Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கஉயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் - மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !

உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !

-

  • பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை : தோட்டக்களால் சிந்தனையை அழிக்க முடியாது ! – கண்டன அரங்கக் கூட்டம்
  • ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நீட் ! – கலந்துரையாடல்

ன்னடப் பத்திரிக்கையாளர்  கௌரி லங்கேஷ்   படுகொலையைக் கண்டித்தும்  ஏழை மக்களின் கல்வி  உரிமையை வேட்டையாடும்  நீட்  தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் பேராசிரியர் சீனிவாசன்  தலைமைதாங்கினார். அவர் தனது தலைமையுரையில் “கர்நாடக மாநிலத்தின்  சமூகப் போராளியும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல. சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரும்  இதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்று வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. மத்திய, மாநில  அரசின் போக்குகள்  மக்கள் விரோதப் போக்காக இருக்கிறது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டாஸ் சட்டத்தில் சிறையில் போடப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி மீது வழக்கு போடப்படுகிறது. டெல்லியில் போராடும் விவசாயிக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஆறு வகையான கல்வி முறைகள் உள்ளன. இவற்றில் சமத்துவம் இருக்கிறதா?

சமத்துவம் இல்லாத சூழ்நிலையில் பொதுவான தேர்வு சாத்தியமா என்ற கேள்வியோடு நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராடினால்  கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்படுகின்றனர். மக்களது பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லாத இந்த அரசு தேவையா? நாம் ஒன்றுபட்டுப் போராடவில்லை என்றால் மிகப்பெரிய தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்  படுகொலை: சிந்தனையைத் தோட்டாக்களால் அழிக்க முடியாது” என்ற தலைப்பில் உரையாற்றிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயlலாளர் பேரா. இரா.முரளி தனது உரையில்:

“கௌரி லங்கேஷ் தனது லங்கேஷ் பத்திரிகையில் மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து எழுதினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமாரையும் குஜராத்தில் (உனா) தலித் மக்களின் எழுச்சிக்குத் தலைமை ஏற்ற ஜிக்னேஷ் மேவானியையும் தனது வளர்ப்பு மகன்களாக அறிவித்தார். இந்துத்துவவாதிகளைக் கடுமையாகச் சாடியதோடு களப் போராளியாகவும் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாதிகளால் தொடர்ந்து கொலை மிரட்டல்களுக்கு உள்ளானார். 10 அடி தூரத்தில் 7 தோட்டாக்களால் சுடப்பட்டிருக்கிறார். கூலிப்படையைப்  பயன்படுத்திச் சுட்டுக் கொன்றுள்ளனர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி  வரிசையில் கௌரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கன்னையா குமார் பெங்களூர் வந்து கௌரி லங்கேஷை சந்தித்தபோது; கிரிஷ்கர்னாடுக்கு அச்சுறுத்தல் வந்ததைப் போலவே தனக்கும் இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் பெங்களூரில் “பண்பாட்டுக் காவலர்கள்” வந்துள்ளதின் விளைவாகப் பலருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தானும் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். சங்கபரிவாரங்களின் கூட்டத்திலே கௌரியைக் கேவலமாகத் திட்டியதோடு தீர்த்துக்கட்டி விடுவதாகவும் முழங்கி உள்ளனர். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் கொலை செய்கின்றனர்.

இந்துத்துவாதிகள் தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைத் திசைதிருப்பும் வகையில்  நக்சலைட் தீவிரவாதிகள்  தான் கொலை செய்திருப்பார்கள் என்று வதந்திகள்  பரப்பப்படுகின்றன. குறிப்பாக மாவோயிஸ்டுகள் சிலரை கௌரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பச் செய்தது அவர்களுக்குப் பிடிக்காமல் அவரைப் பழிவாங்கும் நோக்கத்துடன்  கொலை செய்துள்ளனர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. கவுரிக்கு கருத்துரீதியான முரண்பாடு இந்து மதவெறியர்களோடுதான்.

2014 – 2015 -ம் ஆண்டின் தேசியக்குற்றப் பதிவின் புள்ளிவிவரப்படி பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 142 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 24 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் ம.பி., உ.பி., பீகார் மாநிலங்களே அதிகம். ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் கூட அடிப்படைவாதிகளின் வசமாக இருக்கிறது.

அரசுக்கு எதிராகச் சின்ன அசைவு ஏற்பட்டாலும் கைது, சிறை. இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது, அரசுக்கு ஆதரவாகத்  தீர்ப்புச் சொன்னால் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைக்கின்றனர். போராளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்; மதுரையில் நீட்டுக்கு எதிராகப் போராடிய 85 மாணவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையிலடைத்து கடுமையான நிபந்தனைகளோடு பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம். வந்தே மாதரம் பெங்காலியா? சமஸ்கிருதமா? என்று வழக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடவேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்படுகிறது.

நமது போராட்டங்கள் நீதிமன்றங்களை நோக்கித் திரும்ப வேண்டியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் தமிழகத்துக்கும் வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைய  வேண்டும். பல கொள்கைகள் இருந்தாலும் ஒரு புள்ளியில் சேர வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று தனது கண்டன உரையில் வலியுறுத்தினார்.

அதன்பின் நீட் தேர்வு பற்றிய விவாதம் நடைபெற்றது. ம.உ.பா. மையத்தின் கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

மருத்துவக் கல்வியில் நிலவிவரும் தரக்குறைவு மற்றும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை களைவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுவதாக மோடி அரசு சொல்லியது. ஆனால் நீட் தேர்வு நடைபெற்ற விதம் பணக்காரர்களுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும் மட்டுமே ஆதரவாக நடத்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளின் ஆணைப்படி அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் தான் தேர்வை நடத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள மாணவர்களுக்கெல்லாம் இங்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகள் வர்த்தகமாகியுள்ளது. பணம் மட்டுமே ஒரே தரம் – தகுதி. பணம் இல்லாதவர்களுக்கு எதற்குக் கல்வி! அவர்களுக்குக் குலக்கல்விதான் என்பதை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என்று தனது தொடக்க உரையில் கூறினார்.

இளம் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பேரா.ரபீக்ராஜா பேசும் போது “நீட்டை எதிர்ப்பது மட்டும்தான் நமது திட்டமா? பா.ஜ.க.கொண்டு வந்துள்ள எந்தத் திட்டமும் நமக்கு வேண்டாம். அனைத்தையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறினார்.

நாணல் நண்பர்கள் அமைப்பை சார்ந்த திரு சரவணக்குமார் : “கவுரி லங்கேஷ் படுகொலை கருத்துரிமை மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்! அதை நாம் எதிர்த்துப்  போராட  வேண்டும்.  முத்துக்குமார், செங்கொடி, காவிரி விக்னேஷ், அனிதா ஆகியோருடைய உயிர்த் தியாகத்தை நாம் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.”

வழக்கறிஞர் பழனியாண்டி : “தமிழ் நாடு அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு ஏன் நிறுத்தப்பட்டது? மதிப்பெண் அடிபடையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது அரசு திட்டமிட்டே கல்வியில் தனியார் ஆதிக்கத்தைக் கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளிகள் தரம் தாழ்த்தப்பட்டுவிட்டன. கல்வி தனியார் மயத்துக்கும், கொள்ளைக்கும் நீதிமன்றங்கள் துணை போகின்றன.”

சம நீதி வழக்குரைஞர்கள் சங்க வழக்கறிஞர் ராஜேந்திரன் : “நீதிமன்றங்கள் மூலமாக அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜாக்டோ – ஜியோ சட்டப்படியான போராட்டத்தை நீதிமன்றம் மிரட்டிப் பணியவைக்கிறது. அனிதாவின் மரணத்திற்கும் நீதிமன்றங்கள்தான் முக்கிய காரணம். தரத்தைப் பற்றிப் பேசும்போது பாடத் திட்டத்திற்குள் போய் விவாதிக்க வேண்டும். நீட் தேர்வு முறையால் தமிழ் நாட்டில் சமூக நீதி மறுக்கப்பட்டுவிட்டது.”

வங்கி அதிகாரி, மற்றும் சமூக சேவகர் திரு ராகவன்: “கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டத்தை நீதிமன்றங்கள் கடைபிடிக்கவில்லை. சிறந்த பள்ளிகள் மக்களால் உருவாக்கப்பட்டு பேணி வளர்க்கப்படுகின்றன. நீட் தேர்வு இல்லாமலே கல்வித் தரத்தை உயர்த்தலாம்.”

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திரு அய்யனார் : “மோடி தான் அனைத்துக்கும் காரணம். தமிழ் நாட்டின் மீது அடுக்கு அடுக்காக ஏவிவிடும் நாசகரத் திட்டங்களால் உழைக்கும் மக்களை பழிவாங்கி கொண்டிருக்கிறார். மோடியின் பாசிச அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.”

மத்திய அரசு ஊழியர் திரு குணசீலன் : “தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தற்போது அதிக அளவில் வட நாட்டவர்கள்  நுழைக்கப்படுகின்றனர். இந்தி மொழியும் திணிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அப்படித்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் கும்பல் தமிழகத்தின் நலன்களை மோடியிடம் அடகு வைத்து விட்டனர். தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.”

வழக்கறிஞர் நடராஜன் : “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றது போல நீட் பிரச்சினையிலும் மக்களை அணி திரட்டிப் போராடவேண்டும்.”

திரு சங்கையா : “ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே பண்பாடு, ஒரே வரி, இந்து மதம், நீட் தேர்வு, பண மதிப்பு நீக்கம், நவோதயா பள்ளி என்று ஒவ்வொன்றாகத் திணிக்கப்படுகிறது.பா.ஜ.க. சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. காசு இல்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதே புதிய மனு நீதி, அதற்குத்தான் நீட் தேர்வு.”

பேராசிரியர் முரளி : “இந்து அடிப்படைவாதிகளின் ஆட்கள் முக்கியமான அதிகார மையங்களில் நுழைக்கப்பட்டுள்ளனர். நீதித் துறையிலும் அவர்களே கோலோச்சுகின்றனர். அரசியல் சட்டத்தை ஓரங்கட்டிவிட்டு தங்களது திட்டத்தை அமல்படுத்துகின்றனர். அனிதாவின் கல்வி உரிமையை மறுத்து அவரை சாவுக்குத் தள்ளியதில் இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.”

மாணவர் திரு ஆனந்த் : “கல்வி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அது வியாபாரமயமானது தான் நீட் தேர்வு வந்ததற்கான முதன்மையான காரணமாகும். தற்போது உலகமயத் திட்டத்தின் கீழ் பன்னாட்டு மாணவர்களும் இந்திய மருத்துவத் துறையைப் பங்போட்டுக்கொள்ள நீட் வழி விட்டுள்ளது.”

எஸ்.யு.சி.ஐ அமைப்பை சேர்ந்த  ஹில்டா மேரி : “நமது கல்வி முறை மற்றும் பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள் பாடத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். ஆனால் யாரோ தயாரிக்கிறார்கள். யாரோ முடிவு செய்கிறார்கள். எது தரமான கல்வி என்று யார் முடிவு செய்வது? அரசு நம் மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரவில்லை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தொகுப்புரையில் : “மருத்துவர் ஆவதைத் தன் வாழ்வின் நோக்கமாக வரித்துக் கொண்டு கடுமையாக உழைத்து உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றும் கபடத்தனமாக வாய்ப்பு தட்டிப்பறிக்கப் பட்டதனாலேயே அனிதா தற்கொலை முடிவுக்குப் போயிருக்கிறார். நீட்டுக்குத் தயாராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ள மறுத்தே அனிதா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

எதிர்த்து நிற்கத் துணியாமல் பணிந்து போவதை ஏற்கமுடியாமல், அனைத்து நிலைகளிலும் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாலும் அதற்குக் காரணமானவர்களைக் காறித் துப்புகிற வகையிலே தான் அனிதா இந்த முடிவைத் தீர்க்கமாக எடுத்துள்ளார். மோடி அரசு அடுக்கடுக்காகத் தமிழ் நாட்டுக்கு இழைத்து வரும் கேடுகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்தும் அதற்குப் பாய் விரித்துப் பல்லிளிக்கும் எடப்பாடி – பன்னீர் கும்பலின் துரோகத்தையும் மக்கள் மத்தியில் வீச்சாகக் கொண்டு செல்வதில் உடன்படுகிறவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”. என அறைகூவல் விடுத்தார்.

***

கூட்டத்தின் ஊடாகப் பேராசிரியர் மு.ராமசாமி எழுதிய “ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்” என்ற நூலைப் பேராசிரியர் இரா.முரளி வெளியிட வழக்கறிஞர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு உறுப்பினராகப்  பேரா.ராமசாமி இருந்த போது, குழுவின்  கூட்டுனர்  முனைவர் முருகதாஸ் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்துப் பதவி விலகியதையும் நடத்திய சட்ட, நடைமுறைப் போராட்டத்தைப் பற்றியும் விவரிக்கிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் பி.பி.செல்லதுரைக்கு பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி உரிய தகுதி இல்லை. அவர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது நியமனத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி ம.உ.பா.மையம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை. தொடர்புக்கு – 94434 71003.

_____________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க