலிதா தண்டனைக்குள்ளான போது அதிமுகவினர் செய்த அட்டுழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்? சேகர்ரெட்டி, ராம்மோகன்ராவ், விஜயபாஸ்கர், குட்கா ஊழல் டிஜிபி ராஜேந்திரன் ஆகிய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்? கோரக்பூரில் 107 ஏழைக் குழந்தைகளைக் கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

குண்டர் சட்டத்தை, அரசியல் ரீதியாகப் போராடுபவர்களுக்கு எதிராக, மாற்றுக் கருத்துக்களை நசுக்க விரிவுபடுத்துவது, மிகவும் அபாயகரமானது. இது அரசுக் கட்டமைப்பு பாசிசமாவதை உணர்த்துகிறது.

பணமதிப்பிழப்பு, மாட்டுக்கறித்தடை, ஜிஎஸ்டி, இயற்கை வளங்கள் கொள்ளை என நாடே சூறையாடப்படுகிறது. வதை முகாம் போல மாற்றப்பட்டுள்ளது. நாஜிக் கட்சியின் ஹிட்லர் ஆட்சி போல, ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி ஆட்சி நடக்கிறது. மோடியைப் போல ஹிட்லரும் “புதிய ஜெர்மனி” தான் பேசினார். தேர்தல் மூலமே ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் ஜெர்மனியிலும் சட்டப்படிதான் யூதர்கள் கொல்லப்பட்டனர். ஹிட்லருக்கும், பாராளுமன்றம், அரசு, நீதிமன்றம், பத்திரிக்கைகள் துணை நின்றன. இன்று மோடியின் புதிய இந்தியாவின் நிலையும் இதுதான். கார்பரேட் சர்வாதிகாரம் – வருணாஸ்ரம சர்வாதிகாரம், அரசியல் – சமூக ரீதியாக நிறுவப்படத் தான் இத்தனை “மோடி மஸ்தான் வேலைகளும்” “வளர்ச்சி வித்தைகளும்”.

இந்த அநீதிகளுக்கு எதிராக தங்கள் சொந்தப் புரிதலில் இருந்து விவசாயிகள், தொழிலாளிகள், சிறு வணிகர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் போராடுகிறார்கள். ஆனால் சமூகத்தின் கருத்துக்களை வடிவமைக்கும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட நடுத்தரவர்க்கம் செய்யப்போவது என்ன? குறைந்தபட்சம் போராடும் மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டாமா?

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மிக இக்கட்டான காலகட்டம் இது. மக்கள் உரிமை, மனித உரிமை, சமத்துவ சமூகத்தை நேசிக்கும் அனைவரும் ஓரணியில் நின்று செயலாற்ற வேண்டிய தருணம் இது. ஒன்றிணைவோம், கருத்துரிமை, ஜனநாயகத்திற்காக உரக்கக் குரல் எழுப்புவோம்! சிறு பொறிதான் பெருங் காட்டுத்தீயை உருவாக்கும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்மதுரை
தொடர்புக்கு : ம. லயனல் அந்தோணிராஜ், 94434 – 71003,

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி