Sunday, May 4, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

-

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் டிராக்டர் வாங்கக் கடன் பெற்றிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விளைச்சல் இல்லை. டிராக்டர் கடனுக்கான நிலுவையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்ய வங்கி மேலாளர் குண்டர்களை அனுப்பியுள்ளார். பறிமுதல் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஞானசேகரன் தனியாக இருக்கையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் வங்கியின் அடியாட்படையினர். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஞானசேகரன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. மழை பொய்த்தால் விவசாயம் பொய்த்து விடும் நிலையில், இம்மாவட்டத்தின் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு அண்டை மாவட்டங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். ஆந்திராவில் செம்மரம் கடத்தும் கும்பலிடம் சிக்கி பரிதாபமாக இப்பகுதியினர் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.

விவசாயி ஞானசேகரன்

தற்போது மரணமடைந்துள்ள ஞானசேகரன், கடந்த 2010 -ல் சாத்தனூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், டிராக்டர் வாங்குவதற்காக 4 லட்சத்து 95 ஆயிரம்  கடன் பெற்றுள்ளார். அதில் ஐந்து தவணையாக 3.5 லட்சம் கட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய வறட்சி மற்றும் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமை காரணமாக அவரால் மீதி கடன் தொகையை செலுத்த முடியவில்லை.

தனது நிலையை வங்கி மேலாளரிடமும் எடுத்து கூறியிருக்கிறார். கரும்புக்கான பணம் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையில் இருந்து ரூ.3 லட்சம் வர வேண்டியுள்ளது. அந்த பணம் வந்தவுடன் கடனைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். சர்க்கரை ஆலையின் பீல்டுமேனிடம் பணத்தை பலமுறை ஞானசேகரன் கேட்டபோதும் பணத்தை வங்கியில் போட்டு விடுவதாகக் கூறி அலைக்கழித்திருக்கிறார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் வசூல் நடவடிக்கைகளை, தனியார் நிறுவனங்களின் வசம் ஒப்படைத்துள்ளது. கல்விக் கடன் வசூல் நடவடிக்கைகளை, வாராக்கடன் நாயகன், ’யோக்கிய சிகாமணி’ அம்பானியின் நிறுவனத்திடம் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த குண்டர்கள் மிரட்டி, அவமானப்படுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட லெனின் என்னும் மாணவரே இந்தக் கிரிமினல்களின் மோசமான  நடவடிக்கைகளுக்கு சாட்சி.

அந்த அடிப்படையில் விவசாய கடனை வசூலிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது  பாரத ஸ்டேட் வங்கி.  கடந்த 04.11.2017 சனிக்கிழமை, அத்தனியார்  நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ராஜா, வேங்கடபதி ஆகிய  இருவர்  ஞானசேகர் வீட்டில் வந்து கடன் தொகையை செலுத்தக் கோரி பிரச்சினை செய்துள்ளனர். அந்த நேரத்தில் ஞானசேகர் வீட்டில் இல்லை. அவருடைய மகன் ராமதாஸ் மட்டும் இருந்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட ராமதாஸ், ”தற்பொழுது தான் மழை பெய்துள்ளது. எப்படியாவது கடனை அடைத்து விடுகிறோம்” எனக் கெஞ்சி இருக்கிறார்.  “அசல் தொகையை கொடுத்து விட்டு வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று திமிராகக் பதிலளித்திருக்கிறார் மேலாளர்.

அதனடிப்படையில் குண்டர்கள் டிராக்டரை எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது வந்த ஞானசேகர், “ நான் வங்கியில் தான் கடன் வாங்கினேன். இந்த பிரச்சினையை நான் வங்கியில் தீர்த்து கொள்வேன். உங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை” என்று குண்டர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஞானசேகரைத் தள்ளிவிட்டு டிராக்டரை எடுக்க முயற்சித்தனர் குண்டர்கள். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் சிறிய அளவில் கைகலப்பு ஏற்படவே தனியார் நிறுவன குண்டர்கள்  இருவரும் அங்கிருந்து  கிளம்பி விட்டனர்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் ஞானசேகர் தனது நண்பர் மூர்த்தியுடன் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவன குண்டர்கள் இருவரும் ஞானசேகரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஞானசேகர் சம்பவ இடத்திலேயே சரிந்து  விழுந்து விட்டார்.

விவசாயி ஞானசேகரனின் குடும்பத்தினர்

தகவலறிந்து சென்ற ஞானசேகரின் மகன் ராமதாஸ் அவரை தானிப்பாடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று கூறி அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் மருத்துவர்கள். திருவண்ணாமலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் ஞானசேகர் உயிரிழந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று தனியார் நிறுவன குண்டர்கள் இருவர் மற்றும் வங்கி மேலாளர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளருக்கு எதிராக புகாரை பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார் தானிப்பாடி ஆய்வாளர். அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் அனைவரும் போராட்டம் நடத்தவே குற்றப்பிரிவு 174 -ன் படி  சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

வங்கி மேலாளர் உட்பட அனைத்து குற்றாவாளிகளையும் கைது செய்ய வேண்டும், ஞானசேகரனின் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திங்கட்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் தி.மலை கலெக்டரும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து தனது இருப்பைக் காட்டிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் குவிந்தன. விவசாய சங்கத்தினரை வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அரசு அவர்களை அழைத்து திங்கள் கிழமை மாலை மூன்று மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் ஞானசேகரின் மகள் மங்கையர்க்கரசி, அய்யாக்கண்ணு (டில்லி தொடர்போராட்ட விவசாய சங்கத் தலைவர்), சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன், திமுக எம்எல்ஏ கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

( முதல் தகவல் அறிக்கையின் நகல் )

அரசு தரப்பில்  போலீசு துணை ஆணையர், தானிப்பாடி காவல் ஆய்வாளர், மற்றும் ஆர்.டி.ஓ. கலந்து கொண்டனர். இந்தப்  பேச்சுவார்த்தையில் ஞானசேகரைக் கொன்ற குற்றவாளிகள்  ராஜா, வெங்கடபதி மற்றும் வங்கி மேலாளர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஞானசேகரின் மகள் மங்கையற்கரசி முன்வைத்தார். மேலும், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்கிறோம். மற்ற இருவரை கைது செய்கிறோம். ஆனால் வங்கி மேலாளரைக் கைது செய்ய முடியாது, என்று கூறியுள்ளார் போலீசு துணை ஆணையர். மேலும் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறிய போலீசு துணை ஆணையர், ஆர்.டி.ஓ -விடம் மனு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை எல்லாம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற குழு ஏற்றுக்கொண்டு உடலை வாங்குவதாக சொல்லி வந்துவிட்டனர். அப்பொழுது ஞானசேகரின் குடும்பத்தினருடன் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் “அதிகாரிகள் எழுத்து பூர்வமாக சொன்னாலே செய்ய மாட்டார்கள். வாய்மொழியாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியின் நியாயத்தை உணர்ந்த ஞானசேகரின் குடும்பத்தார்  உடலை வாங்காமல் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர்.

போராட்டம் முடிவுக்கு வாராமல் நீடிக்குமோ என்று பதறிய பேச்சுவார்த்தை குழுவிலிருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ”அரசு அதிகாரிகள் சொன்னதை செய்வார்கள். அரசை நம்புங்கள். அவர்கள் செய்யவில்லை என்றால் எனது சொந்த முயற்சியில் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறி போராட்டத்தை அரசுக்கு சாதகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

உடலையும் வாங்கி சென்று அடக்கம் செய்த பின்னர், எந்த விவசாய சங்கமும் இன்று வரை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது அவர்களுக்கு ஆறுதலாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சட்ட ரீதியான ஆலோசனைகள், உதவிகளை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் எதிரியே இந்த அரசு தான். அரசின் வாய் வார்த்தையை நம்பினால் அம்மணமாக நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு அய்யாக்கண்ணுவின் டில்லி போராட்டமே சாட்சி. ஆனால் இன்னமும் அதனை அய்யாக்கண்ணு உணரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய் என்று கெஞ்சுவதால் பலனில்லை. ”விளைச்சல் இல்லை, விலை இல்லை, கடனைக் கட்ட முடியாதுஎன்று மறுப்பது மட்டும் தான் ஒரே தீர்வு.

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க