Friday, May 2, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெங்கு : விருதை - ஓசூர் - தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !

டெங்கு : விருதை – ஓசூர் – தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !

-

மிழகம் முழுக்க இலட்சக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் செயலற்ற எடப்பாடி அரசு மக்களையே குற்றவாளிகளாக்க காட்டும் வகையில் பேசி வருகிறது. அரசு மருத்துவமனைகள் டெங்கு நோய் தாக்கப்பட்டவர்கள் பலரையும் உரிய சிகிச்சையளிக்காமல் சாதாரணக் காய்ச்சல் மர்மக் காய்ச்சல் என அனுப்பிவைக்கிறது. அவ்வாறு அனுப்பச்சொல்லி அரசே சொல்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் இறந்த பின்னும் 16 பேர்தான் இறந்துள்ளனர் என மோசடியாக கணக்கு கூறுகிறது எடப்பாடி அரசு. இந்நிலையில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள 33 -வார்டுகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆய்வு செய்து அதனை புகைப்பட ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 13.10.2017 அன்று மதியம் 12:00 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மேலும் மாநகராட்சி அலுவலரிடம் புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்யவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மக்கள்அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் தோழா் முருகானந்தம் தலைமையேற்றார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முற்றுகையில் பங்கெடுத்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம்.

***

சூர் – பாகலூர் சர்க்கிள் அருகே, மக்கள் அதிகாரம் சார்பில் “எதிர்க்கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, ஜெயா, எப்படி செத்தால் என்ன?, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சனைக்கு தீர்வு காண பேசுங்கள்!“ என்ற முழக்கத்தின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமைத் தாங்கினார், சூடாபுரம் கேபிள் ஆப்பரேட்டர் திரு. முருகேசன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள்  அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார்.

தலைமையுரையாற்றிய தோழர் காந்தராஜ் பேசுகையில், ‘ இங்கே பாகலூரில் ஆர்ப்பாட்ட துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்ததன் விளைவாக இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்த அரசு நிர்வாகம் இப்ப வந்து அவசர அவசரமாக கொசு மருந்து அடிச்சிட்டு போயிருக்கிறது என்று தன்னிடம் தாய்மார்கள் வந்து கூறியதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார். மேலும், இது மாதிரி தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுத்து களம்  காண்பதன் மூலமே டெங்கு முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வழி பிறக்கும் என்றார்.

அடுத்து பேசிய திரு.முருகேசன், ‘ ஒட்டுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்க வருகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் 24 மணி நேரமும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருவது தன்னை நெகிழச் செய்து இருக்கிறது என்ற வகையில் மக்கள் அதிகாரம் தோழர்களின் அடுத்தடுத்த போராட்டங்கள் முன் முயற்சிகளை பட்டியலிட்டு  மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

அடுத்து உரையாற்றிய தோழர் ரவிச்சந்திரன்,   “பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பொது மருத்துவமனைகளே நோயை உற்பத்தி செய்யும் ஆலைகளாக உள்ளது” என்ற தகவலை தாங்கள் ஆய்வு செய்த போது கிடைத்த அனுபவங்களை தொகுத்து பேசினார்.

அதனையடுத்து பேசிய தோழர் பரசுராமன் ,  டெங்கு கொசு ஒழிக்கப்பட முடியாத விசயமல்ல. அரசுக்கு ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக, மக்களை சுரண்டும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவத்துறையை மேலாண்மையோடு முடுக்கிவிட்டு மரணங்களை தடுக்காமல் 20,000 பேருக்கு நோட்டீசு கொடுத்து மக்களையே குற்றவாளியாக்கி சித்தரிக்கிறது.

மேலும், சித்த மருத்துவத்துறைக்கு உள்நோயாளியாக அனுமதிக்கக் கூடாது என்ற இயக்குனர் அறிவிப்பானது அரசு கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்கு அடியாளாக போயுள்ளதை அம்பலப்படுத்தி இந்த அரசு மக்களை காக்காது என்றார். தோற்று நிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பு தூக்கி எறியும் திசை வழியில் போராட்டங்களை செல்வது ஒன்றே ஒரே தீர்வு என்று பேசினார். திரளான மக்கள் இறுதி வரை இருந்து ஆர்ப்பாட்டத்தை ஆர்வமுடன் கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி. தொடர்புக்கு : 9994884923.

***

டெங்கு : தொடரும் மரணம் செயலிழந்த  எடப்பாடி  அரசும் நகராட்சியுமே குற்றவாளிகள் – தருமபுரி ஆர்ப்பாட்டம்.

டெங்குவால் தமிழகத்தில் அன்றாடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதனை தடுக்க வக்கற்ற இந்த அரசுதான் குற்றவாளி என்றதை உணர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு தெருமுனைக்கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்களை  நடத்தி வருகிறது. அதனுடைய  ஒருபகுதியாக தருமபுரி தந்தி அலுவலகம் முன்பு 14.10.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் தோழர் சிவா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் பேசுகையில், ஒரு காலத்தில் அம்மை நோய்க்கு மருத்துவம் இல்லாமல் கொத்துக் கொத்தாக இறந்தனர்.  ஆனால் இன்றைக்கு டெங்குவுக்கு மருத்துவம் இருந்தும் கொத்துக் கொத்தாக இறக்கின்றனர். சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் அமைச்சர்.

மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் நமக்கு தேவையா? அமைச்சர்களின் இந்த திமிர்த்தனமான பேச்சு “பட்டபகலில்  மக்களை  கொலை  செய்வதற்கு  சமம்”.  மக்களை  தூய்மையாக  இருக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் சாக்கடையை தூர்வாராமல், குப்பை தேங்கி நிற்கிறது. குப்பை அள்ளுவதற்கு லண்டன் நிறுவனங்கள். இதற்காக பலதிட்டம், நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் ஊழல்.

இதனால் புதிய புதிய நோய்கள் பரவி வருகிறது.  “நாமக்கல்லில் ஒரு தாய் தனது குழந்தைக்கு  மருத்துவம் பார்க்க முடியாமல் தனது குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்” என்றால் நாம் எப்படி பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டும். நிதி ஆயோக், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்கிறது. நமது  மருத்துவ உரிமைகளை பறிப்பவனிடம் நியாயம் கேட்க முடியுமா? எனவே இந்த நாட்டையே கொள்ளையடிக்கும், மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களையும்,  அதிகாரிகளையும் தண்டிக்காத வரையில் தீர்வு கிடைக்காது என்றார்.

தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்  முத்துக்குமார் பேசுகையில், டெங்குவால்  இறக்கும் மக்களை மர்ம காய்ச்சல் என்று மூடி மறைந்து கொண்டு இருக்கிறார்கள். 400 கோடி ஊழல் செய்த ‘குட்கா’ அமைச்சர்கள் எப்படி மக்களை சுகாதரமாக பாதுகாப்பார்கள்? சாராயக்கடையைத் திறந்து  மக்களை கொலை செய்பவர்களிடம் எப்படி நியாத்தை எதிர்பார்க்க  முடியும்?

இலவச மருத்துவம் இல்லை, இலவச கல்வி இல்லை,  இலவச தண்ணீர் இல்லை, 400 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். காவிரி பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடிந்ததா? எனவே மக்கள் பிரச்சனையை தீர்க்க துப்பில்லாத இந்த அரசின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு எதிராக போய்விட்டது. எனவே இதற்கு எதிராக மக்கள் அனைவரும்  ஒன்றிணைவதுதான்  ஒரே மாற்று என்று அறைகூவல் விடுத்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நின்று கவனித்தனர்.

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி. தொடர்புக்கு; 81485 73417

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க