privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

-

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்திலுள்ள பூவாளூர், பின்னவாசல், காட்டூர், கொத்தமங்கலம், மேட்டுப்பட்டி, கோமாகுடி, தின்னியம், செம்பரை, முள்ளால், கல்விக்குடி, ஆழங்குடிமகாஜனம் ஆகிய 10 -க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் பாசனத்திற்கான உயிராதாரமாக கீழ்பங்குனி வாய்க்கால் உள்ளது. சுமார் 5,000 ஏக்கர் பாசன பரப்பை கொண்ட இவ்வாய்காலின் தலைமதகு திருமங்கலம் கலிங்கியிலிருந்து பிரிந்து நீராதாரம் பெறுகிறது.

2016 – 2017 தவிர எந்த காலத்திலும் இந்த வாய்காலில் தண்ணீர் தட்டுப்பாடோ, நிலத்தடி நீர் குறைந்ததோ கிடையாது. ஆனால் 2017 அக்டோபர் 2 -ல் மேட்டூர் அணை தண்ணீர் திறந்து ஒரு மாத காலமாகியும் இவ்வாய்காலுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பலமுறை இலால்குடி கோட்டம், ஆற்று நீர் பாசன வாய்கால் உதவி செயற்பொறியாளரிடமும் மதகு திறப்பணையாளரிடமும் நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமும் வாய்க்காலை தூர்வாரி தண்ணீரை திறந்துவிட முறையிட்டும் எந்த பலனும் இல்லை. 12 ஊர் விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இனி அரசை நம்பி பலனில்லை “நம்ம ஊர் வாய்காலை நாமே சீர்செய்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர்.

தூர்வாருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் கடந்த 07.11.2017 அன்று தண்ணீரை திறந்துவிட்டார்கள் அதிகாரிகள். தண்ணீர் திறந்து 6 நாட்கள் ஆகியும் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செம்பரையைக் கூட தாண்டவில்லை. பங்குனி வாய்காலின் எந்த கிளை வாய்காலுக்கும் இதுவரை முழுமையாக தண்ணீர் போய் சேரவில்லை. இந்நிலையில் மக்கள் அதிகாரத்தின் உதவியை நாடினால் நம்முடைய பிரச்சனை தீரும் என விவசாயிகள் முடிவு செய்தனர்.

இம்முடிவை ஏற்று திருச்சி மக்கள் அதிகாரம்,

“நீரின்றி அமையாது உலகு”

பங்குனி வாய்காலை தூர்வார துப்பில்லை!
தோற்றுப்போன அரசை நம்பி பலனில்லை!
மக்களே அதிகாரத்தை கையிலெடுப்போம்!
வாய்காலை சீர்செய்வோம் வாரீர்!

என்ற முழக்கத்தை முன்வைத்து சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். மக்களிடையே துண்டுபிரசுரங்கள் விநியோகித்தனர். 13.11.2017 அன்று விவசாயிகளும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும், சாராய பாட்டில்களாலும், புதர் மண்டிக் கிடந்த வாய்க்காலை சீர் செய்யும் பணியில் பணியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

“நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.

வேலை நடந்து கொண்டிருந்த போது ஒரு விவசாயிக்கு போன் அழைப்பு வந்து கொண்டே இருந்தது அவர் எடுக்காமல் வேலையில் மும்முரமாக இருந்தார். மக்கள் அதிகார தோழர் ஒருவர் ஐயா போன் வந்துகிட்டே இருக்கு எடுத்து பேசுங்க என சொன்னார். அதற்கு அவரோ “போனை எடுத்தா வீட்டுக்கு வான்னு கூப்பிடுவா… நான் போயிட்டா…? இந்த வேலையை யார் பாக்குறது ? நீங்க மட்டும் தனியா எவ்வளவு நேரம் செய்வீங்க? அதனாலதான் போனை எடுக்கவில்லை” என்று அக்கறையுடன் பேசினார்.

மற்றொரு விவசாயி “என் நிலத்தில் பயிர் நடவு வேலை நடக்கின்றது. நேரம் முடியபோகுது, ஆட்களுக்கு கூலி கொடுக்கனும். அதுக்குதான்  மனைவி போன் பண்றாங்க. இருந்தாலும் ஊர் நல்லதுக்காக சீர்செய்யும் வேலையை முடித்துவிட்டுதான் செல்வேன்” என வைராக்கியத்துடன் கூறிக்கொண்டு ஆகாய தாமரை செடியை வாய்க்காலில் அகற்றி கொண்டிருந்தார்.

இன்னொரு விவசாயி ” காந்தி போன்ற நபர்கள் அரசியலில் கூட்டம் காண்பிப்பதற்காக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பின் விவசாயிகளை கைவிட்டார்கள். ஆனால் மக்கள் அதிகாரம் மட்டும்தான் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக வழிகாட்டுதல் கொடுப்பது மட்டுமல்லாமல் உடனிருந்து உதவியும் செய்கின்றனர்” என்றார்.

நீராதாரத்தை பேணி பாதுகாப்பதில் விவசாயிகளுக்குதான் அக்கறை உள்ளது. ஆனால் அதிகாரிகள் அரசியல்வாதிகள் இருப்பதை அழிக்கின்ற வேலையிலும் மணல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர். வாய்க்காலை தூர்வார பலநூறு கோடி ரூபாய் ஒதுக்கியும் எதுவும் செய்யாமல் எடப்பாடி அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய நீரை பெற்றுத் தராமல் தமிழகத்தை வஞ்சித்தது. இங்குள்ள எடப்பாடி அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. இப்போது தண்ணீர் வந்தும் அதை முறையாக தூர்வாரி திறந்துவிட மறுக்கிறது தமிழக அரசு. விவசாயிகளோ தனக்கு எதிரியாகிப் போன இந்த அரசமைப்பை பற்றி புரிந்து கொள்ளாமல் ஆண்டவன் விட்ட வழி என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் விவசாயிகளும் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157

  1. மக்கள் தான் அதிகாரம் படைத்தவரகள் என்பதை செயல்படுத்த தொடங்கியுள்ளார்கள்.

Leave a Reply to செழியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க