Tuesday, May 6, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !

கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !

-

மிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான ஊதிய உயர்வு, ஓய்வூதியத் தொகை, நிலுவைத் தொகை போன்றவற்றை தராமல் தமிழக அரசு தொழிலாளர்களை ஏமாற்றி வருவதோடு, அவர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை வழங்காததன் எதிர்வினையே இந்த கொந்தளிப்பான போராட்டம்.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் பேருந்துகள் 100 சதவீதம் இயங்குவதாகவும், தொழிலாளர்கள் நீதிமன்ற உத்திரவை ஏற்று பணிக்கு திரும்புகிறார்கள் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

கரூர், குளித்தலை, முசிறி, அரவக்குறிச்சி ஆகிய பணிமனைகளில் மொத்தம் 305 பேருந்துகள் உள்ளது. அவற்றில் கரூர் நகர 1, 2 பணிமனைகளில் 54 நகர பேருந்துகளும், 98 தொலைதுார பேருந்துகளும், 24 ஸ்பேர் வண்டிகளும், மற்ற பணிமனைகளில் 129 பேருந்துகளும் இயங்குகிறது. அமைச்சர் 100 சதவீத பேருந்துகள் கரூரில் இயங்குவதாக குறிப்பிடடுள்ளது அப்பட்டமான பொய் ஆகும்.

உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. மேற்படி ஓடும் 20 சதவீதத்தில் 1 சதவீத போக்குவரத்து தொழிலாளர் ஓட்டுநர், நடத்துனர்கள் மட்டுமே பணி செய்து வருகிறார்கள் மீதமுள்ள அனைத்து பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்காலிக நடத்துனர் மற்றும் ஓட்டுநர்- மினி பஸ் ஓட்டுநர், லாரி டிரைவர், ஆட்டோ டிரைவர் ஆகியோரை வைத்து தற்சமயம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு செயல்படும் ஓட்டுநர், நடத்துனர்கள் உரிய கட்டணம் வசூலிப்பதில்லை, உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் மக்களை அலைக்கழிக்கின்றனர். மேலும் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் சீருடை அணியாமல், கலர் கலராக சட்டை போடுவதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அவர்கள் உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தருவதில்லை இதனால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் 08.01.2018 -ல் LPF, CITU, AITUC, INTUC, TTSF, தே.மு. தொ. சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டங்களில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போராட்டம் குறித்து பேசுகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் உறுதுணையாக நிற்பதை பெருமையாக கருதுவதாகவும், நோட்டீஸ் விநியோகித்த தோழர்களை கட்டி அரவணைத்து கைகுலுக்கி தோழர்களை உற்சாகப்படுத்தி உங்களின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு : 97913 01097.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க