privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!

கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!

-

ஜ் பயண மானியத்தை இந்த ஆண்டு முதல் இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது மோடி அரசு. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இந்த அறிவிப்பை கடந்த ஜனவரி 16 அன்று வெளியிட்டார்.

மேலும், இந்தத் தொகையை சிறுபான்மையினரின் கல்விக்காக, குறிப்பாக பெண்களின் கல்விக்காக மோடி அரசு செலவளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மோடி அரசு இந்த நடவடிக்கையின் மூலம், சிறுபான்மையினரை ஆற்றுப்படுத்தும் வேலைகளில் இறங்காமல், அவர்களின் கவுரவமான வாழ்வுக்கு வழிவகை செய்து கொடுத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஹஜ் மானியத்தை 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைத்து மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நக்வி கூறியுள்ளார்.

முசுலீம்களை ஆற்றுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் ஹஜ் மானியத்தின் உண்மையான இலட்சணம் என்ன?

இந்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணமாக வைத்துக் கொண்டு, ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகையை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருகிறது. கடந்த 2012-2013 ஆம் நிதியாண்டு சுமார் 837 கோடியாக இருந்த மானியத் தொகை, அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.680, ரூ.577, ரூ.530 கோடியாக குறைக்கப்பட்டு கடைசியாக கடந்த 2016-2017-ம் நிதியாண்டு ரூ.450 கோடியாக சுருக்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,36,000 பேர் ஹஜ் பயணம் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு நபருக்கு சுமார் ரூ.34,000 – ரூ. 35,000 வரை மட்டுமே மானியத்தொகையாகக் கொடுக்கிறது இந்திய அரசு. ஹஜ் பயணம் செய்ய விரும்புவோர் முதலில் ஹஜ் கமிட்டியில் தனது பெயரை பதிவு செய்துவிட்டு, ரூ.2,19,000-ஐ அங்கு செலுத்த வேண்டும். இத்தொகையுடன் மானியத் தொகையும் சேர்க்கப்பட்டு அவர்களது பயணத்திற்கும், தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்துதரப்படும். இதுதான் ஹஜ் பயணத்திற்கான நடைமுறை.

இந்தியா முழுவதும் பெரும்பான்மை ஹஜ் பயண நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு, அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தையே ஏற்பாடு செய்கிறது ஹஜ் கமிட்டி. புனிதப் பயணக் காலகட்டங்களில் அதிகமான மக்கள் பயணம் செய்வதால், வானூர்தி பயணச்சீட்டின் விலை மிக அதிகமாகவே இருக்கும். இச்சூழலில் ஹஜ் பயணிகள் கொடுக்கும் தொகையான ரூ.2,19,000-இன் பெரும்பங்கும் அரசு கொடுத்துவரும் மானியத் தொகையும், ஏர் இந்தியா நிறுவனத்தின் வழியாக மீண்டும் அரசாங்கத்தின் கல்லாவிற்கே போய்ச் சேருகிறது.

ஒருவேளை ஒரு ஹஜ் பயணி, அரசின் இந்த ‘மானியத்தின்’ வழியாக சில மாதங்களுக்கு முன்னாலேயே விமானத்தில் முன் பதிவு செய்தால், ஹஜ் கமிட்டியிடம் அவர்கள் செலுத்தும் தொகையை விட குறைவான செலவிலேயே பயணம் மேற்கொண்டுவிடலாம். ஆகவே இதுவரை முசுலீம்களுக்கு இந்திய அரசு வழங்கி வந்த ’மானியம்’ என்பது வெறும் வெளித்தோற்றமே.

எனவே, இதற்கு முன்னால் ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியம் என்ற பெயரில் வீழ்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாழ வைத்தது இந்திய அரசு. இந்த மானிய இரத்து அறிவிப்பின் காரணமாக, இனி ஹஜ் பயணத்தின் மூலம், ஏர் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதி நிறுத்தப்படும். ஏர் இந்தியாவை நட்டக் கணக்கு காட்டி அடிமாட்டு விலைக்கு அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் மத்திய மோடி அரசிற்கு அது பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.

ஆனால், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பெயரளவிலான மானியங்களையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அள்ளி வீசப்படும் சில்லறைகளாக சித்தரிக்கின்றன, இந்துத்துவக் கும்பல்களும், அவற்றிற்கு சொம்பு தூக்கும் ஊடகங்களும். உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பார்ப்பனக் கும்பலின் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றன. உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கப்படும் வரிப்பணத்தில்தான் கும்பமேளாக்களுக்கு மானியப் பிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அலகாபாத் கும்பமேளாவிற்கு மட்டும் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு சுமார் ரூ.1150 கோடி செலவிட்டுள்ளது. நாசிக் கும்பமேளாவிற்கு மராட்டிய அரசு ரூ.2,500 கோடி செலவிட்டுள்ளது. இமயமலையிலிருந்து திபெத்திற்குச் செல்லும் ’கைலாஸ் மானசரோவர் யாத்திரைக்கு’ம் பெரும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு செலவளிக்கிறது. இந்த யாத்திரைக்கு தனது மாநிலத்தில்; இருந்து செல்லும் நபர்களுக்கு ரூ.50,000-ஐ  அள்ளி வழங்கியது அன்றைய உத்திரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் அரசு. அதனைத் தொடர்ந்து வந்த யோகி ஆதித்தியநாத்தின் அரசு அதனை ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது.

அதே போல லடாக்கில் சிந்து தரிசனத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தலா ரூ,10,000 மானியம் தந்தது ஆதித்யநாத் அரசு. இதே போல சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களும், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு தங்கள் மாநிலத்தில் இருந்து செல்பவர்களுக்கு மானியங்கள் அளித்து வருகின்றன.

மேலும் ஒவ்வொரு ஆண்டும், அமர்நாத் யாத்திரைக்கும், நவராத்திரி மற்றும் விநாயகர் சதுர்த்தியின் போது நாசமாக்கப்படும் நீர்நிலைகளை சீர் செய்வதற்கு மத்திய அரசால் செலவளிக்கப்படும் தொகை ஏராளம். ஆந்திரா, ஹரியானா, உத்திரகாண்ட் என ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலம் தழுவிய இந்துப் பண்டிகைகளுக்கு செலவிடும் தொகையும், புதியதாக கோவில்கள் கட்டவும், பழைய கோவில்களை சீர் செய்யவும் செலவிடும் தொகை ஏராளம்.

உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி, பார்ப்பனப் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மான்யம் இல்லையாம். ஆனால் ஹஜ்ஜிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் தொகை மட்டும் மானியமாம். இப்போது அதை இரத்து செய்திருக்கிறதாம் இந்த அரசு. இதற்குப் பெயர் தான் ’இந்து’ய அரசு.

நம்மைப் பொறுத்த வரை ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி செயல்பட வேண்டும்? அரசின் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில் மதங்களுக்கும், அவற்றின் பண்டிகைகளுக்கும் எந்த தொடர்பும இருக்க கூடாது. ஹஜ் யாத்திரைக்கும் மட்டுமல்ல, பல்வேறு பார்ப்பன பண்டிகைகளுக்கும் கொடுக்கப்படும் மானியங்களை ரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு மத பண்டிகைக்கும் அரசு எந்தச் செலவையும் செய்யக் கூடாது.

அதை விடுத்து ஹஜ் யாத்திரை மானியத்திற்கு நாமம், சபரி மலை, கும்பமேளா யாத்திரை, திருப்பதி யாத்திரைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறவிக்கும் பாசிச நடவடிக்கையே என்றி வேறு அல்ல!

மேலும் :
Centre Cancels Haj Subsidy. But Who Was It Really For, Anyway?