privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புநீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு

நீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு

-

“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா”, “பாயாசத்தில் சிறந்தது சேமியா பாயாசமா, பாசிப்பருப்பு பாயாசமா” வகை பட்டிமன்றங்கள் தமிழகத்தின் வெட்டிப் பேச்சு நோய்க்கு ஒரு மைல்கல். அடிமைத்தனமும், அதையே இலக்கிய செதுக்கலாக ரசிக்கும் ‘நுண்ணுணர்வு’ம் யாராலும் மறக்க முடியாத எரிச்சல்கள். இலக்கிய வளமும், வரலாறும் உள்ள தமிழ் மொழியில் தானம் தரும் அரசனை மானே தேனே என்று புலவர்கள் பாராட்டி பாடுவது அதன் இருண்ட பக்கமாக இருக்கிறது.

இன்றைக்கு அரசன் இல்லை என்றாலும் அரசனது கடமையை ஞானகுரு போல அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் ஆளும் வர்க்கம் இருப்பதால் மக்களிடையே பேசப்படும் நீதி நேர்மை அனைத்தும் அப்துல் கலாம் வகைப்பட்ட “ எம்மால் வரும் பிரச்சினைகளை மறைக்க உன்னால் முடியும் தம்பி” வகை அட்வைசு அபத்தங்களால் நிரம்பி வழிகின்றன.

விசுவின் அரட்டை அரங்கம் இந்த நோயையை டிவி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றது. பத்து டெசிபலில் கத்தி பேசும் இந்த பாணியில் சிலை வழிபாட்டு நாட்டுப்பற்று, மூத்தோர் மரியாதை, உழைத்தால் உயர்வு இன்னபிற மறைகழண்ட அட்வைசு பீஸ்கள் அடிக்கடி நம் காதுகளை அறுத்து ரத்தம் வர வைக்கும்.

இந்த எழவுகள் பெரும் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதால் விசுவோ, வெங்காயங்களோ தம்மை மாபெரும் வெங்காய சுரங்கங்களாக கருதிக் கொள்கின்றன. நாஞ்சில் சம்பத், வைகோ, நெல்லை கண்ணன், தமிழருவி மணியின் ஆகியோர் அரசியல் வெங்காயங்களாக மணம் பரப்பினர். இவர்கள் சரக்கில் சத்து இல்லையென்றாலும் சத்தத்தில் ஊரே நடுங்கும்.

மேற்கண்ட பின்னணியில் அதையே கொஞ்சம் நவீனமாக்கி கார்ப்பரேட் பாணியில் “புராடக்ட் லாஞ்ச்” போல  நடத்தினால் அது நீயா நானா நிகழ்ச்சி. மேலும் அமெரிக்காவில் பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடியின் உணவு உடை இருப்பிடம் இதர அக்கப்போர்கள் குறித்து பேசப்படும் டாக் ஷோவின் பிரதிதான் நீயா நானா என்பது அதன் இயக்குநர் ஆண்டனிக்கு கூட தெரியாது.

அவரோ இல்லை கோபிநாத்தோ தம்மை தமிழகத்தில் ஒரு அறிவுப் பேரலையை உருவாக்கிய பேராத்மாக்கள் என்று நம்பியிருக்க கூடும். இதைக் கேட்டால் விஜய் டி.வி -யின் ஓனரான ரூபர்ட் முர்டோச் எனப்படும் சர்வதேச ஊடக மாஃபியா தல, செந்திலை உதைக்கும் கவுண்ட மணியின் வசவுகளை ஆங்கிலத்தில் அடிவாய்வுடன் சேர்த்து வெளியிடக் கூடும்.

மற்ற நிகழ்ச்சிகளை விட நீயா – நானா நிகழ்ச்சியின் அடையாளம் என்னவென்றால் அது நவீன வாழ்க்கை குறியீடுகளான அழகு, நிதி, சுற்றுலா, காதல், பங்கு சந்தை, போன்றவற்றை வைத்து தமிழகத்தின் ஏட்டிக்கு போட்டி பட்டி மன்ற ஸ்டைலில் நடத்துவது.

சமீபத்தில் “கேரளா – தமிழ்ப்பெண்களில் யார் அழகு?” என்று ஒரு தலைப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டார்கள். இதைக் கண்டித்த சில முற்போக்காளார்கள் – பெண்ணியவாதிகள் இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க, பிறகு நடந்த பஞ்சாயத்தில் விஜய் டி.வி அந்த நீயா நானா நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கூறி அதே போல செய்தது.

இதனால் காண்டான நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ஆண்டனி அவர்கள் நியூஸ் 18 தமிழில் வந்து, உப்பு குறைந்த அவியலுக்காக அந்த சமையற்காரரின் பத்து தலைமுறையை திட்டித் தீர்க்கும் நெல்லை சைவப் பிள்ளைவாள் போல கத்தி சாபமிட்டார்.

இதில் அவர் முன்வைத்த கருத்துக்கள், கருத்துரிமை மீதான பாதிப்பு, ஒரு விவாதத்தினை தடை செய்த இடதுசாரி பெண்ணிய அடிப்படைவாதம், பேசவிட்டு மறுக்காமல் பேசுவதையே தடை செய்யும் பாசிசம், இளைஞர்களின் உலகை அறியாத பெரிசுகளின் தொந்தரவு, ஆங்கிலம் பேசும் பெண் பத்திரிகையாளர்களின் லாபி வேலை…..போன்றவை.

முதலில் சென்னை போலீசு ஆணையரின் பஞ்சாயத்திற்கு விஜய் டிவி என்ன விதிமுறையின் கீழ் சென்று கலந்து கொண்டது? அந்த பெண்ணியவாதிகள் சொன்னார்கள் என்று போலீசு எப்படி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கூற முடியும்? உண்மையில் இந்தப் பிரச்சினை குறித்த போலீசின் அபிப்ராயத்தை விஜய் டிவி நிர்வாகம் ஏற்றுக் கொண்டு தாமே நிகழ்ச்சியை ரத்து செய்வதுதான் சாத்தியம். அப்படி என்றால் திரு ஆண்டனி அவர்கள் சண்டை போட வேண்டியது விஜய் டிவியோடு தானே தவிர புகார் கொடுத்தவர்களோடு அல்ல! ஒரு வேளை போலீசு சொல்லித்தான் நிறுத்தினார்கள் என்றால் அதை பகிரங்கமாக பேசுவதோடு, வழக்கும் தொடுத்திருக்க வேண்டும் அல்லவா?

நீயா? நானா? – நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனி

மேலும் சமூகவலைத்தளங்களின் காலத்தில் பல்வேறு இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நவீன வடிவங்களில் பேசி விவாதிப்பது அதிகரித்துள்ள நிலையில் இயல்பாகவே நீயா நானா நிகழ்ச்சி படுத்து விட்டதை ஊரே அறியும். அந்த வகையில் அதை பிரபலப்படுத்துவதற்காகவே விஜய் டிவி, இந்த சர்ச்சை எழுந்த பிறகு நிகழ்ச்சியை நீக்கி, சமூக வலைத்தளங்களில் நீயா நானா குறித்து பேசவைப்பதற்கும் வாய்ப்பு அதிகம். அல்லது இவை தற்செயலாகவே நடந்திருந்தாலும் அவர்களுக்கு சாதகமே அன்றி அது பாதகமே அல்ல!

நான் ஒரு தலித்தை வெட்டுவேன், சூத்திரன் நாக்கை அறுப்பேன், படிதாண்டிய பெண்ணை குதறுவேன், முஸ்லீம்களை பாக்-கிற்கு துரத்துவேன், தமிழ் மொழி நீசர்களின் மொழி, அமெரிக்க கருப்பர்களை நீக்ரோ என்று அழைப்பேன், போன்றவற்றையெல்லாம் யாரும் கருத்துரிமையின் பெயரில் முன் வைக்க முடியுமா? இவையெல்லாம் சட்டப்படியே தவறு, தண்டிக்கப்படும் பட்டியலில் உள்ள குற்றங்கள்!

ஆகவே அறிஞர் ஆண்டனி அவர்கள் கருத்துரிமையின் பெயரில் போராளியாக பேசுவது ஏழைகள் கஞ்சி கிடைக்கவில்லை என்றால் பீட்சா சாப்பிடலாமே என்று பேசுவதற்கு ஒப்பானது.

அடுத்து அழகு என்பதில் முதலாளித்துவம் நடத்தி வரும் வன்முறை கொஞ்ச நஞ்சமல்ல. கருப்பே அசிங்கம், வெள்ளையே அழகு, சிலை போன்ற முகமே அழகு, கோணல் மாணலான முகங்களோ காமெடியானவை என்பதில் துவங்கி, ஃபேர் அண்ட் லவ்லி, அழகு நிலையங்கள், அழகு சிகிச்சைகள் வரை அதன் கார்ப்பரேட் வர்த்தகமும் சுரண்டலும் மிகப்பெரியவை.

இரண்டு வாரத்தில் களிம்பு பூசினால் வெள்ளையாகலாம் என்ற பொய்யை, கருப்பிற்கு எதிராகவும் பேசி விளம்பரம் செய்வது கருத்துரிமையில் வருமா மிஸ்டர் அவியல் ஆண்டனி?

அதே போல கேரளப் பெண்கள் அழகு என்ற படிமம் தமிழக ‘ஆண்களிடம்’ எப்படி பதிந்திருக்கிறது என்பதை உண்மையிலேயே நீங்கள் யாரையாவது பகிரங்கமாக பேசத்தான் வைக்க முடியுமா? அது குறித்து நடிகர் ஜெயராம் பேசிய தடிச்சி –தமிழச்சிகள் விவகாரத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். பெண்கள் அழகு குறித்து எப்படிப் பேசினாலும் ஒன்று நிலவுடமை அடிமைத்தனமாகவோ இரண்டு கார்ப்பரேட் அடிமைத்தனமாகவோ அன்றி மூன்றாவது ஒன்று இல்லையே?

ஆண்டனியிடம் விவாதித்த பெண்ணியவாதியான சுசிலா என்பவர் அடிப்படையில் நீயா நானா நிகழ்ச்சியை ஏற்பதாகவும், அதற்கு தாமே பங்கேற்றதோடு, பலரையும் பங்கேற்க வைத்ததாகவும் கூறியவர் இந்தத் தலைப்பு மட்டுமே பிரச்சினைக்குறியது என்றார். இந்தப் புரிதல்தான் பிரச்சினைக்குறியது. நீயா நானா நிகழ்வு ஏதோ இந்த தலைப்பில் பெண்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதே தவறு! அந்த நிகழ்வின் வடிவம், உள்ளடக்கம், விவாத முறை, அனைத்தும் பெண்களுக்கு மட்டுமல்ல, மாறத்துடிக்கும் புதிய உலகின் பாதைகளை திசை திருப்பும் வகையில் நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் ரசனையோடு பொருந்தக் கூடியவை.

அப்பட்டமான பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடி மாந்தர்கள் உண்டு உடுத்தி கழிக்கும் நுகர்வு கலாச்சார வாழ்வியல் வசந்தங்களை “மாதவியா – கண்ணகியா” பாணியில் பேசும் இந்த விவாத நிகழ்விற்கும் அறிவுத் தேடலுக்கும், சமூக அக்கறைக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. இது குறித்து ஒவ்வொரு தலைப்பாக பிரித்து மேயலாம் – நேரமிருந்தால்…

வினவு தளத்தில் காதலை தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அறிவாளா என்று ஒரு கட்டுரையில் நீயா நானாவின் உள்கிடக்கையை சற்றே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

தமிழக காதல்களின் மையச்சரடு சாதிவெறி, ஆணாதிக்கம், மதவெறி போன்ற தீயசக்திகளிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது எப்படி உடை உடுத்தி காதலை ஃபிரபோஸ் செய்வது, எந்த ரோசாவை கொடுப்பது, எப்படி பேசுவது போன்ற ஜோடனைகளை விரிவாக செய்து காண்பித்து நடத்துகிறது நீயா நானா நிகழ்வு! இந்த வாய்ச்சொல் அலங்கார வீரம், அவர்களின் அனைத்து தலைப்புக்களுக்கும் பொருந்தும்.

நீயா நானா நிகழ்வில் ஏதோ ஒரு தலைப்பில் விவாதம் முடிந்து ஒரு பஞ்ச் டயலாக் போல ஒரு மேசேஜ் சொல்ல வேண்டி வந்தால் அவியல் ஆண்டனி என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

அங்கே சிவப்பாக இருக்கும் ‘அழகான’ பெண்ணின் பேச்சை மட்டும் போடுவோம், அப்போதுதான் மெசேஜ் மக்களிடத்தில் போய்ச்சேரும் என்பார் – என்றார். இதையும் ஆண்டனியிடம் கேட்டால், மக்களிடம் கருத்து சேர்வதற்காக செய்யும் சமரசமே அன்றி பிழையில்லை என்பார். அதுதான் அமெரிக்கா துவங்கி, அழகுப் போட்டி வரை, பாஜக துவங்கி, பதஞ்சலி பாபா ராம் தேவ், ரஜினி – கமல் வரைக்கும் வேறு வேறு அளவுகளில் பேசுகிறார்கள்.

நம்மைப் பொறுத்த வரை ரோட்டரி கிளப் கூட்டமொன்றில் டெங்கு குறித்து பேசினால் என்ன நடக்கும்? அந்த கூட்டத்தின் விருந்து செலவை சுற்று முறையில் வரும் ஒரு ரோட்டேரியன் ஏற்பார். 95 சதவீத ரூபாய் விருந்திற்கும், ஐந்து சதவீதரூபாய் டெங்கு விழிப்புணர்விற்கும் ஒதுக்கப்படும். இதில் சமூக அக்கறை இருந்தால் நீயா நானாவும் ஒரு போராளியே!

விஜய் டிவி-யின் நீயா நானா குறித்து உங்கள் கருத்து?

(இரண்டு பதில்களை அதிகபட்சமாக தெரிவு செய்யலாம்)

  • தடை செய்ய வேண்டும்
  • மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் நிகழ்ச்சி
  • தடை செய்ய வேண்டியதில்லை, ஆனால் புறக்கணிக்க வேண்டும்
  • இளைஞர்களை பேஜ் 3 லைஃப் ஸ்டைலுக்குள் திணிக்கும் நிகழ்வு
  • மொக்கை நிகழ்வுதான், இதுவாவது இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதே!

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி