Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைநமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !

நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !

-

ஆன்மாவின் அழைப்பு

ப்பொழுதெல்லாம் நெற்சோறு காண்பதரிது
மூன்று வேளையும் சோளச்சோறு தான்
இல்லையெனில்
புழுக்கள் நெளியும் ரேசன் அரிசி
பருக்கைகளே தட்டை நிரப்பியிருக்கும்.

பொக்கிஷமாய் விதை நெல் காத்து,
முதுகெலும்புகள் நொறுங்க
நிலத்தை உழுது,
பகலிரவு பாராமல் பராமரிப்பு செய்து…
நெல் மணிகளை
களத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும்,
அப்பாவிடம் அழுதுகொண்டே கேட்டதுண்டு..

‘நமக்கு மட்டும் ஏம்ப்பா
நாள் முழுக்க சோளச்சோறு’ என்று.

பதின் பருவம் வரை
இட்லி, தோசை, பனியாரத்தை எண்ணி
எப்பொழுதாவது வரும் பண்டிகைகளுக்காக
ஒவ்வொரு நாளும் காத்திருந்ததுண்டு.

இங்கே…
பகிரப்பட்டது எல்லாம் அப்பா அறியாததல்ல

இரவு முழுக்க விட்டத்தை பார்த்தவாறே இருந்துவிட்டு
அதிகாலையில் மாட்டை அவிழ்த்துக்கொண்டு
வயலில் வந்து நிற்பார்.
நெடுநாட்களுக்கு பிறகே அறிந்துகொண்டேன்
அப்பாவின் ஆன்மா விளைநிலமென்று.
அன்றிலிருந்து அவரின் அசைவுகள்
ஒவ்வொன்றும் எனக்கு கம்பீரமாய் தெரிந்தன.

அது ஒரு அறுவடைக்காலம்
நெற்கதிர்களை நேர்த்தியாக
அறுப்பதில் அப்பா லாவகமானவர்
ஏதோ ஒரு சிந்தனையில்
கதிர்களை இழுத்து அறுத்தபோது
விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார்
அன்று – அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள்
மண்ணுக்கு உரமாகிப்போனது.

அப்பாவைப் போலத்தான் மாமாவும்
மென்மையானவர்
வியர்வை சிந்த
உழைத்து திரும்பும் மாமா
முகம் கழுவ வாய்க்காலில் வந்து நிற்பார்
தெளிந்த நீரில் கெண்டை மீன்கள்
துள்ளித் தவழுவதை பார்த்த பின்
காலை வைத்து கலைக்க விரும்பாமல்
துண்டில் துடைத்தபடியே சென்றுவிடுவார்.

இன்று அதே வாய்க்காலில்
சாக்கடைக் கழிவுகளையும்,
ரசாயணக்கழிவுகளையும்
சத்தமில்லாமல் இறக்குகின்றன கார்ப்பரேட்டுகள்.

அது ஒரு கோடைக்காலம்
வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த
அக்கா வயிற்றைப் பிடித்தவாறே அமர்ந்துவிட்டாள்.
பின்புறமாக வழிந்த உதிரம் உறைந்திருந்தது.
அம்மா வருவதற்குள்
தண்ணீரோடு செந்நீரும் கலந்து நிலத்தில் பாய்ந்தது.

சிறுவனாக அதை திகைப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
வளர்ந்த பிறகு தான் அன்று
அக்கா பெரியவளாகியிருக்கிறாள் என்பது தெரிந்தது.

அம்மாவுக்கு அவள் சினேகிதி
ஆனால் உறவுமுறைப்படி எனக்கு பெரியம்மா
விளையாட்டாக பேசுவதில் வித்தகி.
ஒரு நாள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்
“மேலத்தெருக்காரர் வயலுக்கு நடவு வேலைக்கு போயிருந்தேன்
நடுவயலில் நிற்கும் போது சிறுநீர் வந்துவிட்டது’’
அதட்டிப்பேசும் அந்த ஆண்டையிடம்
எப்படி வாயைத் திறப்பது என்று
நைசாக வயலுக்குள்ளேயே இருந்துவிட்டேன்” என்றாள்.

பெரியம்மாவின் பேச்சு அம்மாவை பெருஞ்சிரிப்பில் ஆழ்த்தியது.
அதிகாரிகள் கூறியபடி
பொட்டாசியத்தையும், யூரியாவையும்
கொட்டிவிட்டு
காத்திருந்தும்
ஆற்றில் நீர் வந்தபாடில்லை.
ஆறு வறண்டு போனதற்கு பின்னாலிருந்த
அரசியல் எனக்கு அன்று புரியவில்லை

ஆனால்…

பிள்ளையைப் போல பாதுகாத்த பயிர்கள்
வாடி நிற்பதை கண்டு
பதறிய அண்ணன்
நெடுந்தூரம் சென்று
நீர் சுமந்து உயிரூட்டினார்

எனினும்
குறைமாத குழந்தையைப் போல
பயிர்கள் பாதியிலேயே சரிந்து விழுந்தன.
பயிர்களோடு தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள
பூச்சி மருந்தை அருந்திய அண்ணன்
பயிர் சரிந்த நிலத்திலேயே தானும் சரிந்து விழுந்தார்.

இப்படித்தான்…

இப்படியாகத்தான்
எங்களின்
பிறப்பு, இறப்பு
வியர்வை, இரத்தம்
கண்ணீர்
சிறுநீர் அனைத்தும்

இயற்கை உரமாய்
நிலத்தின் ஆன்மாவாய்…
காலங்காலமாக இந்த நிலத்தில் புதைந்த
வரலாறு நீண்டு கிடக்கிறது….

இன்றோ அனைத்தையும் மறந்த
ஆண்ட்ராய்ட் மனிதனாக,
பெருநகரின் கான்கிரீட் காடுகளில்,
அடையாளம் இழந்த என்னை,
உழுத நிலத்திற்கே உரமாகிப்போன
எனது மூத்தகுடிகளின் ஆன்மா
நெடுவாசலுக்கு அழைக்கிறது

பார்..
உனது நிலத்தைப் பார்
கார்ப்பரேட்டுகளுக்காக
கதிராமங்கலத்திற்கு கருமாதி நடத்தும்
அநீதியைப் பார் என்கிற ஓலம்
எனது செவிப்பறைகளை பிளக்கிறது

நெஞ்சை அறுக்கும் அவர்களின்
ஓலத்தையும் ஒப்பாரியையும் கேட்டவாறே
அறுசுவை உணவை உண்டு
குளிரூட்டப்பட்ட அறையில் உன்னால் துயில முடியுமா?

என் மனசாட்சி
என்னை உலுக்குகிறது.
அனைத்தையும்
வேடிக்கை பார்த்தவாறு வாழவிருக்கும் நீயா
ஆதிக்குடிகளின் அடுத்த தலைமுறை?

கேள்வி புரிந்தால் மவுனம் கலைத்து
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான களப்போரில்
நம் கால்கள் நெடுவாசல் நோக்கியும்
கதிராமங்கலம் நோக்கியும் நகரட்டும்..

– முகிலன்
_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி