privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஅஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! - குடும்பத்தினர் கதறல்

அஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! – குடும்பத்தினர் கதறல்

-

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் என்னும் பெயரில் எரித்துக் கொல்லப்பட்ட அஃப்ரசுல் கானின் குடும்பத்தினர் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றனர். “அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். இதன் பின்னணியில் சதி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள் அஃப்ரசுலின் குடும்பத்தினர்.

மேற்கு வங்கத்தின் மால்டா நகரைச் சேர்ந்த 47 வயதான முசுலீம் தொழிலாளி அஃப்ரசுல், இந்து பெண்ணை காதலித்ததாகக் கூறி எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்துத்துவ வெறியன் ஷாம்புலால் ரெகர் என்பவன் நேரடியாக இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதோடு, தனது 14 வயது மருமகனையும் இக்கொலையை படமெடுப்பதற்கு ஈடுபடுத்தியுள்ளான்.

கொலையாளி ஷம்புலால் ரீகர் – உள்படம் கொலை செய்யப்பட்ட தொழிலாளி அஃப்ரசுல் கான்

ஷாம்புலாலையும் அவனது மருமகனையும் கைது செய்த ராஜஸ்தான் டிஜிபி, “இது ஒரு கொடூரமான கொலை. சாதாரண மனிதனால் இத்தகைய கொலையை செய்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

போலீசிடமிருந்து தகவல் கிடைத்ததும், கொல்கத்தாவிலிருந்து 325 கிமீ தொலைவில் உள்ள அஃப்ரசலின் வீட்டில் அவரது உறவினர்கள் துக்கத்தோடு குவிந்துள்ளனர். அஃப்ரசலின் மனைவி குல்பகர் பீபி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “எனது கணவரை கொடூரமாக கொன்று அதனை அனைவருக்கும் படமெடுத்துக் காட்டியவர்களை தூக்கிலிட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கிறார். நேற்று மதியம் 3 மணியளவில் இராஜஸ்தான் போலீசில் இருந்து அழைப்பு வந்தது. எனது கணவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

அவரது மகள் ரெஜினா கான் “ கடந்த செவ்வாய்க் கிழமை தான் நாங்கள் அவரோடு பேசினோம். அவர் எங்களோடு தொலைபேசியில் தினமும் பேசுவார். ‘லவ் ஜிஹாத்’ என்றால் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது. அவருக்கு பேரன் – பேத்திகள் இருக்கிறார்கள். அவர்கள் எனது தந்தையை, தீயிட்டு எரிப்பதற்கு முன்பு, மிருகம் போல குதறியிருக்கிறார்கள். அதனைச் செய்தவர்களும் என் தந்தை பட்ட வேதனையைப் பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த வீடியோவையும், கொல்லப்படும் போது ஆதரவற்ற நிலையில் எனது தந்தையின் கதறலையும் நான் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மூன்று பெண்களின் தந்தையான அஃப்ரசுல், தனது இளைய மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, இம்மாத இறுதியில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். சொந்த ஊரில் இருக்கும் சிறு அளவு நிலம் அவரது குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இல்லாத காரணத்தால்தான் கடந்த 12 ஆண்டுகளாக அஃப்ரசுல் இராஜஸ்தானில், முறைசாரா தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அஃப்ரசுலின் குடும்பத்தினர்

அஃப்ரசுலின் உறவினரான ஜீனத் கான், “ இதில் சதி இருக்கிறது. இதில் பெரிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு தொழிலாளியால் என்ன செய்ய முடியும்? சமூக வலைத்தளங்களில் இந்தக் குற்ற நடவடிக்கை பிரபலப்படுத்தப்பட்டதன் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது இதற்குப் பின்னர் மிகப்பெரிய சதியும், செல்வாக்குள்ள நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது. எங்களுக்கு இராஜஸ்தானில் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இப்போது போலீசு நிலையத்தில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இச்செய்தி வெளியானவுடன், அஃப்ரசுலின் கிராமத்தினர்கள் அவரது வீட்டில் குவியத் தொடங்கிவிட்டிருக்கின்றனர். அஃப்ரசுலின் உடல் வருவதற்காகவும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகவும் காத்திருக்கின்றனர். அங்கு பலரும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். அஃப்ரசுல் கடவுளுக்குப் பயந்த மனிதர் என அவர்கள் கூறுகின்றனர்.

அஃப்ரசுலின் அண்டை வீட்டுக்காரரான ஜிவல் சௌவுத்ரி, ”எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். இதுவரை மோசமான பின்னணி எதுவும் அவருக்குக் கிடையாது. அவர் ஒரு நல்ல மனிதர். கடவுளுக்குப் பயந்தவர்.” என்று கூறியுள்ளார். “அவரது ஏழ்மையான குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்?, அவரது இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு இவர் மட்டும் தான் வருமானம் ஈட்டித் தருபவராக இருந்தார்.” என மற்றொரு அண்டை வீட்டுக்காரரான இப்ரஹீம் கூறினார்.

மூலக்கட்டுரை : நன்றி – The Indian Express