privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !

பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !

-

ந்தக் காணொளித் துண்டின் காட்சியைக் கண்டவர்கள் தங்கள் வாழ்நாளில் அதை மறந்து விட முடியாது. வயதானவர் ஒருவரையும், அவரது மகனையும் சூழ்ந்து கொள்ளும் கும்பல் ஒன்று அவர்களைக் கொடூரமாக தாக்குகிறது. ஹாக்கி மட்டைகளாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டு சாலையோரம் ஓய்ந்து விழுகிறார் அந்த முதியவர். தாக்கிய கூட்டத்தில் இருந்து ஒரு குரல் “பாவம் ஓடிப் போய் விடு” என கூச்சலிடுகிறது. அந்த முதியவர் தள்ளாடியவாறே எழுந்து சில அடிகள் முன் வைக்கிறார்… உடனே அவரை “ஹோ”வென்ற கூச்சலோடு சூழ்ந்து கொள்ளும் கும்பல் அடித்து வீழ்த்துகிறது. பின்னர் மருத்துவமனையில் நொறுங்கிப் போன நெஞ்செலும்போடு அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் இறந்து போகிறார். அவர் பெஹ்லு கான்.

பஜ்ரங் தள் குண்டர்கள் நடத்திய கொடூர தாக்குதலால் இறந்து போன பெஹ்லு கான்

பெஹ்லு கான் அரியானா மாநிலம் ஜெய்சிங்பூரைச் சேர்ந்தவர். பால் வியாபாரி. பால் வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் பிழைப்புக்காக கூடவே  காய்கறி வியாபாரமும் குத்தகை விவசாயமும் செய்து வந்தவர். கடந்த 2017, ஏப்ரல் 1 -ம் தேதியன்று புதிதாகப் பசுமாடு வாங்க ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தைக்கு தன் இரண்டு மகன்களுடன் சென்றிருக்கிறார்.

கன்றுகளுடன் இரண்டு பசுமாடுகளை வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, டில்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் என்ற இடத்துக்கு அருகே பஜ்ரங்தள் கும்பலைச் சேர்ந்த பத்து பேர் அவரை வழி மறித்து தாக்கினர். அந்த தாக்குதல் அருகே இருந்த சி.சி.டி.வி கேமராவில் மட்டுமின்றி அருகில் இருந்தவர்களின் செல்பேசிகளிலும் பதிவாகி இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி காண்போரை பதற வைத்தது.

இந்துத்துவ காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்ட பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதே தன்னைத் தாக்கியவர்களைக் குறித்து போலீசாரிடம் மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட காவல்துறை தாக்கியவர்களின் மேல் வழக்குத் தொடராமல் முதலில் பெஹ்லு கான் மற்றும் அவரது மகனின் மேல் “மாடு கடத்தல் வழக்கு” ஒன்றைத் தொடுத்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி பெஹ்லு கான் இறந்த பின்னர், வேறு வழியின்றி ஓம் யாதவ், ஹுக்கும் சந்த் யாதவ், ஜக்மல் யாதவ், சுதிர் யாதவ், நவீன் ஷர்மா மற்றும் ராகுல் சைனி என ஆறு பேர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த ராஜஸ்தான் மாநில போலீசார், வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்ட அறுவரும் சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் இல்லை என அவர்களது செல்போன்களின் சிக்னல் காட்டியதாக குறிப்பிட்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். இதில் குரூர நகைச்சுவை என்னவென்றால், குற்றம் இழைத்தவர்களில் ஒருவரைக் கூட கைது செய்து விசாரிக்கவே இல்லை. “தேடப்படுபவர்களாக” இவர்களை அறிவித்த போலீசார், தாம் நடத்திய விசாரணையின் படி “அறிவியல் பூர்வமான” சாட்சியங்கள் கொலையாளிகளுக்கு சாதகமாக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் ஆறு பேர் தவிற வேறு ஒன்பது பேரையும் தனது மரண வாக்குமூலத்தில் பெஹ்லு கான் குறிப்பிட்டிருந்தார். இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே பிணையில் வெளி வந்து வந்துவிட்டனர் – இருவர் கைது செய்யப்படவில்லை.

பெஹ்லு கானின் மனைவி (இடது)

இந்த வழக்கு இவ்வாறாக ஊற்றி மூடப்படும் என்பதை ஏற்கனவே அம்மாநில அமைச்சர்களின் பேச்சுக்களே உணர்த்தியுள்ளன. மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா, மாடுகளைக் கடத்திச் செல்கிறவர்களை மக்களே தலையிட்டு தடுப்பதில் தவறில்லை எனவும், பெஹ்லு கான் மாடுகளைக் கடத்துவதையே தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் பேசியுள்ளார். பா.ஜ.க -வின் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பெஹ்லு கான் கொலைச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தற்போது ராஜஸ்தான் அரசு வழக்கை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்ய முயற்சித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக பெஹ்லு கானின் மகன் இர்ஷாத் கான் அறிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது, “நீதிக்கான போராட்டத்தில் எங்களது சேமிப்பு அனைத்தும் கரைந்து விட்டது. நீதி கிடைப்பது இருக்கட்டும், அரசு அறிவித்த நட்ட ஈட்டுத் தொகையே இன்னும் கிடைக்கவில்லை. எங்களது வாழ்க்கையே போராட்டமாகி விட்டது. ஒரு வாரத்திற்கு முன் எனது தாயார் பக்கவாதத்தில் விழுந்து விட்டார். சீக்கிரம் அவரும் எங்களை விட்டுப் போய் விடுவார்..” எனக் குமுறுகிறார்.

சட்டம், நீதிமுறை, நியாயம் என அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாரதிய ஜனதா, தற்போது இவற்றைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஒரு மனிதன் பட்டப்பகலில் எந்த குற்றமும் இழைக்காத நிலையில் ஒரு கும்பலால் அடித்தே கொல்லப்படுகிறான்; அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன; இறந்த மனிதனின் மரண வாக்குமூலமும் உள்ளது – இத்தனைக்கும் பிறகு குற்றவாளிகளை போலீசாரே வழக்கில் இருந்து விடுவிக்கின்றனர்.

இவையெல்லாம் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கின்றன. பெஹ்லு கான் தாக்கப்பட்ட அந்த காணொளிக் காட்சி உண்டாக்கிய உள்ளக் கொதிப்பை விட அந்தக் கொலையாளிகள் எந்தச் சிராய்ப்பும் இன்றி விடுவிக்கப்படுவது அதிகமான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஊடகங்கள் உள்ளிட்டு ஒரு மிகப் பெரிய பிரச்சார இயந்திரத்தைக் கையில் வைத்துள்ள இந்துத்துவ கும்பல் உண்மைகளை பாழுங்கிணற்றில் போட்டு நிரவுகின்றது.

இனிமேலும் நியாயம் கிடைப்பதற்காக வழமையான மார்க்கங்களை எதிர்பார்த்து நிற்பதில் அர்த்தமில்லை; மக்களே நேரடியாக களத்தில் இறங்கி தங்களுக்கான நீதியை இந்துத்துவ பரிவாரங்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதையே பெஹ்லு கானின் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பது உணர்த்துகின்றது.

செய்தி ஆதாரம் :

_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்ப்பன மதவெறி பாசிசத்துகு எதிராக குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி