Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் - பத்திரிகைச் செய்தி !

பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !

-

மக்கள் அதிகாரம்  – பத்திரிகைச் செய்தி

5-11-2017

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீயில் கருகிய குழந்தையை கலெக்டர், கமிசனர், எடப்பாடி ஆகிய மூவரும் அம்மணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் கார்ட்டூன் படம் வரைந்த பத்திரிகையாளர் பாலாவை மாவட்ட ஆட்சியர் அளித்த சந்தீப்  புகாரின் பேரில் நெல்லை போலீசார் இன்று 5-11-2017 காலை கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த கம்ப்யூட்டர், செல் போன், கீ போர்டு என அனைத்தையும் போலீசார் குற்றத்தை நிருபிக்க பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். படம் வரைந்ததை பாலா மறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரும் ”இந்த படத்தில் என்ன தப்பு இருக்கு ?”என்று கேட்கிறார்கள்.

இசக்கிமுத்துவின் மரணம் கிரிமினல்மயமான தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதன் மூலம் அதிகார வர்க்கம் தங்களை நியாயப்படுத்த முடியாமல் அம்மணமாகி நின்றது. இதுதான் பாலாவின் கார்ட்டூன்.

நான்கு பேர் அநியாயமாகத் தீயில் கருகியது குற்றமாகத் தெரியவில்லை. கலெக்டர், கமிசனர், எடப்பாடியை அம்மணமாக பாலா படம் வரைந்தது தான் குற்றமாகத் தெரிகிறது. இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவு கட்டுவது எப்போது?. மக்கள் பிரச்சினைகளால் வெடிக்க காத்திருக்கும் தமிழகத்தை எந்தத் திரி பற்ற வைக்கும் எனத் தெரியவில்லை. அனிதா மரணத்திலும், டெங்கு மரணத்திலும், சென்னை வெள்ளத்திலும் சிக்கிய அதிமுக அரசு இப்போது கருத்துரிமையில் கை வைத்துச் சிக்கியிருக்கிறது.

“கந்துவட்டிக்காரன் மிரட்டுகிறான் காப்பாற்றுங்கள்” என ஆறு முறை குடும்பத்தோடு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார் இசக்கி முத்து. எந்தத் தீர்வும் இல்லை. மாவட்ட ஆட்சியரை நம்பினால் இனி மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டு 23-10-2017 அன்று தனது இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டாலே ஈரக் குலை நடுங்குகிறது. அனைவரும் பார்த்து நெஞ்சம் பதறினோம். கார்டூனிஸ்ட் பாலா படம் வரைந்தார். இனியும் வரைவார். அது நமது உரிமை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.

“பாலாவை விடுதலை செய்!

கலெக்டரை கைது செய்!” என முழங்குவோம்!.

 

இவண்

வழக்குரைஞர் சி.ராஜூ

மாநில ஒருங்கிணைப்பாளர், 

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

தொடர்புக்கு : 99623 66321