Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்PRPC - 14வது ஆண்டு விழா கருத்தரங்கம் - மதுரையில் !

PRPC – 14வது ஆண்டு விழா கருத்தரங்கம் – மதுரையில் !

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – 14வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !

ன்பார்ந்த நண்பர்களே! அன்றாட தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிக்கைச் செய்திகளில் இரண்டு விசயங்கள் பெரும்பாலும் பேசப்படாது. ஒன்று, மோடி-அமித் சா குற்றங்கள்; இரண்டு, நீதித்துறையின் தவறுகள்/குற்றங்கள். இதற்கு உதாரணங்களாக “தி காரவன்” மற்றும் “தி வயர்” இதழ்களில் வந்த செய்திகள் நம்மை அதிரச் செய்கின்றன.

இந்தியாவில் மோடிக்கு அடுத்த அதிகாரம் மிக்க நபர் அமித் சா. அவர் மீது இரண்டு போலி என்கவுண்டர் வழக்குகள் பதியப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இக்கொலைகள் மோடியின் மதிப்பை உயர்த்துவதற்காக நடத்தப்பட்டதாகச் செல்லப்பட்டது. இதில் சொராபுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்தவர்தான் மும்பை நீதிபதி பிரிஜ்கோபால் லோயா. இவர் திடீரென டிசம்பர்1, 2014 அதிகாலையில் மாரடைப்பால் இறந்ததாகச் சொன்னார்கள். அன்று அது சிறு செய்தி கூட இல்லை. தற்போது அவரது மரணம், கொலைதான் என்பதற்கான மிக வலுவான சந்தேகங்களை நீதிபதி லோயா குடும்பத்தினர் எழுப்பியுள்ளனர்.

இறந்த நீதிபதி தலையில் காயம், சட்டையில் இரத்தக் கறை இருந்தது; பிரேத அறிக்கையில் இறப்பு நேரம் 06.15 என உள்ளது; ஆனால் காலை 5 மணிக்கே இறப்பு குறித்த தகவல் குடும்பத்துக்கு வந்தது. தகவல் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்து ஈஸ்வர் பகேதி. இந்த பகேதி போஸ்ட் மார்ட்டம் அறை வரை வந்து உடலை சீக்கிரம் வாங்கச் சொன்னார். நீதிபதியின் போனும் அவரிடமே இருந்தது. அதில் அழைப்பு, குறுஞ்செய்தி விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்.எஸ்.எஸ் நபர் யார் என்று லோயா குடும்பத்தினருக்குத் தெரியாது! இயற்கை மரணம் என்றால் போஸ்ட் மார்ட்டம் ஏன் நடந்தது? குடும்பத்தினரிடம் ஏன் அனுமதி பெறவில்லை? என அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்புகின்றனர்.

அமித் சாவை வழக்கிலிருந்து விடுவிக்க 100 கோடி பேரம் பேசிய அன்றைய மகாராஷ்டிரா மாநில தலைமை நீதிபதி மொகித் சா, அமித் சாவுக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்தால் அது பெரிய செய்தி ஆகாது, தீர்ப்பு அன்று ஓர் குண்டு வெடிப்பு நடக்கும், மக்கள் அதைத்தான் பேசுவார்கள் என்று லோயாவிடம் வற்புறுத்தியுள்ளார். லோயா அதற்கு உடன்படவில்லை டிச.15-ல் அமித்சாவை ஆஜர் ஆகச் சொன்ன நீதிபதி லோயா, டிச.1-ல் இறக்கிறார். அடுத்த 30 நாட்களில், 10,000 பக்க குற்றப்பத்திரிக்கையிலிருந்து அமித்சா விடுவிக்கப்படுகிறார். சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை. தனது தந்தை இறப்பு குறித்து விசாரணை கோரிய லோயாவின் மகன் மனுவும் கண்டுகொள்ளப்படவில்லை. இன்று வரை இக்குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

அடுத்து மருத்துவக் கல்லூரி ஊழல் கதை. லக்னோவில் உள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தருவதாகவும், அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பேசுவதாகவும் சொல்லி பணம் பெற்ற ஹவாலா டீலர் மற்றும் முன்னாள் ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி  குதுா-சி  ஆகியோர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்கள். இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மருத்துவக் கவுன்சில் வழக்குகளை அப்போது விசாரித்து வந்தவர்கள் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபது தீபக் மிஸ்ராவும், கான்வல்கரும். இப்பின்னணியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் மற்றும் காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.

நவம்பர்,9,2017-ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு, உச்சநீதிமன்றத்தின் மூத்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தது. உடனே, நவம்பர் 10 அன்று, உச்சநீதிமன்றத்தின் மூத்த 4 நீதிபதிகள் தவிர்த்து, வேறு நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வை உடனே கூட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூசனைப் பேசவிடவில்லை. கட்சிப் பொதுக்குழுவில் தலைமையை எதிர்க்கும் நபர்களை கட்சிக்காரர்களை வைத்து மிரட்டி வெளியேற்றுவது போல, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தையும் சேர்த்துக் கொண்டு பிரசாந்த் பூசனை வெளியே அனுப்பி விட்டு நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்பு காமினி ஜெய்ஸ்வால் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அனைவரும் எழுப்பும் கேள்வி “எவரொருவரும் அவரது வழக்கிற்கு அவரே நீதிபதியாக இருக்க முடியாது” என்ற சட்ட நிலையை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மீறலாமா?

இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஊடகங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ராஜீ ராமச்சந்திரன், துஷ்யந்த் தவே, மோகன் பராசரன் உள்ளிட்ட பலர், ’தலைமை நீதிபதிக்கு சக மூத்த நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை எனில், உச்சநீதிமன்றம் எப்போதும் எதிர்கொள்ளாத அபாயகரமான உள்நெருக்கடி இது’ என்கிறார்கள். இதை எங்கே போய் முறையிடுவது?

இதே உச்சநீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் எப்படி நடந்து கொள்கிறது? ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தியாகராஜன் இப்போது சொல்கிறார் ’கொலைக்குப் பயன்பட்ட பெல்ட் வெடிகுண்டில் இருந்த பேட்டரி எதற்காக வாங்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது எனப் பேரறிவாளன் சொன்னார். அதை வாக்குமூலத்தில் நான் எழுதவில்லை’. தடா சட்டத்தின் கீழான இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தீர்ப்புச் சொன்ன நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள் சி.பி.ஐ. சில கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை, பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என கடிதம் எழுதுகிறார். ராஜீவ் கொலைச் சதியின் விரிவான விசாரணை 17 ஆண்டுகளாக எம்.டி.எம்.ஏ என்ற சிபிஐ குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தனை ஓட்டைகள் இருந்தும் தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முடிவு எடுத்த பின்பும் உச்சநீதிமன்றம் விடுவிக்க மறுக்கிறது.

இதேபோல நேரடி வன்முறை ஏதும் இன்றி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்று மட்டும் சொல்லி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார், 90% உடல் ஊனமுற்ற, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த பேராசிரியர் சாய்பாபா. சிறையிலிருந்து அக்,17,2017-ல் அவரது மனைவிக்கு எழுதிய கடிதம் நமக்குக் கண்ணிரை வரவழைக்கிறது.

“அன்புள்ள வசந்தா, நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் குளிர்காலத்தில், நான் இங்கு பிழைப்பது சாத்தியமற்றது. இறுதி மூச்சு விடும் மிருகத்தை போல நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு.காட்லிங் அவர்களிடம் எனது பிணை மனுவை நவம்பர் முதல் வாரம் அல்லது அக்டோபர் இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கவும். உங்கள் அனைவரிடமும் பிச்சைக்காரனைப் போலவும், கைவிடப்பட்டவனைப் போலவும் பல முறை கெஞ்சுவதால், மிகவும் மனச்சோர்வுற்று இருக்கிறேன். தொண்ணூறு விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி மனிதன், சிறைக்குள் இருந்துகொண்டு, இயங்கும் ஒரே கையுடன் என்ன செய்வான் என்பது யாருக்கும் புரிவதில்லை.”

இந்த மனிதரைத்தான் ’உடல் ஊனமுற்றால் என்ன? மூளை வேலை செய்கிறதே’ என்று வக்கிரமான முறையில் தீர்ப்பெழுதினார் கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி. இன்றுவரை சாய்பாபாவுக்கு பிணை மறுக்கப்படுகிறது.

மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்பட்ட நீதித்துறை, இப்படி நபர்களைப் பொறுத்து, அதிகாரத்தைப் பொறுத்து தனது நியதிகளை தானே மீறிவருகிறது. அரசின் பல்வேறு அநீதிகளுக்குத் துணைபோகிறது.

அதேசமயம் இந்த அநீதிகளை எதிர்க்கும் பலர் கைது, சிறை, கொலை எனப் பலவகையிலும் அரசு அதிகாரத்தால் முடக்கப்படுகிறார்கள். குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய தீஸ்தா சேதல்வாத், பார்ப்பனியத்தை எதிர்த்த கல்புர்கி, கவுரி லங்கேஷ், மோடியை விமர்சித்த என்டிடிவி, திரிபுரா ரைபிள் படை ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா எனத் தேசிய அள்விலும், தமிழகத்திலோ வழக்கறிஞர் முருகன், மாணவி வளர்மதி, கார்ட்டுனிஸ்ட் பாலா, பேராசிரியர் ஜெயராமன், வழக்கறிஞர் செம்மணி என அடக்குமுறைப் பட்டியல் நீள்கிறது.

மொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்கள் எங்கு செல்வது? மாற்று என்ன?

அறிவிக்கப்படாத அவசரநிலை போன்ற இச்சூழலில்தான் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

அதற்குத்தான் இக்கருத்தரங்கம்.  வாருங்கள், செயல்படுவோம்!

நிகழ்ச்சி நிரல்

கருத்தரங்கம்:

தலைமை: பேராசிரியர் அ.சீனிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை

தொடக்க உரை: வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

கருத்துரை:

நொறுக்கப்படும் மனித உரிமைகள் பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்!

திரு பி.எஸ்.எம். இரகுமான்,
ஊடகவியலாளர்,
சென்னை.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலை குலையும் நீதித்துறை – நமது கடமை என்ன?

திரு. அரிபரந்தாமன்,
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்

காட்சி அரங்கம்: குறும்படங்கள் – மக்கள் உரிமைகளும், கார்ப்பரேட் ஜனநாயகமும்

நன்றியுரை: திரு. ம. லயனல் அந்தோனிராஜ்,
செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம்: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டம். அலைபேசி: 94434 71003

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க