Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமெழுகுவர்த்தி ஏற்றினால் குண்டர் சட்டமா ? மதுரை கருத்தரங்க செய்தி

மெழுகுவர்த்தி ஏற்றினால் குண்டர் சட்டமா ? மதுரை கருத்தரங்க செய்தி

-

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பாக கடந்த 26.08.2017 அன்று எங்கே “அரசியல் சட்டத்தின் ஆட்சி?” கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை நிகழ்த்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் “தமிழகத்தில் மக்களுக்காகப் போராடுவோர் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் இன்று அரியானா, டெல்லி,ராஜஸ்தான், பஞ்சாபில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. சுமார் 35-40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடக்கும் என முன்பே தெரிந்தும், பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை? இதேபோல் விவசாயிகள் லட்சம் பேர் டெல்லியில் நுழைந்தால் விட்டுவிடுவார்களா?

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கச் சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்தும் நிறுவனங்கள் முழுக்க அரசியல் சட்டத்திற்கே விரோதமாக மாறிவிட்டன. காவி பாசிஸ்டுகள் ஆட்சியில், அரசமைப்பு நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும். இதுதான் பிரச்சனை!

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை எனத் தீர்ப்பு வந்துள்ளது? இது எப்படி அமலாகும்? ஏற்கனவே கருத்துரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காகத்தான் இன்று வளர்மதியும், திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். துண்டறிக்கை கொடுப்பதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் குண்டர் சட்டத்தில் வருமா? போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்புக் காவல் சட்டம், இன்று போராடுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

இதை முதல்வர் சட்டசபையிலேயே அறிவிக்கிறார்! கூவத்தூரிலும், புதுச்சேரியிலும்தான் அரசியல் சட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கேவலத்திற்கு சட்ட நிபுணர்கள் வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசமைப்பு நிறுவனங்கள் தோற்றுவிட்டதற்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு ஓர் உதாரணம். உலகமே பார்க்க குற்றம் இழைத்த அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோசி மீது இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குற்றம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது!

ஜெயலலிதாவையும் செத்த பின்தான் தண்டித்தார்கள்! காவிரி வழக்கிலும் இதுதான் நிலை! வாழ்வுரிமை அடிப்படை உரிமைதான்! 3,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். அவர்களின் வாழ்வுரிமையை உச்சநீதிமன்றம் கேட்குமா?

அரசமைப்பின் பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாகம், நீதித்துறை என அனைத்து நிறுவனங்களின் தன்மையும் மாறிவிட்டன. இதுதான் ஜெர்மனியில் நடந்தது. ஹிட்லரும் மோடியைப் போல புதிய ஜெர்மனி பேசினார். அவருக்கு அனைத்து அரசமைப்பு நிறுவனங்களும் ஆதரவளித்தன. சட்டப்படிதான் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் இன்று இதுதான் நடக்கிறது. இதற்கெதிராக ஓர் ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டியுள்ளது. இது எனது கருத்து மட்டுமல்ல!  70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றை ஆய்வுசெய்து “பிரண்ட் லைன்” பத்திரிக்கை சமீபத்தில் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருப்பதும் “ஜனநாயகப் புரட்சிதான்”. எனவே அனைவரும் ஒன்றிணைவோம்! போராடுவோம்!” என்றார்.

அடுத்துப் பேசிய திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலர் திரு ஆனந்த முனிராஜ் அவர்கள் “நீட் தேர்விலே சட்டத்தின் ஆட்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது. மனுதர்ம ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கிறது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடி வந்தார்கள்! இன்று போராடவிடாமல் நீதித்துறையால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள் முன்பு போல் இருந்திருந்தால் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி நடந்திருக்கும். அது நாடு முழுவதும் பரவியிருக்கும். இதைத் தெரிந்துதான் ஒடுக்கிவிட்டார்கள். நீதிமன்றங்கள் சாதி, மத அடிப்படையில் தீர்ப்பளிக்கின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்வு என காவிகள் அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகும்? குக்கிராமத்து மாணவனும்,டெல்லியில் சி.பி.எஸ்.சி. -யில் படித்த மாணவனும் ஒன்றா? நீதிமன்றங்கள் ஒழுங்காக இருந்தால் பாதிப் பிரச்சனைகள் சரியாகும். ஆனால் இங்கு  மாற்றப்பட, எதிர்க்கப்பட வேண்டியதே நீதித்துறைதான்! கேரளாவில் ஒரு முசுலீம் பையனும், இந்துப் பெண்ணும் திருமணம் செய்த வழக்கில் “ லவ் ஜிகாத்” என்று சொல்லி தேசியப் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கிறது உச்சநீதிமன்றம் . திருமணம் அவரவர் சொந்த உரிமை. இதில் விசாரணைக்கு என்ன உள்ளது? இது இந்துத்துவத் தீர்ப்புதான். இதைத்தான் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “கோவாவில் தேர்வு செய்யப்படுவோர் ஒரு கட்சியினர், ஆட்சியில் அமர்வோர் வேறு கட்சியினர், இது மணிப்பூர், பீகார் எனத் தொடர்கிறது. தமிழகத்திலோ சொல்லவே தேவையில்லை. இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது.

நேரு அவர்கள் அன்றே  சொன்னார் “கம்யூனிஸ்டுகளால் இந்திய அரசமைப்பிற்கு ஆபத்தில்லை! ஆனால் வலதுசாரி மதவாதிகளால் ஆபத்துவரும்” என்று. அதுதான் இன்று நடக்கிறது. பசுப்பாதுகாப்பு என்று சொல்லி நாடு முழுவதும் பலர் அடித்தே கொல்லப்படுகின்றனர். ஜீனத் என்ற சிறுவன் டெல்லியில் ஓடும் ரயிலில் அடித்தே கொல்லப்பட்டான். யாரும் தடுக்க முன்வரவில்லை. காசுமீரில் ராணுவ ஜீப்பில் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு ஊர், ஊராக இழுத்துச் செல்லப்படுகிறார். எத்தனை பெரிய மனித உரிமை மீறல் இது? இதை விடக் கொடுமை, இராணுவத்தை அவமதிக்கக் கூடாது என்று பலர் ஆதரிப்பதுதான்! அரசு மக்களுக்கா? இராணுவத்திற்கா?

இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கருவை பாராளுமன்றம், மாற்ற முடியாது என 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி வழக்கில் சொல்லியுள்ளது. இதன்படி மதச்சார்பற்ற அரசு, சமத்துவம் எல்லாம் அடிப்படைகள். ஆனால் நீட் தேர்வில் இது மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு “மாநில அரசுகள் தேவைப்பட்டால் தனியாக  தேர்வு, அட்மிசன் முறை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றக் குழுவும் இதையே தெரிவித்துள்ளது.தற்போது இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை 16 நீதிபதிகள் உட்கார்ந்து மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தின் அடிப்படை இல்லை என முடிவெடுக்கலாம்! இன்றைய நாட்டின் நிலை இப்படித்தான் உள்ளது. இதைத் தடுக்க தனித்தனியாய் புலம்பி பயனில்லை. எல்லோரும் போராட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு மத்திய அரசு அடிபணிந்தது. ஆனால் அதையும் கடைசியில் எல்லோரும் கலைந்த பின்பு, தாக்குதல் நடத்தி இழிவுபடுத்தியது அரசு.

தேசிய நீதிபதிகள் ஆணைய வழக்கில் நீதிபதிகள் நியமனம் உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், மத்திய அரசு செய்த முயற்சியை தலைமை நீதிபதி திரு.ஹெகர் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதன்படி தேசப் பாதுகாப்பு எனச் சொல்லி, தான் விரும்பாதவர்களை மத்திய அரசு தடுக்கலாம். மாட்டுக் கறிப் பிரச்சனையிலும் இதுதான் நிலை. நான் ஆஜரான வழக்கில் மாட்டுக்கறி தடை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. மறுநாளே கேரள உயர்நீதிமன்றம் “மாட்டுக்கறிக்கு எங்கே தடை உள்ளது? எனக் கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது”.ஆனால் விதிகளில் வெட்டுவதற்காக மாட்டை விற்கவோ, வாங்கவோ கூடாது என உள்ளது. இந்தியாவின் முகம் பன்முகத்தன்மைதான். இதை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.”

இறுதியாக உரை நிகழ்த்திய  சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் “ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச சட்டத்தின் ஆட்சியும் மோடி வந்த பின்பு போய்விட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாய் சட்டமே இல்லை.தேர்தல் ஆணையம்,சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. குட்கா ஊழலில் உள்ளவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தலைமைச் செயலர் வருமான வரித்துறை கடிதமே வரவில்லை என நீதிமன்றத்தில் பொய்சொல்கிறார்.

வினவு என்ற இணையதளத்தில் குண்டாஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அருமையான வெளிப்பாடு. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைமையில் உள்ள எனக்கு இந்தத் திறமை இல்லையே எனப் பொறாமையாய் உள்ளது. அப்பாடலில் சொன்னது போல “இந்த அக்கூஸ்டு எல்லாம் சேர்ந்து மாணவர்கள் மீது குண்டாஸ்” போடுகிறது. அனைத்து நிறுவனங்களும் சேதமாகி விட்டன. நீதிமன்றங்களில் 5% தான் எப்போதாவது அந்தரங்க உரிமை போன்ற சில தீர்ப்புகள் கிடைக்கின்றன.பத்திக்கைகள் உள்ளிட்ட ஊடகங்கள் விலைபோய்விட்டன.

ஆனால் மாற்று ஊடகமாக சமூக வலைத்தளம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 50% -க்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இதில் 90% பேர் இளைஞர்கள். இவர்கள் மூலம் நாம் கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியும். மாற்றத்தை உருவாக்க முடியும்”என்று பேசினார்.

இறுதியாக தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டு கருத்தரங்கம் நிறைவுற்றது. வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் :

  • இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை நசுக்கி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி, மே 17  திருமுருகனை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.
  • இந்திய அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணநாயகம் மூலம் தேர்தலை நிறுத்திய கரூர் அன்புநாதன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் மற்றும் மணல் மாபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை மத்திய, மாநில அரசுகள், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • அடிப்படை உரிமையான தொழில் உரிமையைப் பறித்து கடந்த சுமார் 200 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  • நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராடும் உரிமையை அரசு பறிக்கக்கூடாது. மக்களின் கோரிக்கையை ஏற்பதுடன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
  • நீட் தேர்வு என்பது உலக வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மனுநீதியைத் திணிக்கும் செயல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்விக் கொள்கை என்பது சர்வாதிகாரம். நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தடுப்புக் காவல் சட்டத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்ட சரத்து 22(4)(5)(6)(7) நீக்கப்பட வேண்டும். கருத்துரிமை முழுமுற்றான உரிமையாக ஏற்கப்பட வேண்டும். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

மக்கள் கருத்துரிமையின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி