தமிழக அரசு கொண்டு வரும் நீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்தை அனுமதித்தால் பிற மாநிலங்களும் நீட் தேர்விற்கு விலக்குக் கோரும் அபாயம் உள்ளது என தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (22, ஆகஸ்ட் 2017) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதாவது பாஜக அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்னார் மற்றும் தமிழக பாஜக ஹெச் ராஜா, தமிழிசை அடங்கிய கும்பல் பகிரங்கமாக தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் செப்டெம்பர் 4-ம் தேதிக்குள், மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை நீட் தேர்வின் தேர்ச்சிப் பட்டியலின் அடிப்படையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் அவசரச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி நீட் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும் அம்மனுவில், இந்த அவசரச் சட்டம் நீட் தேர்வு எழுதிய சுமார் 33,000 மாணவர்களைப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளனர். தாங்கள் நீட் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், பொதுத்தேர்வில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் அதனால் தங்களுக்கு இந்த அவசரச் சட்டம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். இது போன்ற போட்டித் தேர்வுகள் எவ்வாறு உரிய பாடங்களைப் புரிந்து படிப்பதில் இருந்து மாணவர்களை விலக்கி வைத்து, வெறுமனே இத்தேர்வுகளுக்காக, இயந்திரகதியில் தயாரிக்கத் தூண்டுகிறது என்பதற்கு இம்மாணவர்களின் மனுவே சாட்சி!
அம்மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது. தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு மனித வள மேம்பாட்டுத் துறை, சட்டத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கடந்த ஆகஸ்ட்17 அன்று நடந்த விசாரணையின் போது, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் இந்திய மருத்துவக் கழகமும், தமிழக அரசும் இணைந்து, மாநில வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பாதகம் இல்லாத வகையில் தீர்வு காணுமாறு வலியுறுத்தியது.

கடந்த வாரமே மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகமும், சட்டத்துறை அமைச்சகமும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தந்திருந்த நிலையில், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும், இந்த அவசரச் சட்டம் சட்டரீதியாக செல்லத்தக்கதே எனக் கூறியிருந்தார்.
தமிழக பாஜக-வினரும், அதிமுக அடிமைகளும் இவற்றையெல்லாம் காரணமாகக் கூறி இம்முறை கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ‘விலக்கு’ கிடைக்க மத்திய அரசு ஆவண செய்யும் எனக் கூறி வந்தனர். மோடியின் நல்லாசியுடன் ஓபிஎஸ், எடப்பாடி கும்பல்களின் ஒன்றிணைவு வெற்றிகரமாக முடிந்த மறுநிமிடமே இந்த அவசரச் சட்டம், சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல என சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.
தமிழகம் கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், பிற மாநிலங்களும் இத்தகைய அவசரச் சட்டங்களை நிறைவேற்றக் கூடும்; ஆகவே இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்; என்று கூறி மோடி அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நீட் தேர்வு குறித்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றின் வரிசையில் தற்போது நீட் தேர்விலும் வழக்கம் போல, நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டது பாஜக. இரண்டு அமைச்சகங்கள் ஒப்புதல் தருவது போல் போக்குக் காட்டிவிட்டு, தமது காரியம் சாதிக்கப்பட்டவுடன் தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது மோடி கும்பல்.
இந்த மோசடிக்கு உடன்பட்டு தமிழக மக்களை பகிரங்கமாக ஏமாற்றியிருக்கிறது அதிமுக கும்பல். மணற்கொள்ள முதல் கனிமக் கொள்ளை வரை தமிழகத்தை மிச்சமிருக்கும் நான்கு வருடங்களில் எப்படி ஒற்றுமையாக சூறையாடவேண்டும் என்ற வெறியுடன் சுற்றும் அந்த கும்பலகுக்கு தமிழக மக்களின் உரிமை பறிபோனால் என்ன?
இதனைத் தொடரந்து உச்சநீதிமன்றம் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை நீக்கி வரும் செப்டம்பர் 4, 2017 -க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுக் கூட்டத்தை முடிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக மாநில வாரியத்தில் படித்த மாணவர்கள் ஒவ்வொரு தருணத்திலும் பலி வாங்கப்பட்டனர். தமிழ் மொழி வழியாகவும், ஆங்கில மொழி வழியாகவும் கேட்கப்பட்ட நீட் தகுதித் தேர்வுக்கான கேள்விகள் மற்ற மாநிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை விடக் கடினமாக இருந்ததும், கேள்விகளில் 50% -க்கும் அதிகமானவை சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டவை என்பதும் தமிழக மாணவர்களைக் குறிப்பாக, மாநிலக் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களைப் பலி வாங்கவே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இன்று (23, ஆகஸ்ட் 2017) வெளியிடப்பட்டிருக்கும் நீட் தேர்ச்சிப் பட்டியலில் முதல் 20 இடங்களில் 15 இடங்களை சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் பிடித்திருப்பது தற்செயலானது அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக அடிமைகள், தங்கள் கைகளின் பிடிக்குள் இருப்பதை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழர்களையும் ஆட்டிப்படைக்கலாம் எனக் கனவு காண்கிறது மோடி கும்பல். இதனைப் பொய்யெனக் காட்ட, பாஜக கிரிமினல் கும்பல் அடிபணியும் வரை இடைவிடாத தொடர் போராட்டத்தை, மெரினா போன்றதொரு எழுச்சியைக் கட்டியமைத்தால் தான் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க முடியும்.
தமிழகமே எதிர்த்து நில்!
செய்தி ஆதாரம் :
- NEET ordinance by Tamil Nadu not good in law, says A-G
- SC asks TN to start counselling for medical seats as per NEET
- No exemption from NEET for Tamil Nadu, Supreme Court directs government to start counselling process
_____________
தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி