Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !

ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !

-

மக்களிடம்  பகற்கொள்ளையில்  ஈடுபடும்  பென்னாகரம் அரசு போக்குவரத்து கழகத்தை  பணியவைத்த  மக்கள்  அதிகாரம்!

மிழகத்தின்  பிரபலமான சுற்றுலா தளங்களில்  ஒன்று  ஒகேனக்கல்  இங்கு ஆயிரக்கணக்கான  மக்கள்  வந்து செல்வது வழக்கம். அதுவும்  ஞாயிற்றுக்கிழமை   என்றால்  அதிக கூட்டம்  அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை  பயன்படுத்தி  அரசு ‘காய்லாங்கடை’  பேருந்துகளை இயக்கி கட்டண கொள்ளையடித்து வருகிறது பென்னாகரம் போக்குவரத்து துறை. பென்னாகரத்திலிருந்து  ஓகேனக்கல்லுக்கு  செல்லும் பேருந்துக்கு 8 ரூபாயும், டவுன் பஸ்சுக்கு  6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

29.10.2017 அன்று ஞாயிற்றுகிழமை  என்பதால் காயிலாங்கடைக்கு  போடவேண்டிய  டவுன் பஸ்களை இயக்கி  6 ரூபாய் வாங்க வேண்டிய  பேருந்து  கட்டணத்திற்கு  பதிலாக 10 ரூபாய் வசூலித்தனர். அன்று  மாலை  3.30 மணிக்கு  ஒகேனக்கல்  பேருந்து  நிலையத்திலிருந்து 7-ம் எண்   டவுன் பஸ் பென்னாகரம்  சென்றது.  இதில்  60 க்கும்  மேற்பட்ட  பயணிகள்  பயணம்  செய்தனர். இந்த பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்களும்  பயணம் செய்தனர்.

அப்போது நடத்துனர்  6 ரூபாய்க்கு  பதிலாக  10 ரூபாயை  டிக்கெட்டை  கொடுத்தார்.  மக்கள்  டவுன் பஸ்சில்  அநியாயமாக  காசு வாங்கிறீங்க என்று  முணுமுணுத்தனர்.  அப்போது பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்கள், “யாரும் பயணசீட்டு  வாங்க வேண்டாம்”  என்று  மக்களிடம்  பேசினர். இதனையடுத்து  நடத்துனர் மாதுராஜ்  இது    சிறப்பு  பேருந்து;   அதனால்  டிக்கெட் விலை 10 ரூபாய் தான்; வாங்கினால் வாங்கு, இல்லை என்றால் இங்கே இறங்கு” என்று நடுகாட்டில் இறக்கி விட முயற்சித்தார்.

அப்போது, வயதான  முதியவர்கள், பெண்கள், கை குழந்தைகள் என  அனைவரும்  தவித்தனர்.  அதை பார்த்த மக்கள்  அதிகாரம் தோழர்கள்   யாரும்  பேருந்தில்  இருந்து  இறங்காதீர்கள்  என மக்களிடம் அறிவித்துவிட்டு, ஒட்டுனரிடம்  பணிமணைக்கு  பேருந்தை விடுங்கள் இல்லை எனில் அதிகாரியை  வரசொல்லுங்கள்  என்று கூறினர்.

அதன் பிறகு  காட்டு பகுதியில் இருந்து  வெளியே உள்ள செக்போஸ்ட்டுக்கு  ஒட்டி வந்தார் ஓட்டுநர். அப்போது  அங்கு இருந்த  போக்குவரத்து  போலீசு இன்ஸ்பெக்டர்  மக்களை  மிரட்டினார். இதற்கு  அச்சபடாமல் மக்கள்  அதிகார தோழர்கள்  “திருடனுக்கு போலீசு ஆதரவாகத்தான்  செயல்படும்” என்பதை  பேருந்தில்  அம்பலப்படுத்தி  பேசினர்.  இதனை கண்ட போலீசு உடனே பேருந்தில் ஒரு  போலீசை   உடன்  அனுப்பி   பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  அங்கு  பணியில் இருந்த எஸ்.ஐ கல்பனா  பேருந்தில் வந்த பயணிகள் கொடுத்த புகாரை  பெற்று,  கூடுதலாக  கட்டணம் வசூலிக்க நிர்பந்தித்த அதிகாரிகள்  மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  பதிலாக  புகாரை  வாங்க மறுத்து விட்டார்.

இதனை  அடுத்து  அங்கு வந்த   பென்னாகரம்  போக்குவரத்து  கிளை மேலாளர்   போக்குவரத்து  நட்டத்தில் ஓடுது, என்ன சார்  பண்ண முடியும்?  இனிமேல்  கூடுதலாக  வசூலிக்க மாட்டோம்  என்றார். இதனை  குறுக்கிட்ட  மக்கள்  அதிகாரம் தோழர்கள்  இனி கூடுதலாக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று  எழுதித் தருமாறு  கேட்டனர்.

”அதெல்லாம் முடியாதுங்க, இனிமேல்  நடக்காது” என எழுதி தர  மறுத்தார்.  அப்போது  காவல் நிலையத்துக்குள்  வேகமாக  வந்தார்  இன்ஸபெக்டர் சிவராமன். ” மக்கள் அதிகாரத்துக்கு  இதே வேலையா போச்சு” என சத்தம் போட்டு பேசினார்.  ”கூட்டம்  இருக்குதுன்னு  பேசறீங்களா?” என்று  அதிகாரிகளுக்கு  ஆதரவாக  கண்மூடித்தனமாக  பேசினார். அதற்கு  ”அரசாங்க அதிகாரின்னா  பொறுமையா  பேசுவிங்க, மக்கள்ன்னா  எரிஞ்சு ,பொறுஞ்சி   மிரட்டி சத்தமா  பேசுவிங்க இல்லையா சார்?” என்று மக்கள்  அதிகார தோழர்கள் கேட்டனர்.

மேலும் கிளை மேலாளரிடம்  நீங்களும்  ஒரு  பெட்டிசன்  கொடுங்க  இரண்டு தரப்பிலும்  வழக்கு போடலாம் என்று மிரட்டினார்  இன்ஸ்பெக்டர். நீங்க  திருடனுக்கு  ஆதரவாகதான் பேசுவிங்க என்று தோழர்கள் கேட்ட உடனே  ”இவங்களுக்கு  மொதல்ல  பெட்டிசனை வாங்கி கிட்டு  சிஎஸ்ஆர்  போட்டு கொடுங்க” என்று  ஆத்திரத்தோடு  பேசி  உள்ளே  சென்றுவிட்டார்.

தினந்தோறும்  மக்கள்  தலையில் ஏதாவது ஒரு வரியை சுமத்தி கொள்ளையடிக்கும்  அரசு,  ஞாயிற்றுகிழமை  என்பதாலே  சுற்றுலா  பயணிகளையும், சாதாரண  உழைக்கும்  மக்களையும் பட்டபகலில் சிறப்பு  பேருந்து  என்று காய்லாங்கடை பஸ்ஸுக்கு கூடுதல்  கட்டணம்  வசூலித்து திருட்டை  பகிரங்கமாக  நடத்துகின்றனர். போக்குவரத்து  துறை அதிகாரிகள்.

இந்த மோசடியை  எதிர்த்து  கேள்வி கேட்டால் போலீசு  போராடுபவர்களை  மிரட்டுகிறது.  ஏற்கனவே  கடந்த ஆண்டு  பேருந்தை  மலைப்பகுதியில்  இயக்கியதால்  பெரிய  விபத்து ஏற்பட்டு  11  அப்பாவி  மக்கள் ஒகேனக்கல் மலைப்பகுதியில்   இறந்தனர். இது போன்ற விபத்துக்கள்  ஒகேனக்கல்  மலைப்பகுதியில்  அடிக்கடி சர்வ சாதாரணமாக  நிகழ்கின்றன.

பயணிகளின்   பயணத்தை  பாதுகாப்பாக  கொண்டு செல்வதற்கு  வக்கற்ற  அரசமைப்பு  மக்களை  பல வகையில்  சிறப்பு கட்டணம், விழா கட்டணம்  என்ற பெயரில்  கொள்ளையடிப்பதே நோக்கமாகக்  கொண்டு அதிகாரிகள்  செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு  அதிகாரிகளின்  வாய்வழி  உத்தரவு  போட்டு நடத்துனர்களை  மிரட்டி கூடுதல்  கட்டணம்  வசூலிக்க  நிர்பந்தம்  செய்கின்றனர்.

இது போல்  மக்கள்  கேள்வி கேட்கும் போதோ, போராடும் போதோ  ஓட்டுனர்கள்  நடத்துனர்கள் மீது  நடவடிக்கை  எடுத்து  அதிகாரிகள்  தப்பித்து  கொள்கின்றனர். இந்த பகற்கொள்ளையை திமிரோடு அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முன்நின்று கேள்வி கேட்கும் நபர்கள் மீது  வழக்கு போடுவதாக மிரட்டுகின்றது போலீசு. அநியாயம்  நடக்கும்  போது  தட்டிகேட்கவும், வீதிக்கு வரவும், தயங்க கூடாது   என்பதே  தற்போது நம்முன் நிற்கும் ஒரே வழி என்பதை  இப்போராட்டம்  உணர்த்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தொடர்புக்கு : 81485 73417.
த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும் ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285