Friday, May 2, 2025
முகப்புசெய்திவிவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !

விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !

-

த்திரபிரதேச சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியால் நேரடியாகவே வழங்கப்பட்ட வாக்குறுதியான விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மிகக் கீழ்த்தரமான ஏமாற்று வேலை என்பதை ஜூலை, 2017 வினவு கட்டுரை விளக்கியிருந்தது. பாஜக-வின் ஏமாற்று வேலையோடு ஏற்கனவே விவசாயத்தின் அழிவால் வாழ்வைத் தொலைத்து பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளை வைத்து பாரதிய ஜனதா நடத்திய கொடூர நகைச்சுவை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 13 -ம் தேதியன்று (செப் 2017) உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஏழை விவசாயிகள் சிலரை அழைத்து கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். முதல் கட்டமாக சுமார் 11.93 லட்சம் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது கடன்களை தள்ளுபடி செய்ய 7,371 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. உ.பி மாநில விவசாயிகளின் மொத்த கடன்களையும் தள்ளுபடி செய்ய 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடன் தள்ளுபடி என சில்லறைக்காசுகளை வீசி விவசாயிகளை அவமானப்படுத்தும் பாசிஸ்ட் யோகி ஆதித்யநாத்

முதலாவதாக, பாரதிய ஜனதா பீற்றிக் கொள்ளும் கடன் தள்ளுபடியானது 2016 மார்ச் 31 -ம் தேதிக்கு முன்பு பெறப்பட்ட கடன்களுக்கே பொருந்தும் என நிர்ணயித்துள்ளனர். உ.பி மாநில விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வாங்கிய கடன்களை அந்தப் பருவத்தின் அறுவடையில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டோ – அப்படி லாபம் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஆடு மாடுகள் அல்லது டிராக்டர் போன்ற உழுபடைக் கருவிகளை விற்றோ அடைத்து விடுவர். சிலர் முழுமையாக இல்லாவிட்டாலும் தங்களது சொத்துக்களை விற்று அதில் ஒரு பகுதியாவது அடைத்து விட்டுத் தான் அடுத்த பருவத்துக்கு கடன் வாங்குவார்கள். உண்மையில் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என பாரதிய ஜனதா விரும்பியிருந்தால், தற்போது உள்ள கடன்களைத் தான் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, தற்போது கடன் தள்ளுபடிக்கென தெரிவு செய்யப்பட்டிருக்கும் 11.93 லட்சம் விவசாயிகளில் சுமார் 34,262 பேருக்கு 1 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரைக்கான “தள்ளுபடிச்” சான்றிதழ் கிடைத்துள்ளது. இவர்களில் சுமார் 4,814 பேருக்கு 1 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கான “தள்ளுபடிச்” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 11.27 லட்சம் பேருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேலான கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது.

பிஜ்நோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியா தேவியின் கடன் நிலுவைத் தொகையில் வெறும் 9 பைசா மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஈதாவா மாவட்டம் அஹேரிபூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அவரது கடன் நிலுவையான 28,000 ரூபாயின் மேல் வெறும் ஒரு ரூபாய் எண்பது பைசா மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 2 லட்சம் கடன் பாக்கி வைத்திருக்கும் இன்னொரு விவசாயிக்கு வெறும் ஒரு ரூபாய் ஐம்பது பைசா தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாயத் துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி குறிப்பிடும் போது, பொதுவாக கடனுக்கான வங்கிக் கணக்கைத் துவக்க தமது அடையாள ஆவணங்கள் சமர்ப்பிப்பது உள்ளிட்ட சிக்கலான நிர்வாக நடைமுறைகள் இருப்பதால், பல விவசாயிகள் தங்களது கடன் வங்கிக் கணக்கை முற்றிலும் மூடிவிடாமல் அதில் சொற்ப தொகையை பாக்கியாக வைத்திருப்பார்கள் என்கிறார். அதிகளவிலான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தோம் என பீற்றிக் கொள்வதற்காக இப்படியான விவசாயிகளையும் பயனாளிகள் பட்டியலில் சேர்த்ததே குழப்பத்திற்கு காரணம் என குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றில் ஓரளவிற்கு உண்மை இருந்தாலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கடன் பாக்கி வைத்திருக்கும் பல விவசாயிகளுக்கு பத்தாயிரமோ அதற்கும் குறைவான தொகையோ தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி செய்வதற்கு என்ன மாதிரியான அளவுகோல் பின்பற்றப்பட்டதென புரிந்து கொள்ள முடியாத படி ஒவ்வொரு பல விவசாயிகளின் நிலுவைத் தொகைக்கும் வழங்கப்பட வேண்டிய கடன் தள்ளுபடித் தொகையை நிர்ணயிக்க வெவ்வேறு முறைகள் பின்பற்றபட்டிருப்பது தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் ஏழை மக்களை எந்தளவுக்கு கீழ்த்தரமாக நினைக்கிறார்கள் என்பதற்கு தில்லியில் மலம் தின்னும் போராட்டம் வரை நடத்திய தமிழக விவசாயிகள் மட்டுமல்ல – உத்திர பிரதேசத்தில் ஒன்பது பைசா கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளும் இரத்த சாட்சிகளாக நம் கண் முன் இருக்கின்றனர்.

இந்திய வங்கித்துறையின் கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் வாராக் கடன் என்கிற கத்தி விவசாயிகளுடையதா? இல்லை. அம்பானி அதானி உள்ளிட்ட பெரும் தரகு முதலாளிகளே லட்சக்கணக்கான கோடி கடன்களைத் திரும்பக் கட்டாமல் வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்துகின்றனர். இதுவரை ஒரே ஒரு முதலாளி கூட வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதில்லை – ஆனால், மான அவமானத்திற்கு அஞ்சிய விவசாயிகளோ கடனைக் கட்ட முடியாமல் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போயுள்ளனர்.

எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும். ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு முறையான விலையைத் தராமல் ஏமாற்றுவதோடு, உழுபடைக் கருவிகள் வாங்குவதற்கான கடனுக்கு அதிக வட்டி நிர்ணயிப்பது, விதை உரம் போன்றவைகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாமல் விடுவது, நீர் மேலாண்மைத் திட்டங்களைப் புறக்கணிப்பது என ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கான முதலீட்டையே தொடர்ந்து வரும் மத்திய அரசாங்கங்கள் குறைத்து வந்துள்ளது.

காங்கிரசு உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்கள் விவசாயிகளையும் ஏழைகளையும் உதாசீனப்படுத்தின என்றால், பாசிச பாரதிய ஜனதாவோ அவர்களை மிக கீழ்த்தரமாக இழிவு படுத்துகின்றது என்பதற்கு ஆதித்யநாத் தனது மாநில விவசாயிகளை நோக்கி விட்டெறிந்த சில்லறைக்காசுகளே சாட்சி.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க