privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதுயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !

துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !

-

குமரி மாவட்ட கடற்கரையோர மீனவ கிராமங்கள் துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. “ஒக்கி புயலில்” சிக்கியவர்களில் தானாக நீந்தி கரையேறிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பவில்லை. தங்கள் கண்ணெதிரே தன் சொந்தங்கள் கடலில் மூழ்கியதை கதறலோடு மீனவர்கள் சொன்னாலும் கேடுகெட்ட அரசு மவுனமாய் இருக்கிறது.

என்ன நடந்தது என்பதை அறிய பாதிக்கப்பட்ட நீரோடி, வள்ளவிளை, தூத்தூர் ஆகிய  கிராமங்களுக்குச் சென்றோம். இவற்றோடு, மறத்த துறை, இறைவி புத்தன் துறை, சின்னத்துறை, பூத்துறை, இறையமன் துறை என மொத்தம் 8 கிராமங்கள் ஒரு வட்டத்துக்குள் வருகின்றன.

இந்த 8 கிராமங்களில் இருந்து மட்டும் 254 படகுகள் கடலுக்கு சென்றதாக கூறுகின்றனர். ஒரு படகுக்கு 15 பேர் வரை சென்றிருக்கின்றனர். மேலும் 32 தங்கு படகுகளில் 6 பேர் வீதம் சென்றுள்ளனர். குறிப்பாக, அப்பகுதி மீனவர்களோடு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து மீன்பிடிப்பதில் கூலிகளாக வேலை செய்த தொழிலாளர்களும் அடக்கம். இவற்றில் 121 படகுகள் மட்டுமே திரும்பியுள்ளதாகவும், மற்ற எவையும் திரும்பவில்லை எனவும் கூறுகின்றனர்.

முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரசு மெத்தனமாக இருந்ததைத் தொடர்ந்துதான் இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதன் பின்னரே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரோ, மாநில அரசு என்ன விவரம் சொல்கிறதோ அதிலிருந்துதான் எங்களால் செயல்பட முடியும். 97 பேர் மட்டும் காணாமல் போயுள்ளதாகத்தான் தகவல் கூறியுள்ளனர். ஆனாலும், நீங்கள் வைத்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழக அரசு இப்பிரச்சினையை கையாள்வதற்கு தனியாக காவல்துறை அதிகாரியையும், ஐ.ஏ.எஸ். தகுதி உடைய அதிகாரியையும் நியமித்துள்ளது. இவையெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பதை அங்கே செல்லும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

புயல் வந்த நவம்பர் 30 காலையில்தான் கரையில் இருப்பவர்களுக்கே தகவல் கிடைத்துள்ளது. தாமதமாக தகவல் கிடைத்ததை எல்லா இடங்களிலும் மக்கள் குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்பவர்கள் குறைந்தது 30 – 40 நாட்கள் கடலுக்குள் இருக்க வேண்டும். அதிக தூரத்தில் இருக்கும் அவர்களுக்கு தகவல் தொடர்புக்கு ரேடார்  கருவிகள் தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று குற்றஞ் சாட்டுகின்றனர்.

இப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS –  VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தேங்காய்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், கடற்படையில் மீனவர்களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். சேட்டிலைட் போன் மீனவர்களுக்கு கொடுக்க வேண்டும், மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும், ஐ.ஸ். பிளேண்ட் அமைக்க வேண்டும், வயர்லெஸ் அலைவரிசையில் தங்களுக்கு ஒரு அலைவரிசையை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால், அரசு செவிசாய்க்காமல் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.

இனயம் துறைமுகம் மீனவ மக்களின் வாழ்க்கையை சூறையாடும் என்பதையும், அதைக் கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்பதையும் இளைஞர்கள் முன்வைக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகள், அதிகாரிகளின் புறக்கணிப்புக்கு தொடர்ந்து மீனவ மக்கள் ஆளாகி வருவதை நேரில் பேசியதன் மூலம் உணர முடிந்தது. அதிகாரிகளின் இலஞ்ச ஊழல், கடற்படையின் ஒடுக்குமுறை, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியது, ஓட்டுக்காக மட்டுமே தங்களை பயன்படுத்துவது, இனயம் துறைமுகம் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தங்களை அழிக்கத் துடிப்பது என அவர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருப்பதை அவர்கள் பேச்சிலிருந்து உணர முடிந்தது.

இப்போது நடந்திருக்கும் இந்நிகழ்வு அவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. “கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைப்” போல இது நகர்ந்து விடுமோ என்ற அச்சத்தில்  எப்படியாவது இதை அணைத்து விட வேண்டும் என்று ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்புகளும் முயற்சி எடுப்பதையும் கண்கூடாக பார்க்க முடிந்தது. இதுவரை நடந்த இழப்புகளுக்கு, இப்போது நடந்துள்ள இவ்வளவு பெரிய இழப்புக்கு இந்த அரசுதான் காரணம் என்பதை அம்மக்கள் உணர்ந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் அனைவரும் முனைப்போடு செயல்படுகின்றனர்.

கடலில் காணாமல் போன மீனவர்கள், கரையிலோ அவர்களை காப்பாற்ற வக்கற்ற அரசு – இதுதான் குமரி மாவட்ட கடற்கைரை கிராமங்களின் நிலவரம். பெருங்கடலின் சீற்றத்திற்கு அஞ்சாமல் தொழில் புரியும் மீனவ மக்களின் இந்தப் போராட்டத்திற்கு துணை நிற்பதும், தேங்கி நிற்கும் அரசுகளை தட்டிக் கேட்பதும் நமது கடமை!

தகவல் : மக்கள் அதிகாரம், குமரி மாவட்டம்